பிரபல சுற்றுலாத்தலமான.. கஜுராகோவில் 100% தடுப்பூசி.. ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதம்!
போபால்: மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள கஜுராகோவில் 100 சதவீத தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கஜுராகோ யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.
சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுராகோ கோவில்கள் கட்டிட கலையும், சிற்பங்களும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும்.
இதனால் உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் கஜுராகோ எப்போதும் பிஸியாகவே இருக்கும். ஆனால் இந்த கொடிய கொரோனாவால் தற்போது கஜுராகோ களையிழந்து கிடக்கிறது.

அனைவருக்கும் தடுப்பூசி
சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் அவர்களை நம்பி இருக்கும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கஜுராகோ நகரில் 8 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விழிப்புணர்வு
கொரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மாநிலத்தின் பின்தங்கிய மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுராகோ மக்களிடம் தொடர்ச்சியான விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டன. தற்போது இதற்கு வெற்றி கிடைத்துள்ளது என்று சிவராஜ் சிங் சவுகான் கூறியுளளார். கஜுராகோவில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 13,659 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சதர்பூர் கலெக்டர் ஷிலேந்திர சிங் தெரிவித்தார்.

கவுரவிக்கப்பட்டனர்
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்காற்றும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய தன்னார்வலர்கள் கவுரவிக்கப்பட்டனர் என்று ஷிலேந்திர சிங் கூறினார். மத்திய பிரதேசத்தில் இதுவரை 2,77,07,815 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

உள்நாட்டு சுற்றுலா பயணிகள்
இது தொடர்பாக கஜுராஹோ பயண முகவரான அஜய் காஷ்யப் என்பவர் கூறுகையில், ' கொரோனா தொற்று காரணமாக கஜுராஹோவில் உள்ள பெரிய மற்றும் சிறிய ஹோட்டல்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டன. இப்போது 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட நகரமாக இருப்பதால், வரும் நாட்களில் சில சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கலாம்' என்று கூறினார். இரண்டாவது அலை தணிந்ததிலிருந்து உள்நாட்டு பயணிகள் கோயில் நகரத்திற்கு வருகை தரத் தொடங்கியுள்ளனர். ஆனாலும் பெரும்பாலான மாநிலங்களில் பயண கட்டுப்பாடுகள் தொடர்வதால் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருவதற்கு சில மாதங்கள் ஆகும்' என்று அஜய் காஷ்யப் கூறினார்.












Click it and Unblock the Notifications