‘கை’யால் நெரிபட்டு மரணித்தது அரசியல் நெறி மட்டுமல்ல.. காங்கிரஸ் மீது ஆ.ராசா அட்டாக்!
சென்னை: திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேசமயம், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப்பெரும்பான்மை இல்லாததால் மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோரியுள்ளது.

திமுக கூட்டணியில் 28 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி மயிலாடுதுறை, மேலூர், விளவங்கோடு, குளச்சல், கிள்ளியூர் ஆகிய 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆட்சியமைக்க ஆதரவு கோரி தவெக தலைவர் விஜய் காங்கிரஸ் தலைமையிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது.
புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இருக்கும் நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்றும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் மதவாத சக்திகளுடன் ஒருபோதும் கூட்டணி வைக்கக்கூடாது என்ற நிபந்தனையையும் விதித்துள்ளது.
தவெகவுடன் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு, ஆட்சியில் பங்கு உண்டு என்று தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே தெரிவித்திருந்தபடியே தற்போது காங்கிரஸுக்கு ஒரு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற பெண் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலுக்குப் பிறகு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மீது திமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். திமுக உடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுதொடர்பாக திமுக துணைப் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான ஆ. ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
ஈரம் காயாத
'கை'யால்
நெரிபட்டு மரணித்தது
'அரசியல் நெறி' மட்டுமல்ல;
அவசியமான
'அடிப்படை நாகரீக'மும் தான்!
வாழ்க ஜனநாயகம்!!" எனத் தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications