உ.பி.: ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 3 கல்லூரி மாணவர்கள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் 23 வயது ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் பல்வாகரி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த சனிக்கிழமை குழந்தைகளை பள்ளியில் சேர்க்குமாறு வீடு வீடாக சென்று பெற்றோரிடம் கூறினார். அப்போது கல்லூரி மாணவரான மோஹித் என்பவர் பின்புறமாக வந்து ஆசிரியையின் வாயை பொத்தி அவரை யாரும் இல்லாத வீட்டுக்கு இழுத்துச் சென்றார்.
அங்கு சென்றதும் அவர் தனது நண்பர்களான விபின் மற்றும் சொராபுக்கு போன் செய்து அவர்களை அந்த வீட்டுக்கு வரவழைத்தார். அவர்கள் வந்ததும் மோஹித் ஆசிரியையை பாலியல் பலாத்காரம் செய்தார். அதை விபின் மற்றும் சொராப் வீடியோ எடுத்தனர். இந்த விவகாரம் குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர்கள் ஆசிரியையை மிரட்டினர்.
அவர் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 மாணவர்களையும் கைது செய்தனர்.
முன்னதாக முசாபர்நகரில் 20 வயது பெண்ணை 8 பேர் பாலியல் பலத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். உத்தர பிரதேசத்தில் சிறுமிகள், பெண்கள் அதிக அளவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.