குஜராத்: புதிய அரசின் அமைச்சரவையில் எல்லாமே புதுமுகம்.. மாஜிக்களுக்கு இடமில்லை.. பின்னணி இதுதான்!
காந்தி நகர்: குஜராத் முதல்வராக இருந்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் ரூபானி கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரது ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
பா.ஜ.க டெல்லி தலைமையின் நம்பிக்கையை பெற்று இருந்தாலும் விஜய் ரூபானி மக்களிடத்தில் நெருக்கமாக இல்லை. அவரை அடுத்த தேர்தலில் தக்க வைத்தால் மக்களிடம் செல்வாக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்று கருதியே பா.ஜ..க விஜய் ரூபானியை பதவி விலக வைத்ததாக கூறப்படுகிறது.

பரபரப்பு விவாதம்
இதனை தொடர்ந்து குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்? என்ற விவாதம் பரபரப்பாக நடந்தது. குஜராத் துணை முதல்வர் நிதின் படேல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, லட்சத்தீவில் குட்டையை குழப்பிய அதன் நிர்வாகி பிரபுல் படேல், மாநில அமைச்சர் ஆர்.சி.பால்டு மற்றும் குஜராத் பா.ஜ.க தலைவர் சி.ஆர்.பாடில் ஆகியோரில் ஒருவர்தான் முதல்வராக வருவார் என்று தகவல் பரவின.

பூபேந்திர படேல்
ஆனால் யாரும் எதிர்பார்க்காதவிதமாக, ஆச்சரியம் அளிக்கும்விதமாக குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆர்எஸ்எஸ் அமைப்போடு நெருங்கிய தொடர்புடைய பூபேந்திர படேல் குஜராத் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் குஜராத்தின் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றுக் கொணடது.

எல்லாம் புதுமுகம்
மொத்தம் 24 அமைச்சர்கள் பதவியேற்றனர். இதில்10 பேர் கேபினட் அந்தஸ்து பெற்ற அமைச்சர்கள். முதல்வர் பூபேந்திர படேலுடன், புதிய அமைச்சரவையில் 25 உறுப்பினர்கள் உள்ளனர். மொத்தம் ஊழல் 24 அமைச்சர்களில் பெரும்பாலானோர் புதுமுகங்ககள் ஆவார்கள். இதில் ஒரு சிலருக்கு மட்டுமே அமைச்சரவை அனுபவம் உள்ளது. முன்னாள் முதல்வர் ஆனந்திபென் அரசில் அமைச்சராக இருந்த ராஜேந்திர திரிவேதி, நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அப்போது பணியாற்றிய கிரிட்சின் ராணா மற்றும் ராகவ்ஜி பட்டேல் ஆகிய 3 பேர் மட்டுமே அனுபவம் வாய்ந்தவர்கள்.

மோடி வாழ்த்து
முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி அமைச்சரவையில் பணியாற்றிய அமைச்சர்களில் ஒருவருக்குக் கூட தற்போது வாய்ப்பு அளிக்கப்படவில்லை. குஜராத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு புதுமுகங்களுக்கு பா.ஜ.க வாய்ப்பளித்துள்ளதாக கூறப்படுகிறது. குஜராத் புதிய அமைச்சரவைக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ' குஜராத் அரசில் அமைச்சர்களாகப் பதவியேற்ற அனைத்து கட்சி சகாக்களுக்கும் வாழ்த்துக்கள். இவர்கள் பொது சேவைக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து, கட்சியின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலை பரப்பிய மிகச்சிறந்த காரியகர்த்தாக்கள். இனிவரும் காலங்களில் மக்களுக்கு பலனளிக்கும் பணிக்கான எனது வாழ்த்துக்கள்' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications