சர்க்கரை நோயாளிகள் ஜாக்கிரதை.. ஆஆ.. பல் எடுக்க சென்ற தொழிலதிபர் பரிதாப பலி.. இவ்வளவு அலட்சியமா?
புவனேஸ்வர்: ஒடிசாவில் சொத்தை பல்லை எடுக்கச் சென்ற தொழிலதிபர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதும், அதை உதாசீனப்படுத்தி பல் எடுத்ததால் ரத்தம் அதிக அளவில் வெளியேறி அவர் உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அது மட்டுமல்லாமல், இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 'பல் பிரச்சினை தானே' என நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் விஷயம், ஒரு உயிரையே பறித்திருக்கிறது.

உயிரையே பறிக்கும் அலட்சியம்..
சர்க்கரை நோயின் தலைநகரமே இந்தியா எனும் கூறும் அளவுக்கு நம் நாட்டில் நீரிழிவு நோயாளிகள் பெருகிவிட்டனர். குறிப்பாக, தமிழகத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். தமிழகத்தில் 10-இல் இரண்டு நபர் சர்க்கரை நோயாளிகள் என ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. பொதுவாக, சர்க்கரை நோய் வந்துவிட்டால் பல விஷயங்களில் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக, காயங்கள் ஏற்படாலும், அப்படி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அவர்கள் அணுக வேண்டும். ஏனெனில், சர்க்கரை நோயாளிகளுக்கு காயம் சீக்கிரம் ஆறாது. அதனால்தான், கண் அறுவை சிகிச்சை, பல் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்துக்கும், சர்க்கரை நோய் இருக்கிறதா என மருத்துவர்கள் உறுதிப்படுத்திக் கொள்வர். எனவே, ஏதேனும் பிரச்னைக்காக மருத்துவரிடம் செல்லும் முன்பு அவர் நல்ல மருத்துவர் தானா என விசாரித்து செல்ல வேண்டும். ஆனால், நம்மில் பலர் சர்க்கரை நோயை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வது கிடையாது. அவர்களுக்கான ஒரு எச்சரிக்கை சம்பவம்தான் ஒடிசாவில் நடந்துள்ளது.

பல் வலி..
ஒடிசா மாநிலம் மல்காங்கிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தபான் பால் (45). தொழிலதிபரான இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்துள்ளது. இந்நிலையில், அவருக்கு கடந்த சில வாரங்களாக பல் வலி இருந்துள்ளது. பிறகு பார்த்துக்கொள்ளலாம் என அவரும் அலட்சியமாக இருந்துவிட்டார். இந்நிலையில், நேற்று காலை வலி அதிகமானதால் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பல் கிளீனிக்குக்கு தபான் பால் சென்றிருக்கிறார்.

சர்க்கரை சோதனை செய்யவில்லை..
அப்போது அவரது பல்லை சோதித்த மருத்துவர், அவரது பல் சொத்தை பிடித்துள்ளதாகவும், உடனே எடுக்க வேண்டும் அவர் கூறியுள்ளார். ஆனால் தபான் பாலுக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என அவரும் கேட்கவில்லை. தபான் பாலும் இதனை தெரிவிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக, அவருக்கு வாய் மரத்துப்போகிற ஊசியை செலுத்தி, சிறிது நேரத்தில் மருத்துவர் பல்லை எடுத்துள்ளார். ஆனால், பல நிமிடங்கள் ஆகியும் அவருக்கு ரத்தம் வெளியேறுவது நிற்கவில்லை.

மரணம் - 'திடுக்' தகவல்
ஒருகட்டத்துக்கு மேல் ரத்தம் அதிக அளவில் வெளியேறத் தொடங்கியதால், பயந்துபோன மருத்துவர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். ஆனால், ஆம்புலன்ஸ் வருவதற்குள்ளாகவே தபால் பால் அதிக ரத்தம் வெளியேறி மயங்கி போய் இறந்துவிட்டார். இந்த தகவல் தெரியவந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் போலீஸுக்கு அவர்கள் புகார் அளித்தனர். இதன்பேரில் அங்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தியதில், ரவீந்திரநாத் பிஸ்வாஸ் என்பவர்தான் பல் மருத்துவர் என்பது தெரியவந்தது. ஆனால், அவர் ஊரில் இல்லாததால் அவரது மனைவி பசந்தி (37), தொழிலதிபர் தபான் பாலுக்கு பல்லை எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார் பல் மருத்துவர் ரவீந்திரநாத் மற்றும் அவரது மனைவியை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications