ஓமிக்ரான் பரவலைத் தடுக்க பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் - கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
ஓமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், அரியானா மாநிலங்களில் இரவுநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் 7 நகரங்களில் இரவு நேரங்களில் நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்: ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மத்திய பிரதேசம், ஹரியானாவில் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. குஜராத் மாநிலத்தில் 7 நகரங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் ஓமிக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. ஆனாலும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.
ஓமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை முதல் மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் நடமாட தடை
மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்ட உள்ளது.குஜராத் மாநிலத்தின் அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் உள்ளிட்ட 7 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வருகிறது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இரவு லாக்டவுன் கட்டுப்பாடுகள்
ஹரியானா அரசு வெள்ளிக்கிழமை இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது. பொது இடங்கள் மற்றும் நிகழ்வுகளில் 200க்கும் மேற்பட்டோர் கூடுவது மறு அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மக்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்று கூறினார். வெள்ளிக்கிழமை முதல் மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை பொதுமக்கள் நடமாட்டம் கண்டிப்பாக தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொண்டாட்டங்களுக்குத் தடை
ஒடிசா மாநிலத்தில், ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கையாக, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில தலைமை செயலாளர் எஸ்.சி.மஹாபத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 25 முதல் ஜனவரி மாதம் 2 ஆம் தேதி வரை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, தேவாலயங்களில், அதிகபட்சம் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மாநிலம் முழுவதும், கிளப்புகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றில், புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்
திருமணத்தைத் தவிர வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை வேறு எந்தக் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை. சமூகக் கூட்டங்கள், பேரணிகள், இசைக் குழுக்கள், நடனங்கள் மற்றும் பிற கலாச்சார நிகழ்ச்சிகள் எதுவும் அனுமதிக்கப்படாது. கொரோனா நெறிமுறைகளுடன் இறுதிச் சடங்குகள் நிகழ்வுகள் நடைபெற அனுமதி அளிக்கப்படுகிறது. ஒடிசா மாநிலத்தில் இதுவரை 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

குறைவான மக்களுக்கு அனுமதி
மகராஷ்டிராவில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உள்ளது. கிறிஸ்தவ ஆலயங்களில் இரவு நேர பிரார்த்தனைகளில் 50 சதவீதம் பேர் மட்டும் பங்கு பெறவேண்டும். ஆலயங்களுக்கு வெளியில் கடைகள் போடக்கூடாது. அதிக மக்கள் கூடும் வகையில் பேரணி, ஊர்வலங்கள், வானவேடிக்கை போன்ற நிகழ்ச்சிகளை நடத்த கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு விதித்து உள்ளது.












Click it and Unblock the Notifications