ஜம்மு காஷ்மீரில் இறுதி நிலையில் தீவிரவாதம்.. காரணம் மத்திய அரசின் முயற்சிதான்! மோடி பெருமிதம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தனது மூச்சை இழுத்துக்கொண்டு இருக்கிறது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தல் பாஜகவை கடும் அப்செட் ஆக்கியிருக்கிறது. காரணம், எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததுதான். தொகுதி குறைவாக கிடைத்தால் கூட ஓகேதான், ஆனால் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு தொகுதி கண்டிப்பாக வேண்டும் என்று கட்சி எதிர்பார்த்திருந்தது. ஆனால், இந்த எதிர்பார்ப்பில், ஒரு லோடு மண் அள்ளி போட்டது தேர்தல் ரிசல்ட். இப்படி இருக்கையில் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று தீவிரமாக பணியாற்றி வருகிறது.

கடந்த 2019ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, நாடு முழுவதும் போராட்டத்தை தூண்டியது. அதேநேரம் கடந்த 2019 ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அம்மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் முடிந்துவிட்டதால், உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
எதிர்க்கட்சிகள் என்ன வலியுறுத்தினாலும், அசைந்து கொடுக்காமல் இருந்த மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் தேர்தல் தொடர்பாக அதிரடியாக உத்தரவு போட்டது. அதாவது 2024 செப்டம்பர் மாதத்திற்கு ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. எனவே வேறு வழியின்றி மத்திய அரசு தேர்தலை நோக்கி நகர்ந்திருக்கிறது.
90 சட்டசபை தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது முதல் கட்ட தேர்தல் செப்.18ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் செப்.25ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு அக்டோபர் மாதம் 1ம் தேதி நடக்கிறது. மூன்று கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே வெளியாகின்றன. எனவே தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடியை பாஜக களமிறக்கியுள்ளது. டோடா மாவட்டத்தில் இன்று நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றிருந்த மோடி சிறப்புரையாற்றியிருந்தார். அவர் பேசுகையில், "எங்களுடன் ஜம்மு காஷ்மீர் மக்களான நீங்களும் இணைந்து, இப்பகுதியை மிகவும் பாதுகாப்பான மற்றும் செழிப்பான இடமாக மாற்றுவோம்.
சுதந்திரத்திற்கு பிறகு, ஜம்மு காஷ்மீரை வெளிநாட்டு சக்திகள் டார்கெட் செய்திருக்கின்றன. போதாத குறைக்கு குடும்ப அரசியல் இந்த பகுதியை ஒன்றும் இல்லாததாக மாற்றியிருக்கிறது. அரசியல் சக்திகள் அடுத்தடுத்து தங்கள் வம்சத்தை முன்னிருத்தியதன் மூலம் ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியை பாதித்திருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வருவதன் மூலம் இந்த பிரச்னை தீர்க்கப்படும். கடந்த 2014ம் ஆண்டிலிருந்து நாங்கள் இளம் தலைமுறையை கொண்டு புதிய தலைமையை உருவாக்கி வருகிறோம்.
நாங்கள் எடுத்த நடவடிக்கை மூலம், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம் தற்போது இறுதி கட்டத்தில் இருக்கிறது. அது தனது இறுதி மூச்சை இழுத்துக்கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications