For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கையில் தமிழ், சிங்களத்துக்கு குறையும் மவுசு - சீன மொழி ஆதிக்கம் ஓங்குகிறதா?

By BBC News தமிழ்
|

இலங்கையில் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யி மேற்கொண்ட அரசுமுறை பயணத்தின்போது அவர் நாட்டின் அதிபர், பிரதமருடன் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் தேசிய ஆட்சி மொழிகளான சிங்களம், தமிழ் ஆகியவற்றில் எந்த குறிப்போ விளம்பங்களோ இடம்பெறாதது பலரது புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் இலங்கையில் சீன மொழியின் ஆதிக்கம் இலங்கை மண்ணில் ஓங்குகிறதா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொண்டு, பல்வேறு சந்திப்புக்களை நடத்திய பிறகு உடனடியாக அவரது தாயகத்துக்கு திரும்பியிருக்கிறார்.

இந்த நிலையில், சீனாவின் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரின் சில திட்டங்களை சீன வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் ( ஜனவரி 9) திறந்து வைத்தார்.

உடற்பயிற்சி நடைபாதை மற்றும் சிறு படகு பிரிவு ஆகியன சீன வெளிவிவகார அமைச்சரினால் நேற்று (09) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட மேலும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த உடற்பயிற்சி நடைபாதை மற்றும் சிறு படகு பிரிவு ஆகியன திறந்து வைக்கும் நிகழ்வின் போது, காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை குறித்து தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது.

இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில், ஆங்கிலம் மற்றும் சீன மொழி மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தன.

இலங்கையின் அரச கரும மொழியாக அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சிங்களம் மற்றும் தமிழ் ஆகியன எந்தவொரு இடத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.

அரச நிகழ்வொன்றில், அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அரச கரும மொழிகளுக்கு முன்னுரிமை வழங்காது, அரசியலமைப்பில் இல்லாத ஒரு மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளமை பாரிய சர்ச்சைக்குரிய விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த சர்ச்சை தொடர்பில் முன்னாள் அரச கரும மொழிகள் அமைச்சரும், இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

மனோ கணேசன்
BBC
மனோ கணேசன்

''எங்கே எங்கள் இரண்டு ஆட்சி தேசிய மொழிகள்? அல்லது துறைமுக நகர் முழுமையாக சீனாவின் சொத்தா? எமது 65 நட்புறவை இப்படிதான் கொண்டாடுவதா? யாருக்கு பொறுப்பு, அக்கறை..? ஒருவருக்கும் வெட்கமில்லை..! தேசத்திடம் மன்னிப்பு கோருங்கள்..! என மனோ கணேசன் தனது டுவிட்டர் பதில் கூறியுள்ளார்.

கொழும்பிலுள்ள சீன தூதரகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோரை டெக் செய்து, இந்த பதிவை மனோ கணேசன் வெளியிட்டுள்ளார்;.

இந்த நிலையில், கொழும்பிலுள்ள சீன தூதரகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரே, தேசத்திடம் மன்னிப்பு கோர வேண்டும் என மனோ கணேசன், பிபிசி தமிழிடம் கூறினார்.

தொடரும் தமிழ் மொழி புறக்கணிப்புடன், இன்று சிங்களமும் புறக்கணிப்பு

இலங்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பானது தொடர்ச்சியாகவே முடிவின்றி இடம்பெறும் ஒன்றாக காணப்படுகின்றது.

அரசியலமைப்பில் தமிழ் மொழி கட்டாயப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அரச நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வீதி சமிக்ஞைகள், பெயர் பலகைகள் என அனைத்து இடங்களிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றது.

அவ்வாறு தமிழ் மொழி காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அநேகமான இடங்களில் அவற்றில் நிச்சயம் தமிழ் பிழைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில், இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் தமிழ் மொழி கடந்த காலங்களிலும் புறக்கணிக்கப்பட்டிருந்தது.

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ள போதிலும், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்திற்கு சீன மொழி உள்வாங்கப்பட்ட சம்பவங்களும் கடந்த காலங்களில் பதிவாகியிருந்தன.

சீனாவினால் நிர்மாணிக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் மற்றும் சீனாவின் உதவியில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் நிர்மாணிக்கப்பட்ட பெயர் பலகைகளில் சீன மொழி உள்வாங்கப்பட்டு, தமிழ் மொழி கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டிருந்தன.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஒரு உயரீய இடத்திலேயே, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து, எழுந்த சர்ச்சையை அடுத்து, அந்த பெயர் பலகை பின்னரான காலத்தில் மாற்றப்பட்டது.

இதேவேளை, அநுராதபுரத்தில் கடந்த ஆக்டோபர் மாதம் 10ம் தேதி ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட சாலியபுர கஜபா படையணி கிரிக்கெட் மைதானத்தின் பெயர் பலகையிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.

நாட்டின் முதல் பிரஜையின் பெயரில் உருவாக்கப்பட்ட மைதானத்திலேயே, தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமையும், அன்று பேசுப் பொருளாக அமைந்திருந்தது.

இவ்வாறு இலங்கையில் தமிழ் மொழி தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வந்த பின்னணியில், நேற்றைய தினம் (09) நடத்தப்பட்ட நிகழ்வில் சிங்கள மொழியும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் படிப்படியாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிங்கள மொழியும் புறக்கணிக்கப்பட்டு முழுமையாகவே சீன மொழியின் ஆதிக்கம் உள்வாங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பதில்

அரச நிகழ்வொன்றில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் புறக்கணிக்கப்பட்டிருக்குமானால், அதனை சரி செய்ய வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டளஸ் அழகபெரும பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

அரச மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றமை, பாரிய குறைபாடு எனவும் அவர் கூறினார்.

''இவ்வாறான நிகழ்வுகளில் கட்டாயம் அரச கரும மொழிகள் உள்ளடக்கப்பட வேண்டும். இதனுடன் தொடர்புடையவர்களுக்கு இது குறித்து அறிவிக்கின்றேன்" எனவும் டளஸ் அழகபெரும தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Raise of Chinese domination in Sri lanka. Sri lanka latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X