41 பேரை சுரங்கத்திலிருந்து காப்பாற்றியதற்கு இதுவா மரியாதை? உத்தரகாண்ட் எலி வளை தொழிலாளர்கள் வேதனை
டேராடூன்: உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு ஹீரோவான எலிவளை சுரங்க தொழிலாளர்களை அம்மாநில பாஜக அரசு வஞ்சித்துள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உத்தரகாண்ட் சில்க்யாரா- பர்கோட் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த மாதம் 12-ம் தேதி ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிவு ஏற்பட்டது.

இதில் 41 தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கி கொண்டனர். இதையடுத்து அவர்களுக்கு குழாய் மூலம் உணவு, ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும் அவர்களை பத்திரமாக மீட்கும் பணி தொடங்கியது. வெளிநாட்டு சுரங்க மீட்பு நிபுணர்கள் பணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
சுரங்கத்தில் துளையிட்டு அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்தது. ஆனால் இயந்திரங்கள் கோளாறாகின. இதனால் மீட்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இதையடுத்து டெல்லியில் இருந்து 24 'எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அமெரிக்க இயந்திரம் 47 மீட்டர் துளையிட்டு இருந்த நிலையில் மீதமுள்ள 13 மீட்டர் தொலைவை கை மூலம் எலிவளை சுரங்க தொழிலாளர்கள் துளையிட்டனர். 21 மணி நேரத்தில் 13 மீட்டர் தொலைவு சுரங்கம் தோண்டி இரும்பு குழாய்களை வெற்றிகரமாக பொருத்தினர். இதன்மூலம் சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நவம்பர் 27ம் தேதி மீட்கப்பட்டனர். எலிவளை சுரங்க தொழிலாளர்களால் தான் இந்த 41 தொழிலாளர்களும் பத்திரமாக 15 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் தான் எலி வளை சுரங்க தொழிலாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் காசோலை வழங்க உத்தரகாண்ட் மாநில பாஜக அரசு முடிவு செய்தது. அதன்படி எலி வளை சுரங்க தொழிலாளர்களுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை என்பது வழங்கப்பட்டுள்ளது. இதில் அந்த தொழிலாளர்கள் வருத்தமடைந்துள்ளதோடு அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
அதாவது பாஜக அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தங்களை பார்த்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுபற்றி அவர்கள் தரப்பில் டெல்லி ராக்வெல் என்டர்பிரைசஸஅ நிறுவனத்தின் தலைவர் வக்கீல் ஹசன் கூறியதாவது:
‛‛சுரங்க தொழிலாளர்கள் முதலில் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் இருந்து நேரடியாக காசோலைகளை பெற மறுத்துவிட்டனர். இருப்பினும், அரசு அதிகாரிகளின் தொடர்ச்சியான தலையீட்டாலும் அவர்கள் அளித்த வாக்குறுதியாலும் அந்த காசோலைகளை பெற்றனர். மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் அரசு எங்களை அணுகி உள்ளது. சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உடனடியாக ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.
ஆனால் உயிரை பணயம் வைத்து மீட்ட எங்களுக்கு ரூ.50,000 மட்டுமே வழங்குகிறார்கள். இந்த வெகுமதி எங்களுக்கு வேண்டாம் என்று நாங்கள் கூறினோம். அனால் அவர்கள் கட்டாயப்படுத்தி வழங்கி உள்ளனர். இத்தகைய வெகுமதி என்பது சுரங்க தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு இருக்க வேண்டும். ஏனென்றால் ரிஸ்க் எடுத்து ஒவ்வொருவரும் பணி செய்தனர். நல்ல தொகை வெகுமதியாக வந்தால் சுரங்க தொழிலாளர்கள் தங்களின் ஆயுள் முழுவதும் சுரங்கம் தோண்டும் பணியை செய்ய வேண்டிய சூழல் இருக்காது. அதோடு அவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
இந்த கோரிக்கையை வைக்க எங்களிடம் நியாயம் உள்ளது. ஏனென்றால் நாங்கள் இந்தியாவையே பெருமைப்படுத்தி உள்ளோம். அதோடு சுரங்க மீட்பு பணியில் இது மைல்கல்லாக உள்ளது. தற்போது தொழிலாளர்கள் காசோலைகளை பெற்று இருந்தாலும் கூட அதனை பணமாக மாற்றப்போவது இல்லை. அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை காசோலைகள் அப்படியே இருக்கும்'' என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் இந்த விஷயத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. அதாவது சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்ட எலிவளை சுரங்க தொழிலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் வெகுமதியாக வழங்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனை சுரங்க தொழிலாளர்களே தெரிவித்துள்ளனர். இதனால் மாநில அரசு உடனே வெகுமதியை உயர்த்தி வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களை புறக்கணிப்பது போல் ஆகிவிடும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
