For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளானுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

By BBC News தமிழ்
|

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் உள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.

பேரறிவாளன் 32 ஆண்டுகளாக இந்த வழக்கில் சிறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள் எல். நாகேஸ்வரராவ், பி.ஆர். கவை அடங்கிய அமர்வு, அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. பேரறிவாளனின் 32 ஆண்டுகால சிறைவாசத்தில் அவருக்கு நீதிமன்றம் பிணை வழங்குவது இதுவே முதல் முறை.

"மத்திய அரசு எதிர்ப்புத் தெரிவித்தாலும், மனுதாரர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு அவருக்கு பிணை வழங்குகிறோம்" என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

விசாரணை நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அவர் பிணையில் விடுவிக்கப்படுவார் என்றும் ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்திலும் அவர் ஜோலார்பேட்டை காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் 7 பேரில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தூக்கு தண்டனை 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நடராஜ் ஆஜரானார். பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை 2014ல் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் ஏற்கனவே அவர் ஒரு சலுகையை அனுபவித்துவிட்டாா் எனச் சுட்டிக்காட்டினார்.

அடுத்ததாக, இந்த வழக்கில் தண்டனைக் குறைப்புச் செய்யும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை விவாதிக்கும்போது, மத்திய அரசால் செயல்படுத்தப்படும் சட்டங்களின் கீழ் அவர் தண்டிக்கப்பட்டிருப்பதால், அவருக்கு தண்டனை குறைப்பு செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என நடராஜ் வாதிட்டார்.

SC gives bail for Perarivalan after 30 years

அவர் எந்தெந்தச் சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என நீதிமன்றம் கேள்வியெழுப்பியதும், "பேரறிவாளன் இந்திய தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டம், வெளிநாட்டவருக்கான சட்டம் ஆகியவற்றின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது என்பதையும் மனதில் கொள்ளவேண்டும்" என கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறினார்.

இந்த விவகாரங்கள் பிறகு விவாதிக்கலாம். அவர் 32 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவருக்கு ஏன் பிணை வழங்கக்கூடாது என நீதிமன்றம் கேளிவியெழுப்பியது.

"302வது பிரிவின் கீழ் செய்யப்படும் குற்றம் பொது ஒழுங்கு தொடர்பானது. இது மாநில அரசின் கீழ் வரக்கூடிய சட்டம்" என தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ராகேஷ் த்விவேதி வாதிட்டார்.

பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், "302வது பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆளுநர்கள் பல முறை முடிவெடுத்திருக்கிறார்கள்" என்பதை சுட்டிக்காட்டினார்.

பேரறிவாளனுக்கு மூன்று முறை சிறை விடுப்பு அளிக்கப்பட்டிருந்தும் அவர் எவ்வித தவறுகளும் செய்யவில்லை என்பதையும் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார். மேலும் தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தது குறித்தும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தி கொலைவழக்கைச் சுட்டிக்காட்டிய ராகேஷ் த்விவேதி, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தண்டனை குறைப்புப் பெற்று 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார். ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளை சிறையில் கழித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

முடிவில், பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Supreme Court gives bail for Perarivalan after 30 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X