For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜிவ் வழக்கு: ஆயுள் வரை ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது:தலைமை நீதிபதி தத்து

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 தமிழரை விடுதலை செய்வதில் உரிய விதிகளை பின்பற்றாமல் தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட்டது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதத்தை முன்வைத்தது. அதே நேரத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால் ஒருவர் ஆயுள் முழுவதும் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

இதைத் தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மொத்தம் 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து அப்போதைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

SC to hear plea against release of 7 Tamils in Rajiv case

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் இறுதி முடிவை எடுக்க 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. இதற்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையில் நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, பி.சி.கோஷ், ஏ.எம்.சப்ரே, யு.யு.லலித் ஆகியோரை கொண்ட அரசியல்சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை அரசியல்சாசன பெஞ்ச் முன்பு கடந்த 15-ந் தேதி தொடங்கியது. அப்போது அனைத்து மாநிலங்களும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துபூர்வமாக 20-ந் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு..

இதன்படி நேற்று தமிழக அரசின் எழுத்துபூர்வமான வாதத்தை தமிழக அரசு வழக்கறிஞர் யோகேஷ் கன்னா நேற்று தாக்கல் செய்தார்.

அதில், மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட சூழலில் தான் கைதிகளின் விடுதலை பற்றிய முடிவு குறித்து ஆலோசனை செய்யும் வகையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது. மாநில அமைச்சரவையில் முடிவெடுத்து அதனை சட்டசபையிலும் நிறைவேற்றிய பிறகு இந்த முடிவு குறித்து மத்திய அரசிடம் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டது. மத்திய அரசோ தமிழக அரசுக்கு எதுவும் தெரிவிக்காமல் நேரடியாக நீதிமன்றத்தை அணுகியுள்ளது தவறானதாகும். தமிழக அரசின் முடிவை எதிர்த்து ரிட் மனுவாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது தவறான சட்ட நடைமுறை.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 நபர்களும் தடா சட்டத்தின்கீழ் வரும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுத சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட தண்டனை காலத்தையும் சிறையில் கழித்துள்ளனர். இதனால் இவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. அரசியல்சாசன சட்டத்தின் அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு. மத்திய அரசு நீதிமன்றத்துக்கு தவறான தகவல்களை தருகிறது.

குறிப்பிட்ட சம்பவம் நிகழ்ந்தபோது தமிழக அரசே இந்த வழக்கின் மீதான விசாரணையை தாமாகவே முன்வந்து சி.பி.ஐ. வசம் கொடுத்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் மத்திய அரசின் வரம்புக்குள் தான் இந்த விடுதலை விவகாரம் வரும் என்ற மத்திய அரசின்வாதம் முற்றிலும் தவறானது. இந்த வழக்கின் மீதான விசாரணை இந்தியா முழுவதும் பரவலாக செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. பல மாநிலங்களிலும் புலன்விசாரணை தொடர வேண்டியிருந்தது. எனவே இந்த வழக்கின் வசதி கருதித்தான் சி.பி.ஐ. வசம் மாநில அரசு ஒப்படைத்ததே தவிர, இந்த வழக்கின் மீதான முழு அதிகாரத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றிக்கொடுக்கவில்லை. இதனால் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் தான் வருகிறது. குற்றத்தில் தொடர்புடையவர்கள், அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கும் சிறை ஆகியவை தமிழ்நாட்டுடன் தொடர்புடையவை. ஆகையால் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் வாதத்தில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட்டது- மத்திய அரசு

இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் அரசியல்சாசன பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில், ராஜிவ் கொலை வழக்கை சி.பி.ஐ.தான் தொடர்ந்து விசாரித்து வந்தது. ஆகையால் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை; இந்த வழக்கில் குற்றவாளிகளை விடுவிப்பதில் உரிய விதிகளை பின்பற்றாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.

ஆயுள் தண்டனை என்றால்..

அப்போது குறுக்கிட்ட நீதிபதி தத்து, ஆயுள் தண்டனை என்பது ஒருவர் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. அத்துடன் ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு. அப்படியான நிலையில் 7 பேரின் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு எப்படி ரிட் மனுவைத் தாக்கல் செய்ய முடியும்? இப்படி ரிட் மனுவைத் தாக்கல் செய்ய முகாந்திரம் உண்டா? என்பது குறித்து மத்திய அரசு தமது வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று கூறினார். தொடர்ந்து வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.

English summary
The Supreme Court will hear the plea against release of 7 Tamils in Rajiv case on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X