மணிப்பூரில் தனி மாநிலம்: தமிழ்நாடு, மிசோரம் உட்பட 6 மாநிலங்களில் 'குக்கி'கள் நவ.29-ல் போராட்டம்!
இம்பால்: மணிப்பூரில் குக்கி-ஜோ பழங்குடி மக்களுக்கு தனி மாநிலம் அல்லது சுயாட்சி நிர்வாகம் கோரி தமிழ்நாடு, மிசோரம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நவம்பர் 29-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடிகளான குக்கி- ஜோ இன மக்களுக்கும் மைத்தேயி இன மக்களுக்கும் இடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக வன்முறை தொடர்ந்து நீடித்து வருகிறது. குக்கி இனப் பழங்குடிகள் மிக மோசமாக இந்த வன்முறைகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் வன்முறைகளில் சுமார் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இன்னமும் மணிப்பூரில் வன்முறை ஓயவில்லை. இந்த நிலையில் மைத்தேயி இன மக்களுடன் தாங்கள் இணைந்து வாழ முடியாது- தங்களுக்கு தனி மாநிலம் அல்லது சுயாட்சி கவுன்சில் அமைத்து தர வேண்டும் என்பது குக்கி- ஜோ பழங்குடிகளின் கோரிக்கை. இதற்கு மிசோரம் மாநில அரசும் மக்களும் முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூரை இரண்டாக பிரித்து தனி மாநிலம் அல்லது சுயாட்சி நிர்வாகம் கோரும் இந்த கோரிக்கையை முன்வைத்து நவம்பர் 29-ந் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் போராட்டம் நடைபெறும் எனவும் குக்கி- ஜோ பழங்குடிகள் அறிவித்துள்ளனர். மிசோரம், திரிபுரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மணிப்பூரில் இந்தப் போராட்டம் நடைபெற உள்ளது.
மேலும் மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவை மணிப்பூர் பழங்குடி எம்.எல்.ஏக்கள் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த ஜோரம்தங்கா, நாகாலாந்து மாநிலத்தின் நாகா தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என குக்கி- ஜோ பழங்குடிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார். இதேபோல மத்திய அரசுடனுடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர் என்றார் ஜோரம்தங்கா.
மிசோரம் மாநிலத்தில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. மிசோரம் மாநிலத்தின் மிசோ பழங்குடிகளும் மணிப்பூரின் ஜோ அப்பது சோ பழங்குடிகளும் தொப்புள் கொடி உறவு கொண்டவர்கள். இதனால் மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பாஜகவுக்கு எதிராக மிசோரம் கட்சிகள் வரிந்து கட்டி இருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications