இதை பார்த்தா உனக்கு வெறியேறனும்..! 4 வருடம் வாட்ஸ்அப் டிபி மாற்றாமல் "தவமிருந்த" ஸ்ரேயாஷ் ஐயர் அப்பா
கான்பூர்: நவம்பர் 25, 2021 ஷ்ரேயாஸ் ஐயருக்கு மிகவும் சிறப்பான நாள். அன்று அவர் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கான்பூரில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில், முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார் (இன்று சதம் கடந்து விட்டார்). அந்த வகையில், இந்த மும்பை பேட்ஸ்மேனின் கேரியர் மிகச் சிறப்பாக தொடங்கியுள்ளது.
Recommended Video
ஸ்ரேயாஸ் ஐயர் தனது டெஸ்ட் தொப்பியை பிரபல கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கரிடம் பெற்றது மற்றொரு சிறப்பாகும். மேலும் 18 வருடங்களுக்கு பிறகு, அதாவது யுவராஜ் சிங்கிற்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் டெஸ்ட் போட்டியில் அறிமுகமானது என்றால் அது ஸ்ரேயாஸ் ஐயர்தான்.
ஸ்ரேயாஷ் ஐயரின் தந்தை சந்தோஷ் ஐயர், தனது மகன் டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அடியெடுத்து வைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஐபிஎல் ஒரு ஆட்டமா
என்னதான் ஐபிஎல் தொடரில் டெல்லியின் கேப்டனாக இருந்திருக்கலாம். ஆனால் அதெல்லாம் சந்தோஷ் ஐயருக்கு பெரிதாக இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் என்ற ஒரு வீரரின் உண்மையான திறன் வெளிப்படும் போட்டித் தொடரில் இந்தியாவிற்காக தனது மகன் ஆடுவதை அவர் வாழ்நாள் பெருமையாக நினைக்கிறார்.

உண்மையான கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என்றும், தனது மகன் நாட்டுக்காக வெள்ளை நிற ஜெர்சியில் விளையாடுவதை பார்க்க விரும்பி தவம் இருந்ததாகவும் கூறுகிறார் சந்தோஷ் ஐயர். மகன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடுவதைப் பார்த்து ஸ்ரேயாஸின் அம்மாவும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சந்தோஷ் கூறினார்.

கனவு நனவாகிவிட்டது
மிட்-டே ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த சந்தோஷ், 'டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட். எனது மகன், இந்தியாவிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். இன்று எனது கனவு நனவாகியுள்ளது. நானும் என் மனைவியும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.' என்று கூறியுள்ளார் சந்தோஷ் ஐயர்.

வாட்ஸ்அப் டிபியில், ஸ்ரேயாஷ் ஐயர் கையில் கோப்பை படம்
சந்தோஷ் ஐயரின் வாட்ஸ்அப் டிஸ்ப்ளே படத்தில் 2017ல் எடுக்கப்பட்ட ஒரு படம் உள்ளது. இந்த படத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு கோப்பையை கையில் வைத்துள்ளார். இந்தப் படம் தர்மசாலாவில் எடுக்கப்பட்டது. பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில், அப்போது, இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது. கடந்த நான்கு வருடங்களாக இந்தப் படத்தை ஏன் மாற்றவில்லை என்று சந்தோஷ் விளக்கமும் தந்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயருக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதே தனது வாழ்க்கையின் மிகப்பெரிய இலக்காக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் தொடர்ந்து நினைவுபடுத்தும். அதற்காகத்தான் நான் அந்த படத்தை மாற்றாமலே வைத்திருந்தேன். இன்று எனது மகன் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி எனது கனவை நிறைவேற்றிவிட்டார்.

வாழ்த்துக்கள்
ஸ்ரேயாஷ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நாங்கள் எப்போதும் விரும்புகிறோம். டெஸ்ட் அணியில் ஸ்ரேயாஸ் இடம் பிடித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நடக்க வேண்டும் என்பதை லட்சியமாக நினைத்திருந்தோம். அதனால் அது நடந்து விட்டது. உண்மையைச் சொல்வதானால், நியூசிலாந்துக்கு எதிராக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறோம். அணியில் பெரிய வீரர்கள் அதிகம் இல்லாததால், ஸ்ரேயாஸுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பு. இவ்வாறு சந்தோஷ் ஐயர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications