அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் சலுகை..வேற எங்கேயும் இல்லை இந்தியாவில் தான்..எந்த மாநிலம் தெரியுமா?
கங்டக்: இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஆண்டு சீனாவை பின்னுக்கு தள்ளி அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடம் பிடிக்கும் என்று சொல்லப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அரசின் சலுகைகள் வழங்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை 130 கோடியை தாண்டியுள்ள நிலையில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா தற்போது உள்ளது.
அடுத்த ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் என ஐநா கணித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவ்வப்போது கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

சிக்கிமில் பிறப்பு விகிதம் குறைவு
இந்த நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் அதிக குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அரசின் சலுகைகள் கொடுக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே ஒட்டுமொத்த குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலம் சிக்கிம்தான். சிக்கிமில் மொத்த மக்கள் தொகை 6 லட்சத்து 10 ஆயிரத்து 577 ஆகும். இங்கு குழந்தை பிறப்பு விகிதம் 1.1 ஆக உள்ளது. எனவே குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் சிறப்பு ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் அறிவித்துள்ளார்.

குழந்தை பெற்றால் ஊதிய உயர்வு
இது தொடர்பாக சிக்கிம் முதல்வர் கூறுகையில், "பெண் அரசு ஊழியர்கள் 2-வது குழந்தை பெற்றுக்கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வு வழங்கப்படும். 3-வது குழந்தை பெற்றுக்கொண்டால் இரண்டு ஊதிய உயர்வு அளிக்கப்படும்" என்றார். அதேபோல், சிக்கிம் மக்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொண்டால் அவர்களுக்கு பல நிதி உதவிகள் அளிக்கப்படும்.

ரூ.3 லட்சம் நிதி உதவி
குழந்தை பிறக்காத பெண்களுக்கு ஐவிஎப் முறையில் சிகிச்சை அளிக்கும் வசதி அரசு மருத்துவமனையில் முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அசாம் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐவிஎப் முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியும் அளிக்கப்படும் என்றும் சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது. சிக்கிமில் இதற்கு முன்பு ஆட்சி செய்தவர்கள் ஒரு குழந்தை கொள்கை என்ற திட்டத்தை ஊக்கப்படுத்தி தவறு இழைத்துவிட்டதாகவும்.. ஒரு குழந்தை கொள்கையால் பிறப்பு விகிதம் சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் சரிந்துவிட்டது என்றும் அம்மாநில முதல்வர் தமங் சாடியுள்ளார்.

ஆண்களுக்கு ஒருமாதம் விடுப்பு
இதற்கு எதிர்மாறான விஷயங்களை செய்யப்போவதாகவும் பெரிய குடும்பங்களை ஊக்குவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக கடந்த 2021- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு 365 நாட்கள் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அதேபோல் ஆண்களுக்கு ஒருமாதம் விடுப்பு அளிக்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது.












Click it and Unblock the Notifications