For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னியர் 10.5 % உள் ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

By BBC News தமிழ்
|
உச்ச நீதிமன்றம்
Getty Images
உச்ச நீதிமன்றம்

வன்னியர் சாதிக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வன்னிய சமூக மக்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு அளித்தது. சட்டமன்றத் தேர்தலை கணக்கில் வைத்தே அ.தி.மு.க அரசு இடஒதுக்கீடு அளித்ததாகவும் பேசப்பட்டது.

அதேநேரம், சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிப்பதில் தாமதம் செய்வதாகக் கூறப்பட்டது.

இதுதொடர்பாக, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உள்பட வன்னியர் அமைப்புகள் அறிக்கை வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து 10.5 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டது.

இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

கடந்த நவம்பர் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், 'சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும், அவ்வாறு முறையாக கணக்கெடுக்காமல் எப்படி இடஒதுக்கீட்டை வழங்க முடியும்? அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டே இந்தச் சட்டம் அவசரமாக இயற்றப்பட்டுள்ளது. இதனை இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?'' எனக் கேள்வியெழுப்பிவிட்டு, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது எனத் தீர்ப்பளித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
www.hcmadras.tn.nic.in
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இதனால் வன்னியர் சாதி அமைப்புகள் அதிர்ச்சியடைந்தன. இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு உரியமுறையில் வாதிடவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதனை அவசர வழக்காக எடுத்துக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், வன்னியர் உள்இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர் சேர்க்கை, அரசுப் பணி நியமனம், கவுன்சலிங் போன்றவற்றில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.

வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு bbc tamil
Getty Images
வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு bbc tamil

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பேசுகையில், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க விரும்பவில்லை' எனக் கூறிவிட்டு, 10.5 சதவிகித இடஒதுக்கீட்டில் ஏற்கெனவே நடைபெற்ற பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவற்றில் மாற்றம் செய்யக் கூடாது' எனவும் இந்த வழக்கில் மறு உத்தரவு வரும் வரையில் புதிதாக மாணவர் சேர்க்கையோ, பணி நியமனமோ நடைபெறக் கூடாது' எனக் குறிப்பிட்டுவிட்டு பிப்ரவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் ஒருவரான சி.ஆர்.ராஜனிடம் பேசினோம். இவர், வன்னிய சத்திரியர் கூட்டு இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.

நவம்பர் 10 ஆம் தேதியே மேல்முறையீட்டுக்குச் சென்றுவிட்டோம். இந்த வழக்கில் உயர்கல்வி, சட்டம், பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் செயலாளர் என தமிழ்நாடு அரசு தரப்பில் நான்கு மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. பாட்டாளி மக்கள் கட்சி தரப்பில் கட்சி சார்பாகவும் ராமதாஸ் சார்பாகவும் இரண்டு மனுக்கள் மேல்முறையீடு செய்யப்பட்டன'' என்கிறார். தொடர்ந்து பேசுகையில், இன்று இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் ஏற்கெனவே வழங்கப்பட்ட மாணவர் சேர்க்கை, அரசு பணி ஆகியவற்றில் மாறுதல்களை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கை அரசு நல்லமுறையில் கொண்டு செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறோம். பிப்ரவரி மாதம் வழக்கு வரும்போது நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். இடைக்கால தீர்ப்பு என்பதால் சற்று வேதனையில் இருக்கிறோம்'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
10.5% Vanniyar Internal Allocation Case latest updates. Supreme Court latest order on 10.5% Vanniyar Internal Allocation Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X