• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாடு ஊரக உள்ளாட்சித் தேர்தல்: சீமானின் நாம் தமிழர் கட்சி படுதோல்வி ஏன்?

By BBC News தமிழ்
|
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்
BBC
தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இடங்களில் ஓர் இடத்தைக்கூட நாம் தமிழர் கட்சி பெறவில்லை. ''ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரேநாளில் ஒரு செடியில் பூ பூப்பதும் இல்லை, காய்ப்பதும் இல்லை'' என்கிறார் சீமான். நாம் தமிழர் கட்சியின் தோல்விக்கு என்ன காரணம்?

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.

கடந்த செவ்வாய் கிழமையன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் 986 இடங்களுக்கு மேல் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளிலும் 137 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் தி.மு.க வெற்றி பெற்றுள்ளன அல்லது முன்னிலை வகிக்கின்றன. அதேநேரம், 199 ஒன்றிய கவுன்சிலர் இடங்களிலும் 3 மாவட்ட கவுன்சிலர் பதவிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது அல்லது முன்னிலை வகிக்கின்றது.

ம.தி.மு.க, வி.சி.க, அ.ம.மு.க உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் படுதோல்வியை சந்தித்துள்ளன. குறிப்பாக, ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி மன்ற பதவிகளில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறவில்லை. இப்படியொரு தோல்வியை அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்பார்க்கவில்லை' எனவும் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்க்காக ஓட்டு விழுந்ததா?

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய சீமான், மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நான் ஒருவன்தான் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்து வருகிறேன். மற்ற கட்சியினர் எல்லாம் வாக்காளர்களுக்கு பணம், பட்டுப்புடவை, நகை எனக் கொடுத்து வாக்குகளைப் பறிப்பதற்கு வரிசை கட்டி நிற்கிறார்கள்' என விமர்சனம் செய்தார். சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்றதால் இந்தமுறை அதிகப்படியான உள்ளாட்சிப் பதவிகள் கிடைக்கலாம் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பேசி வந்தனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளன.

இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வியெழுப்பிய செய்தியாளர்கள், விஜய் மக்கள் இயக்கம் அதிக இடங்களில் வென்றுள்ளதே?' எனக் கேட்டபோது, விஜய் மக்கள் இயக்கம் வென்றிருந்தால் அவர்களுக்கு வாழ்த்துகள். உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் வெற்றிக்கு அந்தந்த பகுதிகளில் உள்ளவர்களின் செல்வாக்குதான் காரணம். எனவே, விஜய்க்காக மக்கள் வாக்கு செலுத்தினார்கள் என நான் நினைக்கவில்லை" என்றார்.

தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தோல்வி குறித்துப் பேசிய சீமான், நாங்கள் பல இடங்களில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளை வென்றுள்ளோம். இதனை படுதோல்வி என எப்படிக் கருத முடியும்? ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரே நாளில் ஒரு செடி பூப்பதும் காய்ப்பதும் கிடையாது. இதனை தோல்வி என களத்தில் நிற்கும் நாங்களே நினைக்கவில்லை. கோடிகளைக் கொட்டாமல் கொள்கைகளைப் பேசி இந்தக் கட்சிகள் களத்தில் நிற்குமா? தி.மு.க தனித்துப் போட்டியிடுமா? இன்றைக்கு மக்கள் எங்களுக்கு ஆதரவு தராவிட்டால், நாளை தருவார்கள். நாளை மறுநாள் தருவார்கள். 5 வருடங்கள் கழித்து இதே கேள்வியை என்னிடம் கேளுங்கள்" என்றார்.

பிரசாரம் செய்யவே ஏகப்பட்ட தடைகள்

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாக்கியராசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, கட்டாயம் வெற்றி பெற வேண்டும்' என்ற சூழல் அவர்களுக்கு இருக்கிறது. நாங்கள் 21 ஊராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளோம். ராணிப்பேட்டையில் ஓர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியை பெற்றுள்ளோம். களத்தில் இன்னமும் நாங்கள் வேலை செய்ய வேண்டும் என்பது தெரிகிறது. இந்தத் தேர்தலை நாங்கள் மனதில் வைக்கவும் இல்லை, இலக்காக வைத்து செயல்படவும் இல்லை" என்கிறார்.

தொடர்ந்து பேசியவர், இந்தத் தேர்தலில் ஆளும்கட்சியின் நடவடிக்கைகளும் பணமும் பிரதான பங்கு வகித்தன. மக்களிடம் நாங்கள் வாக்குக் கேட்டுச் செல்வதிலேயே பிரச்னைகள் இருந்தன. சட்டமன்றத் தேர்தலின்போது, இந்த இடத்தில் பிரசாரம் செய்கிறோம்' எனக் கூறினால் அனுமதி கிடைக்கும். நாங்களும் எளிதாக பிரசாரம் செய்தோம். இந்தமுறை அவ்வாறு பிரசாரம் செய்வதிலேயே தடைகள் இருந்தன.

நாங்கள் பத்து பேருடன் வாக்கு கேட்டுச் செல்லும்போது, அதே இடத்தில் மற்றவர்களும் பிரசாரம் செய்ய வந்தனர். இது ஒரு புதிய அனுபவமாக இருந்தது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கேள்வி கேட்பதிலும் பிரச்னைகள் இருந்தன. பல இடங்களில் பத்திரிகையாளர்களையே அனுமதிக்கவில்லை. இனி வரக் கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் எங்களின் செயல்பாடுகளைப் பாருங்கள். அதன்பிறகு முடிவு செய்யுங்கள்" என்கிறார்.

நா.த.க கவனிக்க வேண்டியது என்ன?

நாம் தமிழர் கட்சியின் தோல்வியை எவ்வாறு எடுத்துக் கொள்வது?" என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். நாம் தமிழர் கட்சியினர் சமூக ஊடகங்களிலும் பிரதான ஊடகங்களிலும் தாங்கள் சொல்லும் அதிரடியான கருத்துகளுக்காக கவனத்தைப் பெறுகின்றனர். சீமானின் உரைகளும் நேர்காணல்களும் கவனத்துடன் பார்க்கப்படுகின்றன. ஆனால் இந்த ஊடகக் கவனத்தை தேர்தல் களத்தில் பெறும் வாக்குகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் இன்னும் எவ்வளவோ தூரம் மேல் எழுந்து வரவேண்டியதாக உள்ளது" என்கிறார்.

மேலும், அவர்களின் அடித்தள, செயல்பாட்டு அரசியலில் இன்னும் தீவிரமாகச் செயல்படவேண்டும் என்பதை உணர்த்துவதாகவே இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்க்கவேண்டும். சமூக ஊடகங்களில் மேற்கொள்ளும் கருத்தியல் பரப்புரை ஒருபுறம் இருக்கலாம். அதே சமயம் களத்தில் செயல்பாடுகள்தான் வாக்குகளாக மாறும் என்பதே எதார்த்தம். நாம் தமிழர் கட்சியினர், இதனைக் கவனத்தில் கொள்ளவேண்டும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Although the parties including the MDMK, VCK and AMMK have won significant local elections, the Naam Tamil Party and makkal needhi maiam have big lost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X