டெல்லியில் 7 நாட்களாக நடந்த தமிழக விவசாயிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தனர்.

TN farmers protest temporarily withdrawn

இந்த தொடர் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சுமார் 100 பேர் கலந்து கொண்டுள்ளனர். நதிகளை இணைப்பது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்திக்க நேரம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்தார். விவசாயிகளின் பிரச்சினை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கூறினார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

முன்னதாக, பாமக எம்.பி., அன்புமணி ராமதாஸ், திமுக எம்.பி.க்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் தமிழக விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினர் டி.ரங்கராஜன் ஆகியோரும் தமிழக விவசாயிகளை சந்தித்தனர்.

மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை, மாநிலங்களவையின் அதிமுக தலைவர் நவநீதிகிருஷ்ணன், மக்களவை அதிமுக அவைத்தலைவர் டாக்டர் பி.வேணுகோபால் உறுப்பினர்கள் எஸ்.வைத்தியலிங்கம், அன்வர் ராஜா ஆகியோரும் இன்று மதியம் விவசாயிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu farmers protest temporarily withdrawn in delhi after 7 days
Please Wait while comments are loading...