For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா: தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு - இது ஆபத்தா நல்லதா?

By BBC News தமிழ்
|
கொரோனா தமிழ்நாடு
Getty Images
கொரோனா தமிழ்நாடு

தமிழ்நாட்டில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இணைநோய் உள்ளவர்களில் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். தளர்வு மூலம் இணைநோய் உள்ளவர்கள் அதிகம் பாதிப்பதற்கான அபாயம் உள்ளது' என்கின்றனர் மருத்துவர்கள். இத்தகைய சூழலில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் சரியானதா?

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 27 ஆம் தேதி மருத்துவத்துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டம் நிறைவடைந்த பிறகு ஊரடங்கில் முக்கிய தளர்வுகளை முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அரசு தரப்பில் வெளியான செய்திக்குறிப்பில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பயிலும் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும்.

தற்போது கொரோனா பாதுகாப்பு மையங்களாக உள்ள கல்லூரிகளைத் தவிர்த்து ஏனைய அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் ஆகியவவை வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தமிழ்நாடு
Getty Images
கொரோனா தமிழ்நாடு

மேலும், 28.1.2022 முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரையிலான ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நோய்த் தொற்று பரவலைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வகையில் பிப்ரவரி 1 முதல் 15 ஆம் தேதி வரையில் நடைமுறைப்படுத்தப்படும்' எனவும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

https://twitter.com/TNDIPRNEWS/status/1486704985450573828

அதே நேரம், அரசியல், சமுதாய மற்றும் கலாசார நிகழ்வுகள் என மக்கள் கூடும் நிகழ்வுகளுக்குத் தடையும் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சிகள், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் கலை விழாக்கள் ஆகியவற்றுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளுக்கு 100 பேருக்கும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 50 நபர்களுக்கு மிகாமலும் அனுமதியளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. திரையரங்குகள், துணிக்கடை, நகைக்கடை, கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் ஆகியவை 50 சதவீதம் பேருடன் இயங்குவதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தமிழ்நாடு
Getty Images
கொரோனா தமிழ்நாடு

மேலும், மக்களாகிய உங்கள் மீது நம்பிக்கை வைத்து மேற்கண்ட தளர்வுகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியினைக் கடைபிடித்து இரணடு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

கொரோனா தொற்றுப் பரவலை இரவு ஊரடங்கும் ஞாயிறு ஊரடங்கும் ஆரம்பத்திலிருந்து பயன் அளிக்கவில்லை. ஊரடங்கு தளர்வில் அவற்றை நீக்கியது என்பது சரியான ஒன்றுதான்'' என்கிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் புகழேந்தி.

https://twitter.com/TNDIPRNEWS/status/1486675685393395712

கோவிட் பரிசோதனைகளின் எண்ணிக்கையை குறைத்துவிட்டனர். ஆர்.டி.பி.சி.ஆர் சோதனையில் பாசிட்டிவ் என வந்தாலும் மாநகராட்சி நிர்வாகத்திடம் இருந்து தொற்று பாதித்தவர்களுக்கு எந்தவித தொலைபேசி அழைப்புகளும் செல்வதில்லை. இதனால் தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்தாமல் இருப்பதால் யாருக்கு நோய் உள்ளது என்பதுவும் தெரியாமல் போய்விடுகிறது'' எனக் குறிப்பிடும் புகழேந்தி,

கொரோனா தமிழ்நாடு
Getty Images
கொரோனா தமிழ்நாடு

ஒமிக்ரான் பரவலால் ஏற்படும் பாதிப்பு அதிகமிருந்தும் அது வெளிக்கொணர முடியாமல் போவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அருகில் உள்ள இணைநோய் உள்ளவர்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் அதிகம் உள்ளது.

உதாரணமாக, கடந்த 27.1.22 அன்று தமிழகத்தில் இறந்த 53 பேரில் 52 பேர் இணைநோய் உள்ளவர்கள். கொரோனாவால் இறந்த பலரின் இறப்புகூட கொரோனா இறப்பு என பதிவாகாமல் வேறு நோய் இறப்பு என பதிவாகும் அபாயமும் உள்ளது. கூட்டங்களை கட்டுப்படுத்தாமல், கொரோனா நெறிமுறைகளை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை உறுதிசெய்யாமல் இருப்பதும் பாதிப்படைந்தவர்களை தனிமைப்படுத்தாமல் இருப்பதும் பரிசோதனைகள் செய்து இ ணைநோய் உள்ளவர்களை காக்காமல் போவதும் பெரிய குறைபாடுகளாகப் பார்க்கிறேன்'' என்கிறார்.

மேலும், ஒமிக்ரான் தாக்கத்தில் நோயின் தீவிரம் குறைந்து இருப்பதால், குறிப்பாக அது நுரையீரலை பாதிக்காமல் இருப்பதால் இறப்புகள் குறைவாக உள்ளன. தடுப்பூசிகளால்தான் இறப்புகள் குறைந்துள்ளது என்பதற்கு எந்த ஆதாரங்களும் முறையாக சேமிக்கப்படவில்லை'' என்கிறார்.

தமிழ்நாடு அரசின் ஊரடங்கு தளர்வு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் சாந்தி, ஊரடங்கு தளர்வுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். 2020 மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் இருந்த நிலைமை தற்போது இல்லை. இந்த நோய் எவ்வாறு பரவுகிறது, என்ன அறிகுறிகள், என்ன சிகிச்சை, தடுப்பூசி பயன்பாடு ஆகியவற்றை வைத்து சில காரணங்களுக்காக கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. ஒமிக்ரான் வேகமாகப் பரவுவதால் 5 லட்சம் நோயாளிகள் பத்து நாளில் வந்துவிட்டால், மருத்துவ சேவை செய்வதில் சிக்கல் ஏற்படும். இறப்புகளும் அதிகம் ஏற்படும். அதுவே, பத்து வாரங்களில் நோயாளிகள் பரவலாக வந்தால் சிகிச்சையும் நன்றாக வழங்க முடியும். அதன் காரணமாகவே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது'' என்கிறார்.

கொரோனா தமிழ்நாடு
Getty Images
கொரோனா தமிழ்நாடு

தொடர்ந்து பேசிய மருத்துவர் சாந்தி, நம்முடைய அனுபவம் என்னவென்றால், ஒமிக்ரான் வேகமாகப் பரவி உச்சத்தை அடைந்து, அதன்பிறகு குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் தளர்வுகளை அறிவித்துள்ளனர். செய்முறை தேர்வுகள், பொதுத் தேர்வுகள் எனத் தொடர்ந்து நடக்க உள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தவிர, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் மருத்துவமனைகளில் பெரிதாக அனுமதிக்கப்படவில்லை. 15 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு அதிகளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் கல்வி நிலையங்களைத் திறந்துள்ளனர். தளர்வுகளில் முதலாவதாக பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது இருக்க வேண்டும்' என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையிலேயே தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று'' என்கிறார்.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னணி என்ன?'' என சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணிராஜனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். கொரோனா தொற்றுப் பரவல் எவ்வளவு வேகமாகப் பரவத் தொடங்கியதோ, அதே வேகத்தில் குறையத் தொடங்கியுள்ளது. இந்தத் தளர்வுகளை மக்கள் சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது. எங்கள் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது. தற்போது நாளொன்றுக்கு 15 என்ற எண்ணிக்கையில் நோயாளிகள் வருகின்றனர். அதுவே கடந்த மாதம் 50 என்ற எண்ணிக்கையில் அனுமதிக்கப்பட்டனர்'' என்கிறார்.

கொரோனா தொற்றால் இணை நோய்கள் உள்ளவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தளர்வுகள் மூலம் அவர்களுக்கு சிக்கல் வராதா?'' என்றோம். ஊரடங்கு தளர்வை பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும். வைரஸ் தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கும். உலகளவில் தடுப்பூசியின் விகிதத்தை உயர்த்தும் வரையில் இதுதொடர்ந்து கொண்டேதான் இருக்கும். கோவிட் தடுப்பு வழிமுறைகளை சரியாகப் பின்பற்றினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். ஊரடங்கு தளர்வு தொடர்பாக அரசுக்கும் ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது'' என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Tamil Nadu Govt. eased the many coronavirus restrictions and lifted the night and Sunday curfews.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X