
8 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 சம்பவங்கள்.. வெளியான சிசிடிவி காட்சி! ஹை அலர்ட்டில் ஜம்மு காஷ்மீர்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் இருவர் காயமடைந்துள்ளனர். இது குறித்து ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
கடந்த 8 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சி
ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10.30 மணியளவில் பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. உதம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் இல்லாத பேருந்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றுள்ளது. பயணிகள் இல்லாததால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் அருகில் இருந்த இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல மற்ற வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

காயம் இல்லை
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர் என உதம்பூர் டிஐஜி சுலேமான் சவுத்ரி கூறியுள்ளார். இது இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவமாகும். இந்த சம்பவம் நடப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னர் இதே மாவட்டத்தில் மற்றொரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஒரே நாளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது ஜம்மு காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்து
இந்த சம்பவத்தையடுத்து காவல்துறையினர் மற்றும், ராணுவம் சம்பவம் நடந்த பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குண்டு வெடிப்புக்கான காரணம் என்னவென இதுவரை தெரியவில்லை ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து ராணுவம் மற்றும் காவல்துறை என இரண்டு தரப்பிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த யூனியன் பிரதேச பகுதியில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச்சூடு சண்டை நடைபெற்று வந்தாலும் குண்டு வெடிப்பு சம்பவம் இதுபோல அடிக்கடி நிகழ்வதில்லை.

சிறப்பு அந்தஸ்து
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கியன. அதாவது கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அம்மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அன்றைய தேதியிலிருந்து கடந்த ஏப்ரல் வரை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 49 பொதுமக்கள், 99 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.