கொரோனா: ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு பேச அனுமதி மறுத்து அவமதிப்பதா? மோடிக்கு மமதா கண்டனம்
கொல்கத்தா: கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு பேச அனுமதிக்காமல் அவமதிப்பதா? என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு தொடர்பாக 10 மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்கள், சில மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மமதா பானர்ஜியும் பங்கேற்றார்.

பேச அனுமதிக்கவில்லை
இக்கூட்டம் முடிவடைந்ததும் செய்தியாளர்களிடம் மமதா பானர்ஜி கூறியதாவது: மாநிலங்களின் முதல்வர்களை ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு அவர்களை பேச அனுமதி மறுப்பது என்பது துரதிருஷ்டவசமானது. பிரதமர் மோடி எங்களிடமும் பேசவில்லை. எங்களை பேசவும் அனுமதிக்கவும் இல்லை.

சம்பிரதாய்ய கூட்டம்
பிரதமர் மோடி மற்றும் சில பாஜக முதல்வர்கள் மட்டும் சுருக்கமாக பேசினர். அத்துடன் கூட்டத்தை முடித்துக் கொண்டனர். இது சம்பிரதாயமான கூட்டமாகத்தான் நடத்தினர்.

எங்களுக்கு அவமரியாதை
இந்த கூட்டத்தில் பங்கேற்ற நாங்கள் அவமதிக்கப்பட்டதாகவே உணருகிறோம். கொரோனா தடுப்பூசிகளைப் பற்றியோ ரெம்டெசிவிர் மருந்துகள் பற்றியோ எந்த கேள்வியையும் பிரதமர் கேட்கவே இல்லை. கறுப்பு பூஞ்சை தொடர்பாகவும் பிரதமர் மோடி கேட்கவும் இல்லை.

கூடுதல் கொரோனா தடுப்பூசி தேவை
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை குறித்தும் மேற்கு வங்கத்துக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி தேவை குறித்தும் நான் பிரதமரிடம் பேச திட்டமிட்டிருந்தேன். ஆனால் எங்களைத்தான் பேசவே அனுமதிக்கவே இல்லை. கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதாக இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். எங்களது கருத்துகளை கேட்க மோடி தயாராக இல்லை. இவ்வாறு மமதா பானர்ஜி கூறினார்.


Click it and Unblock the Notifications
