மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா தான்! பாஜகவுக்கு நோ சான்ஸ்.. ஆனா ஒரு ட்விஸ்ட் இருக்கு! புதிய சர்வே
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு யார் வெல்ல வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாக சர்வே ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் எனக் கூறப்பட்டாலும் மற்றொரு கவனிக்க வைக்கும் விஷயமும் இருக்கிறது. அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
தமிழகத்தை போலவே மேற்கு வங்கத்திலும் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத் தேர்தல் சர்வே
இதற்கிடையே 'வோட் வைப் இந்தியா' (Vote Vibe India) என்ற அமைப்பு அங்கு நடத்திய முதற்கட்ட சர்வே இப்போது வெளியாகியுள்ளது. இந்த சர்வேபடி, தற்போது திரிணாமுல் காங்கிரஸ் அங்கு முன்னிலை வகிக்கிறது. ஆனாலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அங்கு யாருக்கு வாக்களிக்கலாம் என முடிவெடுக்காத மக்கள் அதிகமாகவே உள்ளனர்.
தேர்தல் நெருங்கும்போது தான் அவர்கள் தங்கள் முடிவுகளை எடுப்பார்கள். இந்த நம்பர் அங்குக் கணிசமாக இருப்பதால் தேர்தல் முடிவுகளை முழுவதுமாக மாற்றியமைக்கும் திறன் கொண்டவர்களாக உள்ளனர். மேலும், பாஜக எப்போதுமே கடைசிக் கட்டத்தில் தான் தனது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும். எனவே, இந்த வாக்காளர்கள் பாஜகவுக்கு வந்தால் அது திரிணாமுல் காங்கிரஸுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும்.
திரிணாமுல் வெல்லும்
'வோட் வைப் இந்தியா' கருத்துக்கணிப்பின்படி, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தற்போது 39.6% வாக்குகள் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மற்ற எந்தவொரு கட்சியைக் காட்டிலும் மம்தா மற்றும் திரிணாமுல் காங்கிரஸுக்கு அங்கு ஆதரவு அதிகமாக இருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
எதிர்க்கட்சிகள்
மம்தாவை தொடர்ந்து பாஜகவின் என்டிஏ கூட்டணி அங்கு 2வது இடத்தில் வருகிறது. அவர்களுக்கு 30.5% வாக்குகள் கிடைக்கும் என்று அந்த சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் கூட்டணி அங்கு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.. அவர்களுக்கு 7.3% வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று இந்த சர்வே கூறுகிறது. இதில் மிக முக்கியமான அம்சம், முடிவெடுக்காத வாக்காளர்களின் எண்ணிக்கை. சுமார் 18.5% பேர் இன்னும் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை முடிவெடுக்கவில்லை. அதாவது கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு வாக்காளர் இன்னும் யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை முடிவெடுக்கவில்லை.
கவனிக்க வேண்டியது
இதில் மற்றொரு கவனிக்க வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திரிணாமுலுக்கு எப்போதும் வாக்களிக்கும் முஸ்லீம் வாக்காளர்களே அதிகம் முடிவெடுக்காமல் உள்ளனர். இஸ்லாமியர்களில் 23% பேர் இன்னும் தங்கள் முடிவைத் துல்லியமாக எடுக்கவில்லை. பொதுப் பிரிவில் 20% வாக்காளர்களும், பட்டியல் பழங்குடியினர் (ST) சமூகத்தில் 19% வாக்காளர்களும் குழப்பமான மனநிலையில் உள்ளனர். இவர்களே நிச்சயம் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைப்பார்கள். அதில் சந்தேகம் இல்லை!
மம்தா
மேற்கு வங்கத்தில் யார் முதல்வராக இருக்க வேண்டும் என விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்குச் சந்தேகம் இல்லாமல் மம்தா டாப் இடத்தில் இருக்கிறார். 35.4% வாக்காளர்கள் மம்தா முதல்வராகத் தொடர வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார்கள். அவரை தொடர்ந்து பாஜகவின் சுவேந்து அதிகாரிக்கு 20.9% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல பாஜகவின் சமிக் பட்டாச்சார்யாவுக்கு 14.8% ஆதரவு இருக்கிறது. இதில் காங்கிரஸ், இடதுசாரி தலைவர்களுக்கு 5% கூட ஆதரவு இல்லை.
மேற்கு வங்கத்தின் 294 சட்டசபைத் தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றின் பதவிக்காலம் மே 7ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, மார்ச்- ஏப்ரல் காலகட்டத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021ல் 8 கட்டங்களாக அங்கு சட்டசபைத் தேர்தல் நடந்த நிலையில், 215 தொகுதிகளில் வென்று திரிணாமுல் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.












Click it and Unblock the Notifications