For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளையராஜாவை ஆதரிக்கும் நட்டா - எச்சரிக்கும் உதயநிதி, எதிர்ப்பு வலுப்பது ஏன்?

By BBC News தமிழ்
|
இளையராஜா
Getty Images
இளையராஜா

அம்பேத்கரோடு பிரதமர் மோதியை ஒப்பிட்டு திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய வார்த்தைகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது. "பிரதமரை தனது ஆத்மார்த்த தலைவர் என இளையராஜா கூறியிருந்தால் அதில் யாரும் தலையிடப் போவதில்லை. அம்பேத்கருடன் மோதியை ஒப்பிட்டுப் பேசியதுதான் தவறு" எனவும் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

டெல்லியில் உள்ள "புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன்' என்ற நிறுவனம், 'மோதியும் அம்பேத்கரும்: சீர்திருத்தவாதியின் சிந்தனையும் செயல்வீரரின் நடவடிக்கையும்' (Ambedkar & Modi - Reformer's Ideas, Performer's Implementation) என்ற பெயரில் புத்தகம் ஒன்றை அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட்டது. இந்தப் புத்தகத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.

அதில், "பிரதமர் மோதி ஆட்சியின் பல திட்டங்கள், அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவை. பெண்கள், விளிம்புநிலை மக்களுக்கான பல திட்டங்களை மோதி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார்" எனக் குறிப்பிட்டிருந்தார். இரண்டு பக்கங்களில் எழுதப்பட்டிருந்த இளையராஜாவின் விமர்சனம் கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, 'கறுப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்' என்ற வார்த்தைகளை சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். யுவனின் பதிவு மூலம் இளையராஜாவின் வீட்டுக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு உள்ளதாகவும் சமூகவலைதளங்களில் விவாதிக்கப்பட்டது. இதனை விமர்சித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "ஒன்று தமிழனாக இருக்க வேண்டும் அல்லது திராவிடனாக இருக்க வேண்டும். இதில் குழப்பம் இருக்கக் கூடாது. தென்னாப்பிரிக்காவில் அனைவருமே கறுப்பாக உள்ளனர். அவர்கள் திராவிடர்களா?" என விமர்சித்தார்.

தொடரும் விமர்சனங்கள்

தவிர, இளையராஜாவின் ஒப்பீடு குறித்து பல்வேறு விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. "இளையராஜா ஒரு நவீனப் புராணத்தைப் போல உருமாறி நிற்கிறார் என்பதே உண்மை. ஒரே ஒரு விஷயத்தில் இளையராஜா என்ன பேசினாலும் ரசிகர்கள் கோபிப்பது இல்லை; அது, இசையைப் பற்றி. தனது இசையாகட்டும் அல்லது உலகிலுள்ள எந்த இசையாகட்டும் அவர் என்ன பேசினாலும், எவ்வளவு பேசினாலும் ரசிகர்கள் எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுப்பதில்லை. இளையராஜாவைக் கைப்பற்றுவது என்றால், அவரது ரசிகர்களைக் கைப்பற்றுவது என்று பொருள். அதற்கு, இளையராஜா என்ற நபரைக் கைப்பற்றி எந்த உபயோகமும் இல்லை. ஏனெனில், இளையராஜா சொல்லும் எதையும் அவரது ரசிகர்கள் கேட்பதே இல்லை. அவர்களது காதுகள் இளையராஜாவின் இசைக்கு மட்டுமே பழகியிருக்கின்றன" என ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், மதுரையை சேர்ந்த பேராசிரியர் டி.தருமராஜ்.

"கருத்து சுதந்திரம் என்பது ஒருவர் என்ன வேண்டுமானாலும் சொல்வதற்கான சுதந்திரம்தானே தவிர, அவர் என்ன சொன்னாலும் யாரும் விமர்சித்து எதையும் சொல்லிவிடக்கூடாது என்பதற்கான சுதந்திரமில்லை. 'கருத்துச்சுதந்திரம்' என்ற பெயரில் முன்வைக்கப்படும் இந்த அபத்தமான வாதம், உண்மையில் விமர்சனக் கருத்து சுதந்திரத்தை மறுக்கும் மனநிலைதான்' என பதிவிட்டுள்ளார், பத்திரிகையாளர் சுகுணா திவாகர்.

நட்டா கொதிப்பும் உதயநிதி பேச்சும்

இளையராஜாவின் கருத்துக்கு எழுந்துள்ள விமர்சனம் தொடர்பாக, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில், "தமிழ்நாட்டில் ஆளும்கட்சிக்கு ஆதரவானவர்கள், இளையராஜாவுக்கு எதிராகக் கருத்துகளைக்கூறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு ஆதரவாக இளையராஜா பேசவில்லை என்பதற்காக அவரை அவமதிப்பது என்பது சரியான அணுகுமுறை அல்ல. இதற்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், "ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கொள்கைகள், பார்வைகள் இருக்கும். தாங்கள் விரும்புவதை ஒப்புக்கொள்ள வேண்டும் என வலியுறுத்துவது எப்படி சரியான ஜனநாயகமாக இருக்க முடியும்?" எனவும் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமரையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இளையராஜா பேசியது என்பது அவரது சொந்தக் கருத்து. இந்த விவகாரத்தில் யாரும் கருத்து சொல்ல வேண்டாம் என தலைவர் கூறிவிட்டார். எனவே, அவருடைய கருத்தை நாகரீகமற்ற முறையில் யார் விமர்சித்தாலும் தவறுதான்" என்றார்.

ஜே.பி.நட்டா
Getty Images
ஜே.பி.நட்டா

தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா உள்பட பாஜக நிர்வாகிகள் பலரும் இளையராஜாவுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர். மேலும், இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் எனக் கட்சித் தலைமைக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

இளையராஜா பேசியது சரியா?

"இளையராஜாவின் கருத்தை எதிர்ப்பது ஏன்?'' என மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் கதிரிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். "பிரதமர் மோதியே தனக்குப் பிடித்த ஆத்மார்த்தமான தலைவர் என இளையராஜா கூறியிருந்தால், அதில் யாரும் தலையிடப் போவதில்லை. அது அவரது தனிப்பட்ட கருத்து. அம்பேத்கருடன் மோதியை ஒப்பிட்டுப் பேசியதுதான் தவறு என்கிறோம். எந்த சிஸ்டத்துக்காக தனது வாழ்க்கை முழுவதையும் அம்பேத்கர் தியாகம் செய்தாரோ, சாதிக் கொடுமையையும் வர்ணாசிரமத்தையும் எதிர்த்துப் போராடினோரோ அதற்கு நேர் எதிராக உள்ள ஒரு கட்சியின் தலைவரோடு ஒப்பிட்டுப் பேசுவது என்பது எப்படி சரியான ஒன்றாக இருக்க முடியும்? நீதியையும் அநீதியையும் ஒன்று எனக் கூற முடியுமா?'' எனக் கேள்வியெழுப்புகிறார்.

தொடர்ந்து பேசுகையில், "புத்தகத்துக்கு இளையராஜா அளித்துள்ள இரண்டு பக்க அணிந்துரையில், "நீர்ப் பாசனம் தொடர்பாகவும் நீர் மேலாண்மை தொடர்பாகவும் அம்பேத்கர் திட்டமிட்டுள்ளார் என்பதே பிரதமர் பேசிய பிறகுதான் தனக்குத் தெரியும்" என்கிறார். அம்பேத்கரை அறிந்தவர்களுக்கு அவர் நீர்ப்பாசனம் தொடர்பாகப் பேசியவை தெரியும். இளையராஜாவின் பேச்சு என்பது ஒட்டுமொத்த தலித் மக்களையும் காவு கொடுக்கும் வேலை. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்ன பிரச்னை இருந்தாலும் அவர்கள் அரசியல் தெளிவு உடையவர்கள். தேர்தலில் தனித்து நின்றபோது வென்ற புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, பாஜகவோடு கூட்டணியில் நின்றபோது தோற்றுப் போனார்.

இந்த விவகாரத்தில், அனைவரும் வைக்கும் தட்டையான விமர்சனம் என்னவென்றால், 'இளையராஜாவின் இசையை மட்டும் கேளுங்கள்' என்கின்றனர். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். அவர் தனது இசையோடு நிறுத்திக் கொள்ளட்டும். இதையும் தாண்டி அரசியல் பேசட்டும். ஆனால், அந்த அரசியலை நியாயமாகப் பேசாவிட்டால் விமர்சனம் வரத்தான் செய்யும்'' என்கிறார்.

அம்பேத்கர் பெயரை உச்சரித்துள்ளாரா?

"அதேநேரம், இளையராஜாவுக்கு சாதி முத்திரை குத்துவது என்பது கண்டிக்கத்தக்கது. கடந்த நான்கு நாள்களாக பாஜகவின் அண்ணாமலையும் ஹெச்.ராஜாவும், 'நாங்கள் திராவிடர்கள்' எனப் பேசி வருகின்றனர். 'மோதி கூட திராவிடர்தான்' என ஹெச்.ராஜா பேசுகிறார். இவர்கள், இளையராஜாவை வைத்து தலித் வாக்குகளைக் கைப்பற்ற நினைக்கிறார்கள். குறிப்பாக, எந்த சமூகம் எல்லாம் பெரும்பான்மையாக இருக்கிறதோ, அதையெல்லாம் தங்கள் பக்கம் கொண்டு வர நினைக்கிறார்கள். இளையராஜா எழுதிய அணிந்துரை என்பது பாஜகவின் அறிவுசார் பிரிவில் உள்ளவர்கள் எழுதிய குறிப்புதான்.

'சமூகநீதி என்ற அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிரதமர் மோதி ஆணையம் அமைத்தார்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சட்டங்களைக் கொண்டு வந்தார்; நான்குவழிச் சாலை, சுரங்கங்கள் ஆகியவற்றை அமைத்தார்' என்கிறார். கார்ப்பரேட்டுகளின் வருமானம் எந்தளவுக்கு உயர்ந்துள்ளது என அவர் பேசவில்லை. அந்த இரண்டு பக்கங்களிலும் விவாதத்துக்கு உட்படுத்த விஷயங்கள் ஏராளம் உள்ளன'' எனக் குறிப்பிடும் எவிடென்ஸ் கதிர்,

"இளையராஜாவின் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் எந்த இடத்திலும் அம்பேத்கர் என்ற வார்த்தையை அவர் உச்சரித்ததில்லை. 25 லட்ச ரூபாயை சங்கராச்சாரியாருக்கு கொடுக்கும் வீடியோ ஒன்றில், வலிந்துபோய் பிராமண மொழியில் பேசுகிறார். தலித் சமூகத்தில் பிறந்ததால் விமர்சனம் செய்தால் பிரச்னை வரும் என்பதால் யாரும் அவரை விமர்சிக்காமல் இருந்தனர். அவர் தலித்தாக இருப்பதால்தான் காப்பாற்றப்பட்டு வந்தார். அதை இல்லையென்று அவரால் மறுக்க முடியுமா?

பின்னணியில் நடந்தது தெரியும், ஆனால்?

ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வளர்ந்து வருகிறவர்களுக்கு சமூகப் பொறுப்பு என்பது இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் சமூகத்தில் வலிமை குறைந்தவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளது. இவர்கள் முற்பட்ட சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கொண்டு வந்தனர். எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக வைத்தது யார்? அதற்கு எதிரான போராட்டத்தில் மகாராஷ்டிராவில் பலர் கொல்லப்பட்டார்களே? இதுதான் பாதுகாப்பா? 'நான் அரசியல் பேசவில்லை, மோதிக்கு வாக்கு போடுங்கள் எனவும் சொல்ல மாட்டேன், போட வேண்டாம் எனவும் சொல்ல மாட்டேன்' என இளையராஜா சொல்கிறார். இதை எப்படிப் புரிந்து கொள்வது?'' என கேள்வியெழுப்புகிறார்.

அண்ணாமலை
BBC
அண்ணாமலை

மேலும், "பாரத ரத்னா விருதுக்காக கட்சி மேலிடத்துக்குக் கடிதம் எழுதுவேன் என அண்ணாமலை கூறுகிறார். அது பாஜக கொடுக்கும் விருதா? அரசாங்க விருதுகள் எல்லாம் பாஜக கொடுக்கும் விருதா? இதுவரையில் இளையராஜாவின் இசையைப் பற்றி இவர்கள் பேசியிருக்கிறார்களா? அதிலும், 'இளையராஜாவைப் பற்றிப் பேசினால் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாயும்' என ஹெச்.ராஜா பேசுகிறார். இந்த நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது எனப் பேசி வந்தவர்கள், ஒரேநாளில் மாறிவிட்டதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது. தலித் மக்கள் மீது நடத்தப்படும் கொடுமைகளுக்கு எதிராக இவர்கள் களத்துக்கு சென்றுள்ளார்களா? இளையராஜா விவகாரத்தில் பின்னணியில் நடந்த பல விஷயங்கள் எனக்குத் தெரியும். ஆனால், அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை'' என்கிறார்.

"இளையராஜாவுக்கு விருது கிடைக்கட்டும். ராஜ்ய சபா உறுப்பினராகக் கூட ஆகட்டும். இனி இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு மக்கள் கூட மாட்டார்கள். நாங்கள் அவரது இசையை மட்டும் ரசிக்கவில்லை. அவரையும் சேர்ந்துதான் ரசித்து வந்தோம். எத்தனையோ தலித் ஆளுமைகள் சாதியைக் கடந்துதான் மேலே வந்துள்ளனர். அவர் பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுப்பதோ, ஆர்எஸ்எஸ் தலைவராக வருவதிலோ எந்தப் பிரச்னைகளும் இல்லை. இளையராஜா சொல்வது கருத்து சுதந்திரம் என்றால், அதனை விமர்சிப்பதும் கருத்து சுதந்திரம்தான்'' என்கிறார், எவிடென்ஸ் கதிர்.

மோதியை ஆதரித்தாலே விரோதிகளா?

இளையராஜாவின் கருத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு பாஜகவின் மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "இது அம்பேத்கரோ, இளையராஜாவோ சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. பிரதமரின் சாதனைகள் எந்த வகையிலும் வெளியில் வந்துவிடக் கூடாது என்ற ஒற்றை அஜெண்டாவை முன்வைத்து செயல்படுகிறார்கள். மோதியை ஆதரித்துப் பேசுகிறவர்கள் எல்லாம் இவர்களுக்கு விரோதிகள். ஜிஎஸ்டி தொடர்பாக திமுக ஆதரவு விவிஐபிகள் பலர் கருத்து கூறியிருந்தனர். அதற்கெல்லாம் எந்த எதிர்ப்புகளும் இல்லை. அடுத்ததாக, மோதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இளையராஜா சொன்ன கருத்துக்கு எழுந்த ஆதரவு, இவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. உதயநிதி வெளியிட்ட அறிக்கையின் மூலம் அவர்கள் சமாதானமாகப் பணிந்து போவதைப் பார்க்க முடிகிறது. இந்த விவகாரத்தில் மோதி எதிர்ப்பாளர்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளனர்'' என்கிறார்.

எஸ்.ஆர். சேகர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி
BBC
எஸ்.ஆர். சேகர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி

"தமிழ்நாட்டில் பிரதமரின் இமேஜை உயர்த்தும் யுக்தி என்கிறார்களே?'' என்றோம். "பிரதமரின் இமேஜை இனிமேலும் உயர்த்த வேண்டிய அவசியமில்லை. அதனை உலகத் தலைவர்களே ஏற்றுக் கொண்டார்கள். யுக்ரேன், ரஷ்யா போரை நிறுத்தி இந்திய மாணவர்களை வெளியில் கொண்டு வந்தார். அவருக்குப் புதிய பட்டம் எதுவும் வழங்க வேண்டிய அவசியமில்லை. இளையராஜாவுக்குப் பெருகி வந்த ஆதரவின் நிலைப்பாடுதான் ஜே.பி.நட்டா வெளியிட்ட அறிக்கை. அப்படியொரு அறிக்கையை எதிரணியினர் எதிர்பார்க்கவில்லை'' என்கிறார்.

மேலும், "இளையராஜாவுக்கு பாரத ரத்னா கொடுக்கக்கூடாது என இவர்கள் சொல்வார்களா? அவருக்கு அந்தத் தகுதியில்லை என சொல்ல முடியுமா? இளையராஜாவை சிறுமைப்படுத்த நினைத்த சிலரின் வியூகம் படுதோல்வியடைந்துவிட்டது'' என்கிறார்.

https://www.youtube.com/watch?v=VXll9p1BkQc

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Why BJP National President J.P.Nadda supports Ilayaraja?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X