For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜ கண்ணப்பன்: தமிழக அமைச்சரின் திடீர் இலாகா மாற்றம் - பின்னணி என்ன?

By BBC News தமிழ்
|
ராஜ கண்ணப்பன்
BBC
ராஜ கண்ணப்பன்

தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையில் திடீர் என நடந்த இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?

இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத் துறை அமைச்சராகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத் துறை அமைச்சராக இருந்த எஸ்.எஸ். சிவசங்கர் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு மே மாதம் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு நடந்திருக்கும் முதலாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும்.

பட்டியலினத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவரை ஜாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியதாக சம்பந்தப்பட்ட அலுவலர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் நடந்திருக்கிறது.

அமைச்சர் மீது புகார்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (பிடிஓ) பணியாற்றுபவர் ராஜேந்திரன். இவரை நேற்று முன்தினம் காலை தனது வீட்டிற்கு வரச்சொன்ன அமைச்சர், அங்கு அவரை அவரது ஜாதியைச் சொல்லி திட்டியதாக ராஜேந்திரன் ஊடகங்களிடம் குற்றம்சாட்டினார்.

"நாங்கள் அமைச்சரைப் பார்த்தவுடன் வணக்கம் தெரிவித்தோம். அவர் பதில் சொல்லாமல், 'ஏய்யா நீ ஒரு எஸ்.சி. பி.டி.ஓ. சேர்மன் சொல்றத மட்டும்தான் நீ கேப்ப... (சேர்மன் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்). நீ ஸ்கீம் பிடிஓவாக வேலை பார்ப்பதற்கே தகுதியில்லை. நீ ஒரு எஸ்.சி. பி.டி.ஓ. உன்னை மாற்றி விடுகிறேன். மாவட்டம் விட்டு மாவட்டம் உடனடியாக மாற்றிவிடுவேன். அமுதா மேடத்துக்கிட்ட சொல்லி உன்னை வட மாவட்டத்துக்கு மாற்றிவிடுவேன் என்று சொன்னார். நீ யார் சொல்வதையும் கேட்பதில்லை என்றார். மேலும், என்னை எஸ்.சி. பி.டி.ஓ, எஸ்.சி. பி.டி.ஓ. என ஐந்து முறை, ஆறு முறை சொல்லி என்னைக் காயப்படுத்தினார். பிறகு, இவன் சரிப்பட்டு வரமாட்டான். இவனை மாற்றுவதற்கு ரிப்போர்ட் கொண்டு வா என்று சொன்னார். என்னைப் பார்த்ததிலிருந்தே ஒருமையில்தான் பேசினார். நாயைப் போல ஏளனமாக துரத்தினார்" என அவர் ஊடகங்களிடம் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

அவரது இந்தப் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் அவர் போக்குவரத்துத் துறையிலிருந்து மாற்றப்பட்டிருக்கும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

ராஜகண்ணப்பன்
BBC
ராஜகண்ணப்பன்

ஆனால், ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் சர்ச்சைகளில் சிக்குவது முதல் முறையில்லை. தீபாவளிக்கு முன்பாக, போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் இனிப்பை வாங்குவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முதலமைச்சர் அலுவலகம் தலையிட்டு, உடனடியாக வெளியில் இனிப்பு வாங்கும் முடிவு ரத்து செய்யப்பட்டு, ஆவினில் வாங்குவதற்கு முடிவுசெய்யப்பட்டிருப்பதாகக் கூறி அந்தச் சர்ச்சை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

டி.டி.வி. தினகரன் கேள்வி

ஆனால், ஜாதிய வன்மத்தோடு நடந்துகொண்டிருக்கும் ஒருவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் திராவிட மாடலா என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

https://twitter.com/TTVDhinakaran/status/1508792909357010944

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், "தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?

சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா?" என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ராஜ கண்ணப்பன் பின்னணி

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் ராஜ கண்ணப்பன். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அவர், அ.தி.மு.க. ஆட்சியிழந்த பிறகு அதிலிருந்து விலகினார். 2001ல் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் துவங்கி, தி.மு.க. கட்டணியோடு இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தார். அந்தத் தேர்தலில் இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். பிறகு தி.மு.கவில் இணைந்தார். 2009ல் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2011 தேர்தலில் அ.தி.மு.கவின் சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்ட கண்ணப்பன் தோல்வியைச் சந்தித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 2019ல் மீண்டும் தி.மு.கவுக்கு வந்தார் ராஜ கண்ணப்பன். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Here are the reasons for Raja Kannapan's portfolio changed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X