என்னங்க இது புதுசா இருக்கு.. மாஸ்க்குக்கு பதில் இனி 'கோஸ்க்'.. தென் கொரியாவில் அறிமுகம்.. என்ன ஸ்பெஷல்?
சியோல்: தென்கொரியாவில் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மை உடைய புதிய வகை மாஸ்க் அறிமுகமாகி உள்ளது. இந்த புதிய வகை மாஸ்க்கை தென்கொரியாவில் 'கோஸ்க்' என்று அழைக்கின்றனர்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் உலக நாடுகளை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. அடிக்கடி கொரோனா வைரஸ் மாறுபாடு அடைந்து வருவதால் இதனை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன.

மாஸ்க் மிக முக்கியம்
வைரஸ் இன்னும் பல காலம்நம்முடனே பயணிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறி வருவதால் வைரஸிடம் இருந்து தற்காத்து கொள்ளவது மிகவும் அவசியமாகிறது.கொரோனாவை தடுப்பதில் முக்கிய பேராயுதம் தடுப்பூசி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. தடுப்பூசி ஒருபக்கம் ஆயுதம் என்றால் வைரஸ் பரவுவதை தடுப்பதில் நாம் அணியும் மாஸ்க்குகளும் கொரோனாவை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தென்கொரியாவில் அறிமுகம்
வைரஸை தடுப்பதில் இந்த மாஸ்க்தான் சிறந்தது? என்று பல விதங்களில், வடிவங்களில் மாஸ்க்குகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் தென் கொரியாவில் கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க வெறும் மூக்கை மட்டும் மறைக்கும் மாஸ்க் ஒன்று அறிமுகமாகி உள்ளது. தென்கொரியாவில் அட்மன் என்ற நிறுவனம்தான் இந்த மாஸ்க்கை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.

மூக்கை மட்டும் மறைக்கும்
நாம் இப்போது அணியும் மாஸ்க்குகள் வாய், மூக்கினை மறைக்கிறது. இதனால் சாப்பிடும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும் மாஸ்க்கை கழற்ற வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அட்மன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ள மாஸ்க் மூக்கை மட்டும் மறைக்கும் தன்மை உடையது. இதனால் சாப்பிடுவதற்கு, தண்ணீர் அருந்துவதற்கும் மாஸ்கை அடிக்கடி கழட்ட வேண்டிய அவசியம் இல்லை.

ஏன் இதற்கு பெயர் கோஸ்க்?
இந்த புதிய வகை மாஸ்க்கை தென்கொரியாவில் 'கோஸ்க்' என்று அழைக்கின்றனர். கொரிய மொழியில் கோஸ்க் என்றால் மூக்கு என்று அர்த்தமாம். புதிய வகை மாஸ்க்குகள் மூக்கை மட்டும் மறைப்பதால் இதனை கோஸ்க் என்று அழைக்கின்றனர். மூக்கின் வழியாகவே வைரஸ் வேகமாக பரவும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதால், தென் கொரியாவில் மக்கள் கோஸ்க்கை ஆர்வமுடன் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இந்த மாஸ்க் விரைவில் உலகம் முழுவதும் வலம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications