For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னம்மா அங்கே சத்தம்???.. அரண்டு போன அமெரிக்கா, இங்கிலாந்துக்காரர்கள்!

Google Oneindia Tamil News

லண்டன்: உலகுக்குத் தெரியாத அமெரிக்க ரகசியங்கள் எக்கச்சக்கம்.. அதில் ஒன்றுதான் அரோரா... நம் ஊர்க்காரப் பெயரா இருக்கேன்னு குழப்பிக்காதீங்க.. இது 'Aurora'. இந்தப் புனை பெயரில் அமெரிக்கா ஒரு உளவு விமானத்தை தயாரித்து வருவதாக இன்று நேற்றல்ல, 1989ம் ஆண்டிலிருந்தே ஒரு தகவல் உலா வந்தபடிதான் உள்ளது. ஆனால் இதுவரை இப்படி ஒரு விமானம் இருப்பதாக அமெரிக்கா சொன்னதே இல்லை.

ஒலியின் வேகத்தை விட 6 மடங்கு அதி வேகமாக பயணிக்கக் கூடிய சூப்பர் சானிக் உளவு விமானமாக இது கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் இந்த விமானம் தொடர்பாக ஒரு பெரும் பரபரப்பு கிளம்பியது.

இங்கிலாந்தின் அபர்தீன் நகர் முதல் தேவன் நகர் வரை திடீரென கேட்ட அதி பயங்கரமான சத்தத்தால் மக்கள் அரண்டு போயினர். அதேபோல நியூயார்க்கின் கிளாரன்ஸ் மற்றும் லாக்போர்ட் ஆகிய பகுதிகளிலும் இந்த பலத்த சத்தத்தை மக்கள் கேட்டுள்ளனர்.

தெற்கு லண்டனைச் சேர்ந்த ஒரு பெண் இந்த சத்தத்தை பதிவும் செய்துள்ளார். பயங்கரமான நிலநடுக்கத்தின் சத்தம் போல இது இருந்ததாக ஒருவர் கூறியுள்ளார்.

'Aurora' spy plane that travels at SIX TIMES the speed of sound is blamed for mysterious booms

இந்த சத்தம் வேறு ஒன்றும் இல்லை அமெரிக்காவின் ரகசிய உளவு விமானமான அரோரா ஏற்படுத்திய சத்தம்தான் என்று பலரும் கூறுகிறார்கள்.

அமெரி்க்காவின் மிக மிக ரகசியமான உளவு விமானத் திட்டம்தான் இந்த அரோரா. 1989ம் ஆண்டு இதுகுறித்து முதல் முறையாக தகவல் வெளியானது.

ஆனால் தற்போது கேட்கப்பட்ட அதி பயங்கர சத்தத்தின் பின்னணி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் வரவில்லை. இருப்பினும் இது அரோரா விமானம் பறந்ததால் ஏற்பட்ட சத்தம்தான் என்று பலரும் கூறுகிறார்கள், நம்புகிறார்கள்.

சூப்பர்சானிக் அல்லது ஹைப்பர்சானிக் வேகத்தில் இந்த விமானம் சென்றதால் ஏற்பட்ட சத்தம்தான் இது என்றும் கூறப்படுகிறது. இது அட்லான்டிக் கடல் மீது பறந்து போனபோது கேட்ட சத்தமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

1989ம் ஆண்டு ஏவியேஷன் வீக் மற்றும் ஸ்பேஸ் டெக்னாலஜி என்ற பத்திரிகையில்தான் முதல் முறையாக இந்த அரோரா உளவு விமானம் குறித்த தகவல் வெளியானது. அமெரிக்க ராணுவம் இந்த உளவு விமானத்தை ரகசியமாக உருவாக்கியுள்ளதாக அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அதை அமெரிக்க அரசு தெளிவுபடுத்தவில்லை.

அதேசமயம் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம், லாக்கீட் மார்ட்டின் நிறுவனம், ஒரு உளவு விமானத்தை உருவாக்கியது. அதன் பெயர் எஸ்ஆர் 72 என்பதாகும். இது உளவு விமானமாகும். அரோரா விமானம்தான் இது என்றும் கூட பேச்சு உண்டு.

இந்த நிலையில் சமீபத்திய பயங்கர சத்தம் குறித்து ஷெப்பீல்டைச் சேர்ந்த பொறியியல் ஆய்வு ஆசிரியர் டாக்டர் பூபேந்திர கந்தல்வால் கூறுகையில், சமீபத்தில் கேட்கப்பட்ட பெரும் சத்தமானது, நிச்சயம் ஒரு ஜெட் என்ஜினின் சப்தம்தான். இதற்கு பல்ஸ் டெட்டொனேஷன் என்ஜின் என்று பெயர் என்றார்.

தெற்கு லண்டனைச் சேர்ந்த கிளாடியா ஆங்கிலெட்டா என்ற பெண் இந்த சத்தத்தை பதிவு செய்துள்ளார். வீட்டில் டிவி பார்த்தபோது இரவு 10 மணியளவில் இந்த சத்தத்தைக் கேட்ட அவர் உடனே பதிவு செய்து வைத்து விட்டார்.

இந்தசத்தம் இப்போது டிவிட்டரிலும் சூட்டைக் கிளப்பியுள்ளது. பலரும் இந்தசத்தம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர் டிவிட்டரில்.
#loudbangs, #omgwereallgoingtodie என்ற பெயர்களில் அவர்கள் கருத்துக்களைக் குவித்துள்ளனர்.

அமெரிக்காவின் பபலோ, சீக்டோவாகா, கிளாரன்ஸ், நயகாரா நீர்வீழ்ச்சிப் பகுதி என பல இடங்களிலும் மக்கள் இந்த சத்தத்தைக் கேட்டுள்ளனர். இந்த வழக்கத்திற்கு விரோதமான அதி பயங்கர சத்தம்தான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வாய் வலிக்க மக்கள் பேசும் முக்கிய விஷயமாகவும் மாறிப் போனது.

இந்த திடீர் சத்தத்தால் ஜன்னல்கள் ஆடியதாகவும், வீடே ஆடியதாகவும் பலர் கூறியுள்ளனர்.

அரோரா விமானம் குறித்த சில டெக்னிக்கல் உபரித் தகவல்கள்...

லாக்கீட் மார்ட்டின் எஸ்ஆர் 71 பிளாக்பேர்ட் உளவு விமானத்தின் மாற்றாக இந்த அரோரா பார்க்கப்படுகிறது. எஸ்ஆர் 71 விமானமானது 1998ம் ஆண்டுடன் ஓய்வளிக்கப்பட்டு விட்டது. இது மணிக்கு 3.35 மாக் என்ற வேகத்தில் பயணிக்கக் கூடியதாகும்.

அரோரா விமானமானது மாக் 11.8 என்ற வேகத்தில் பறக்கக் கூடியது. இந்த அதி நவீன உளவு விமானத்தைத் தயாரிக்க அமெரிக்க அரசு 445 மில்லியன் டாலர் பணத்தை இறக்கியதாகவும் ஒரு தகவல் உள்ளது.

ஆனால் ஒரு விமானத்திற்காக மட்டுமல்லாமல், பல விமானங்களைத் தயாரிக்க இந்த நிதியை அமெரிக்கா செலவிடுவதாகவும் கூட தகவல் உண்டு. ஆனால் எதற்குமே ஆதாரம் இல்லை, ஆவணங்களும் இல்லை.

1987ம் ஆண்டு ஸ்கன்வொர்க்ஸ் பகுதியில் உள்ள லாக்கீட் மார்ட்டின் நிலையத்தில் வைத்து இந்த விமானத் தயாரிப்பு தொடங்கியதாகவும் ஒரு தகவல் உள்ளது.

இந்த நிலையில்தான் 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் எஸ்.ஆர் 72 ரக உளவு விமானத்தை தயாரிப்பதாக லாக்கீட் அறிவித்தது. ஆனால் இது அரோராவின் பிரதிபலிப்பே என்பது பலரின் கருத்தாக உள்ளது.

அரோரா விமானமானது மணிக்கு 6 மாக் என்ற வேகத்தில் பறக்கக் கூடியது. அதாவது மணிக்கு 7349 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க்க கூடியதாகும். கன்கார்ட் விமானத்தை விட இது 3 மடங்கு அதி வேகமாகும். அதேசமயம், இதை 11.8 மாக் என்ற வேகத்திற்கும் கூட மாற்ற முடியும்.

அமெரிக்காவே சொன்னால்தான் பல புரியாத ரகசியங்கள் நமக்கு விளங்கும்.. அந்தப் பட்டியலில் நிச்சயம் அரோராவுக்கும் முக்கிய இடம் உண்டு என்பது மட்டுமே இப்போதைக்கு நிஜம்.. நம்ம ஊர் பக்கம் ஏதாவது சத்தம் கேட்டா சொல்லுங்கப்பா... !

English summary
The origin of the mysterious bangs heard across the UK and New York at the weekend are yet to be officially identified. But a leading theory is that they were created by an aircraft possibly travelling at supersonic or hypersonic speeds above the Atlantic. This has led conspiracy theorists to attribute the booms to a spy plane rumoured to be under development by the US military, under the codename Aurora.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X