பாகிஸ்தானை விடுங்க.. துருக்கி - வங்கதேசம் சேர்ந்து போடும் பிளான்.. இந்தியாவுக்கு புது சிக்கல்
டாக்கா: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் நடந்தது. இதில் பாகிஸ்தானை துருக்கி ஆதரித்தது. துருக்கி தனது ட்ரோன்கள் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்களை இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தியது. இதனால் துருக்கிக்கும் நமக்கும் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் அடுத்தக்கட்டமாக துருக்கியும், வங்கதேசமும் இணைந்து செயல்பட தொடங்கி உள்ளது. இது நம் நாட்டுக்கு புதிய பிரச்சனையாக மாறி உள்ளது.
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நடந்தது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள், விமானப்படை தளங்கள், ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன.

இதையடுத்து பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு, துருக்கி உதவி செய்தது. துருக்கி தனது ட்ரோன் மற்றும் ட்ரோன் ஆபரேட்டர்கள் மூலம் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்த முயன்றது. இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தானை போல் துருக்கியும் நம் நாட்டுக்கு பகையாளியாக மாறி உள்ளது.
இதுதவிர துருக்கி அதிபர் எர்டோகன் நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை கண்டித்தார். இதனால் கோபமான நம் வர்த்தகர்கள் துருக்கியுடனான வர்த்தகத்தை துண்டித்துள்ளனர். அதேபோல் துருக்கிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தவர்களும் அந்த நாட்டை புறக்கணித்துள்ளனர். இதற்கிடையே தான் தற்போது துருக்கி மற்றும் வங்கதேசம் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே இருந்த நல்ல உறவு இப்போது இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்த துருக்கி நினைக்கிறது. ஏற்கனவே துருக்கி பிரதிநிதிகள், வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸை சந்தித்து பேசியிருந்தனர். இந்தியாவை நம்ப வேண்டாம். இந்தியாவை விட்டு விடுங்கள். இந்தியா செய்யும் உதவியை நாங்கள் செய்கிறோம் என்று துருக்கி தெரிவித்து இருந்தது.
இதனால் துருக்கி - வங்கதேசம் இடையேயான உறவு என்பது பலமானது. இப்போது இருநாடுகள் இடையேயான உறவு அடுத்தக்கட்டத்துக்கு சென்றுள்ளது. வங்கதேச தொழில் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் சவுத்ரி ஆசிக் மஹ்மூத் பின் ஹரூன் 5 நாள் பயணமாக துருக்கி சென்றார். இந்த பயணத்தின் நோக்கம் துருக்கி மற்றும் வங்கதேசம் இடையே பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தான். அதுதொடர்பாக துருக்கி பிரதிநிதிகளுடன் சவுத்ரி ஆசிக் மஹ்மூத் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதுமட்டுமின்றி துருக்கியின் மத்திய அனடோலியா பிராந்தியத்தில் உள்ள கிரிக்காலேவில் உள்ள அரசுக்குச் சொந்தமான மெக்கானிக்கல் மற்றும் கெமிக்கல் தொழில் கழகத்துக்கும் சென்று பார்வையிட்டார். MKE உற்பத்தி தளம், சோதனை தளம் மற்றும் பீரங்கிகளை பார்வையிட்டனர். அதன் செயல்பாடு பற்றி கேட்டு அறிந்தனர். ஒன்றாக சேர்ந்து தயாரிப்பு, தொழில்நுட்பங்களை பரிமாறி கொள்வது உள்ளிட்டவை பற்றி துருக்கி - வங்கதேசம் விவாதிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு வங்கதேசம் 18 MKE போரான் 105 மிமீ ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்கியது. அதன் எண்ணிக்கையை கூட்ட வங்கதேசம் நினைத்துள்ளது. இன்னும் 200 MKE போரான் ஹோவிட்சர்களை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது. அதேபோல் ஒட்டோகர் துல்பர் லைட் டாங்கிகளையும் வாங்க வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தை எடுத்து கொண்டால் முன்னாள் பிரதமர் ஹசீனா காலத்தில் துருக்கியிடம் இருந்து Bayraktar TB2 வகை ட்ரோன் உள்பட பல ஆயுதங்கள் வாங்கப்பட்டது. கடந்த 2018 முதல் துருக்கி - வங்கதேசம் இடையே பாதுகாப்பு துறையில் உறவு என்பது வளர்ந்து வருகிறது. ஆனால் ஹசீனா நம் நாட்டுக்கு எதிராக எதையும் செய்யவில்லை. மாறாக இப்போதைய இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நம் நாட்டுக்கு எதிராக துருக்கியின் ஆயுதங்களை பயன்படுத்தி வருகிறார். ஏற்கனவே பாகிஸ்தானை அரவணைத்து நமக்கு குடைச்சல் கொடுக்கும் துருக்கி இப்போது வங்கதேசத்துடன் நெருக்கம் காட்டுவது நம் நாட்டுக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications