இந்தியா உஷாராக வேண்டிய நேரமிது.. வர்த்தக போரை தீவிரப்படுத்தும் டிரம்ப்! நம்மால் தப்பிக்க முடியுமா?
மாஸ்கோ: உக்ரைன் மீதான போரை நிறுத்தவில்லை எனில், ரஷ்யா மீது 50% வரியை போடுவோம் என டிரம்ப் அச்சுறுத்தியிருக்கிறார். அப்படி மட்டும் நடந்தால் இந்தியா உட்பட பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும். இதிலிருந்து இந்தியாவால் தப்பிக்க முடியுமா? என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
டிரம்ப் இந்த வரி மூலம், வர்த்தக போரை சர்வதேச அளவுக்கு விரிவுப்படுத்துவார். அது ஆக்டோபஸ் கைகளை போல நீண்டு இந்தியாவையும் இறுக்கி பிடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதாவது இந்தியாவில் ஜவுளி துறை மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது. இங்கிருந்து ஜவுளிகள் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதியாகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணி அதிகரிக்கிறது. இந்தியாவுக்கு அமெரிக்க டாலர்கள் அதிக அளவில் கிடைக்கிறது. இந்த நேரத்தில் ரஷ்யா மீது அமெரிக்கா 50% வரியை போடுகிறது எனில், ரஷ்யா சும்மா இருக்குமா? அதுவும் பதிலுக்கு வரியை போடும். எனவே இரு நாட்டு பொருட்களும் சந்தையில் விற்பனையாகாமல் தேங்கி நிற்க தொடங்கும்.
உலக அளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் இவை. இந்த இரண்டு நாடுகளும் வர்த்தக போரில் இறங்குகிறது எனில், மற்ற நாடுகளிலும் வர்த்தகம் பாதிக்கப்படும். இந்தியாவிலிருந்து ஜவுளி ஏற்றுமதியானாலும் அது முன்பு இருப்பதை போன்று விற்காது. ஏனெனில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தற்போது மந்தநிலையை எதிர்கொண்டிருக்கும். எனவே இந்திய ஜவுளி ஏற்றுமதி அப்படியே குறைய தொடங்கும். இதன் மூலம் அந்நிய செலாவணி குறையும்.
ஒரு கட்டத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் குறைந்து இறக்குமதியாகும் பொருட்கள் அதிகரிக்கும். இப்படி மட்டும் நடந்தால் கையில் இருக்கும் அமெரிக்க டாலரின் இருப்பை காலி செய்துவிடும். ஏற்றுமதி குறைவதால் வேலை இழப்புகள், அதை தொடர்ந்து பணவீக்கம், விலைவாசி உயர்வு இதெல்லாம் சேர்ந்து இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் போன்று இந்தியாவிலும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை உருவாகும்.
அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மந்த நிலை ஏற்பட்டால், இந்தியாவில் என்ன நடக்கும் என்பதற்கான உதாரணங்கள்தான் இது. மறுபுறம் ரஷ்யாவில் மந்த நிலை ஏற்பட்டால், இந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் இதே போன்று இருக்கும்.
அதாவது ரஷ்யாவிலிருந்து நாம் எண்ணெய் வாங்குகிறோம். அதேபோல இங்கிருந்து உரங்கள், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்கிறோம். ரஷ்யாவில் மந்த நிலை வந்தால் யாரும் பெரியதாக செலவு செய்ய மாட்டார்கள். அப்படி இருக்கையில் இந்திய பொருட்கள் அங்கு விற்பனை ஆகாது. எனவே இந்தியாவின் வர்த்தகம் பாதிக்கப்படும். என்ன நடந்தாலும் நம்மால் எண்ணெய் கொள்முதலை நிறுத்த முடியாது. எனவே, ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தக பற்றாக்குறை ஏற்படும்.
இது எல்லாவற்றுக்கும் காரணம் அமெரிக்காவின் வரிதான். எனவே இந்த வரி பாதிப்பிலிருந்து தப்பிக்க வேண்டும் எனில், பிரிக்ஸ் போன்ற அமைப்பிலும், அணிசேரா நாடுகள் அமைப்பிலும் இந்தியா தன்னுடைய வர்த்தக உறவுகளை வலுப்படுத்த வேண்டும். பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில், பிரிக்ஸ் கரன்சியை உருவாக்க இந்தியா ஒத்துழைக்க வேண்டும். இப்படியெல்லாம் நடந்தால், உலகளாவிய வர்த்தக பாதிப்பிலிருந்து ஓரளவுக்கு மீள முடியும்.












Click it and Unblock the Notifications