கனடாவில் குடியுரிமை கட்டுப்பாடுகளுக்கு தளர்வு.. இந்தியர்களுக்கு குட் நியூஸ்! இது நல்லா இருக்கே!
ஒட்டாவா: கனடா மக்கள், அந்நாட்டை தவிர வேறு நாடுகளில் குழந்தையை பெற்றால், முதல் தலைமுறை குழந்தைக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. இரண்டாவது தலைமுறை குழந்தைக்கு குடியுரிமை கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் அனைத்து தலைமுறை குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடைக்கும் வகையில் தற்போது அந்நாட்டு அரசு, சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான மசோதா தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
கனடாவின் குடியுரிமை பெற்றவர்கள், வெளிநாட்டில் குழந்தையை பெற்றெடுத்தாலும், அக்குழந்தைக்கு கனடாவின் குடியுரிமை கிடைக்கும். ஆனால், இந்த குழந்தை கனடாவின் குடியுரிமையை பெற்றிருந்தாலும் வளர்ந்து திருமணமாகி, வெளிநாட்டில் குழந்தையை பெற்றால், அதாவது இரண்டாவது தலைமுறை குழந்தைக்கு கனடா குடியுரிமையை கோர முடியாது என்று சட்டம் இருந்தது. இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த நிலையில், தற்போது இந்த சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. அதன்படி இனி எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் கனடாவின் குடியுரிமையை பெற்றுக்கொள்ளலாம்.

குடியுரிமையும், நாடுகளும்
இந்த சட்டத்திருத்தம் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்திருத்தத்திற்கு இந்தியர்கள் உட்பட பல்வேறு வெளிநாட்டை சேர்ந்த மக்களும் வரவேற்பு தெரிவித்திருக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்தியர்கள் குடியுரிமையை பெற அதிக அளவில் விரும்புகின்றனர். அமெரிக்காவில் கூட இதற்கு முன்னர் ஒரு சட்டம் இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் அமெரிக்க எல்லைக்குள் பிறந்த குழந்தைகளுக்கு அந்நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், டிரம்ப் வந்த பிறகு இந்த சட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இது இந்தியர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்து. இப்படி இருக்கையில்தான் கனடா அரசு, குடியுரிமை தொடர்பான சட்டத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது.
கனடாவின் பழைய சட்டம்
அதாவது இந்தியாவை சேர்ந்த 'சீதா' என்பவர் கனடாவுக்கு சென்று அங்கு குடியுரிமை பெறுகிறார். அவர் இந்தியாவுக்கு வந்திருக்கும்போது 'ராதா' எனும் குழந்தையை பிரசவிக்கிறார் எனில், ராதாவுக்கு கனடா நாட்டின் குடியுரிமை வழங்கப்படும். ஆனால் இதே ராதா, வளர்ந்து திருமணமாகி, தனது தாயை போல, இந்தியாவுக்கு வந்து, 'ராதிகா' எனும் குழந்தையை பிரசவிக்கிறார் எனில் அக்குழந்தைக்கு கனடாவின் குடியுரிமை வழங்கப்படாது. ஏனெனில் 'ராதிகா ' இரண்டாம் தலைமுறை குழந்தை. இதுதான் முன்னர் இருந்த சட்டமாகும்.
புது சட்டமும் வழக்கும்
இந்த சட்டத்தினால் கனடாவை சேர்ந்த பலரின் வாரிசுகளுக்கு குடியுரிமை கிடைக்காமல் போனது. எனவே அந்நாட்டு நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடுத்திருந்திருந்தனர். இந்த வழக்குகள் மீது கடந்த 2023ல் கனடாவின் 'ஒன்டாரியோ' உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த தீர்ப்பு மிகுந்த கவனம் பெற்றிருந்தது. அதாவது, கனடாவுக்குள் வந்து ஒருவர் குடியுரிமை பெற்றுவிட்டால் அவர் கனடா நாட்டை சேர்ந்தவர்தான். எனவே அவரது வம்சாவளியினருக்கு குடியுரிமை மறுப்பது சரியில்லை என்று கூறியிருந்தது. மட்டுமல்லாது பழைய குடியுரிமை சட்டத்தின் அம்சங்களையும் நீக்கியிருந்தது.
இதனை எதிர்த்து அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்படவில்லை. ஏனெனில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்கும் கனடாவில் தற்போது போதுமான உழைப்பு சக்தி இல்லை. எனவே கனட மக்கள் தொகையை அதிகரிப்பதற்காக, நீதிமன்ற உத்தரவை அரசு ஏற்றுக்கொண்டது.
இந்தியர்களுக்கு ஹாப்பி நியூஸ்
உத்தரவை அடிப்படையாக கொண்டு சி-3 எனும் புதிய குடிரியுரிமை திருத்த மசோதாவை ஆளுங்கட்சி சார்பில், நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது, கனடாவின் குடியுரிமை பெற்றவரின் அனைத்து சந்ததியினருக்கும் இனி குடியுரிமை வழங்கப்படும். இதற்கான அளவுகோள் 3 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது கனடாவில் 3 ஆண்டுகள் வசித்திருந்தால் போதும், நீங்கள் எங்கு குழந்தை பெற்றாலும் அக்குழந்தைக்கு கனடாவின் குடியுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டினர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் அமெரிக்காவும் இதுபோன்ற திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications
