For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சே குவேரா... ஒரு மனிதாபிமான போராளி பிறந்த நாள் இன்று!

By Shankar
Google Oneindia Tamil News

இந்த உலகம் மகா சுயநலமானது, போராட வருபவர்கள் கூட தன் இனம், தன் மதம், தன் மொழி, தன் நாடு என்றுதான் போராட வருவார்கள். அப்படித்தான் பல புகழ்பெற்ற போராளிகளை உலகம் கண்டிருக்கின்றது, அதாவது கலைஞரின் வசனத்தில் சொல்வதென்றால் "அந்த பொதுநலத்திலே சுயநலமும் கலந்திருக்கின்றது" மறுக்க முடியாது.

ஆனால் முதலும், கடைசியுமாக மனித அடக்குமுறைகு எதிராக, ஒருவன் நாடு கடந்து, எல்லை கடந்து, போராடும் மக்களுக்காக சென்று போராடி உயிர்விட்டான் என்றால் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரே பெயர் சே குவேரா.

அவர் இயற்பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா (ஜூன் 14, 1928), அதாவது வாய் நிறைய கூழாங்கற்களை போட்டு, ஸ்பானிய‌ மொழியினை உச்சரித்தால் வரும் பெயர். சே என்பது ஒரு வியப்புச்சொல் என்கின்றார்கள், அதாவது நமது தமிழில் வியப்பின் உச்சத்தில் ஒரு ஆச்சரியமாக‌ சொல்வோம் அல்லவா? அந்த ஆச்சரியமான‌ உச்சரிப்புத்தான் என்கின்றார்கள்.

Che Guevara 89th birthday

அர்ஜெண்டினாவில் பிறந்தவர், தந்தை இடதுசாரி, இவர் வீட்டில் பெரிய குடும்பத்தின் செல்லப் பிள்ளை. அக்காலங்களில் ஸ்பெயினை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடந்த காலம், குவேரா அந்த பின்னணியில் வளர்ந்தார். ஒரு மனிதன் படிக்கவேண்டிய அத்தனை வரலாறுகளை, அதாவது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் என சகலரையும் படித்தார்.

முக்கியமாக தென் அமெரிக்க நாடுகளில் முதல் புரட்சியாளனாக கருதபடும் ஜோஸ் மார்த்தி எனும் பெரும் போராளியினை குருவாகவே நினைத்து வளர்ந்தார்,
பின் மருத்துவ கல்லூரி மாணவர்தான், ஆயினும் விடுமுறையில் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்காவைச் சுற்றினார். மனம் நொந்தார்.
காரணம் இந்த உலகிலே இயற்கை செல்வங்கள் கொட்டிகிடக்கும் பூமி அது, பெய்யாத மழை இல்லை, விளையாத பொருள் இல்லை. தரையினை தோண்டினால் முழுக்க கனிம வளம். ஆனால் மக்கள் ஏழைகள், இதுதான் அவரைச் சிந்திக்க வைத்தன.
அப்பொழுது கியூபா புலிக்கு தப்பி சிங்கத்திடம் விழுந்திருந்தது, அதாவது ஸ்பெயினிடமிருந்து சுதந்திரம் வாங்கி, அமெரிக்க கைப்பொமையான பாடிஸ்டாவிடம் சிக்கி இருந்தது. பிடல் காஸ்ட்ரோ கைதுசெய்யபட்டு நிபந்தனை பேரில் விடுவிக்கபட்டிருந்தார்.

Che Guevara 89th birthday

பொதுவாக தென்னமெரிக்க நாடுகள் மகா வித்தியாசனமானவை, எல்லா ஊழலையும் ஆள்பவர் செய்வார், இதுக்குமேல் சுரண்ட ஒன்றுமில்லை என்றவுடன் சொத்து பத்துக்களோடு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார், அடுத்த அதிபர் வருவார், பின் அவர் சொத்து சேர்க்க ஆரம்பிப்பார்.

கனிம வளத்திற்காக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் இப்படி ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தன. அப்படி கியூபாவின் பெரும் செல்வம் கரும்பும் தன் சீனியும்.
நான் இரும்பு மனிதன், எனக்கு பின் அமெரிக்கா இருக்கின்றது என காட்டாட்சி நடத்திகொண்டிருந்த பாடிஸ்டாவிற்கு எதிராக தாககுதல்களை நடத்திக் கொண்டிருந்தார் பிடல் காஸ்ட்ரோ, அது தோல்வியில் முடிந்துகொண்டிருந்தது.
அப்பொழுதுதான் அங்கு சென்றார் சே. அதுவரை நடந்த கொரில்லா முறையினை மாற்றினார். மிக துல்லியமான தாக்குதல்கள். அதன் பிண்ணணியில் மக்களை இணைக்கும் அரசியல் என கியூபாவில் பெரும் மாற்றத்தை நிகழ்த்திக் காட்டினார், பாடிஸ்டா பறந்தே விட்டார். (பெரும் வரலாறு இது, விரிவாக சொன்னால் 1 வாரம் ஆகும்).

Che Guevara 89th birthday

ஆட்சி காஸ்ட்ரோவின் கைகளில் வந்தது. உலகெல்லாம் மிரட்டிய அமெரிக்காவிற்கு தன் காலடியில் பெற்ற தோல்வி சகிக்கவில்லை. ஆனாலும் மக்கள் சக்திமுன் என்ன செய்ய?

ஆட்சிக்கு வந்த காஸ்ட்ரோ, சே க்கு பெரும் பொறுப்புக்களை கொடுக்க முன்வந்தார், கிட்டதட்ட நம்பர் 1 இடம். நினைத்திருந்தால் சாகும்வரை கியூப ராஜதந்திரியாக வாழும் வாய்ப்பு சே விற்கு வந்தது.

பதவியினை துச்சமாக நினைப்பவன் போராளி. தனக்கு அதில் விருப்பமில்லை. உலகெல்லாம் போராடும் மக்களுக்கு உதவுவதே தன்பணி என சொல்லிவிட்டு , யாருக்கும் சொல்லாமல் கண்டம் கடந்தார்.

ஆம் எல்லை கடந்து கியூப விடுதலைக்கு போராடியவர், இப்பொழுது ஆப்ரிக்காவின் காங்கோ நாட்டிற்கு வந்தார்.

ஆனால் ஆப்ரிக்கர்களை இணைப்பது அவருக்கு தமிழ்நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைப்பது போலவே வெகு சிரமாக இருந்தது, ஆளாளுக்கு ஒரு நியாயம் பேசிக்கொண்டிருந்தார்கள். மனம் நொந்த சே மீண்டும் தென்னமெரிக்கா திரும்பினார்.
இந்த காலகட்டத்திற்குள் சே வினை காணாத அமெரிக்கா, காஸ்ட்ரோ பதவி சண்டையில் கொன்றுவிட்டதாகக் கதை கட்டிவிட்டது. காஸ்ட்ரோவிற்கும் பதில் சொல்லத் தெரியவில்லை, காரணம் சே இருக்குமிடம் அவருக்கும் தெரியவில்லை,
ஆனால் இப்படிச் சொன்னார், "எனது நண்பன் நிச்சயம் எங்காவது அடிமைபட்ட இனத்திற்காக உழைத்துகொண்டிருப்பான்".

Che Guevara 89th birthday

மீண்டும் சே வந்து மக்களிடம் தோன்றினார். தென் அமெரிக்கா முழுக்க அவருக்கு ஆதரவு பெருகிற்று. வாழும் லெனினாக கூட அல்ல, அதற்கும் மேலாக உலகம் அவரை கொண்டாடிற்று, அவரின் மனிதநேயம் அப்படி.

கியூப அரசின் சார்பாக உலகெல்லாம் சுற்றினார், உலகென்றால் அன்று சுதந்திரம் பெற்றிருந்த நாடுகளின் மக்களைக் காணச் சென்றார். இந்தியாவுக்கும் வந்து இந்திய விவசாயிகளின் நிலையினை கண்டு அதனை நேருவுடன் விவாதித்தார். இந்திய கியூப உறவுகள் தொடரவேண்டும் என்றார்.

இலங்கைக்குச் சென்று தேயிலை தோட்ட தமிழர்களை சந்தித்தார். உலகிலே மலையக தமிழர்களையும் மனிதர்களாக மதித்து சந்தித்த தலைவர் கடந்த வருடம்வரை அவர்தான். இந்த வருடம் தான் மோடி இரண்டாவதாக இடம் பிடித்தார்.

இப்படியாக உலகெல்லாம் கொண்டாடபட்ட அந்த சே, அமெரிக்காவிற்கு எப்படி எரிச்சலூட்டியிருப்பார். அமெரிக்க தலைமை வேறுவிதமாக சிந்தித்தது, பக்கம் பக்கமாக அறிக்கைகள் மேலிடத்திற்கு அனுப்பபட்டன. அவை இப்படி சொன்னது:
உலகெங்காம் பெரும் செல்வாக்கினைப் பெற்றுவரும் சே, இப்படியே விட்டால் தென் அமெரிக்க நாடுகளை இணைத்து சோவியத் ஒன்றியம் போல ஒன்றை எளிதாக அமைத்துவிடலாம் ( சாத்தியம் இருந்தது). அதாவது மத உரிமைகளில் அவர் விட்டுக்கொடுத்தால் எல்லா கத்தோலிக்க நாடுகளும் இணையத் தயார். ஒரு லெனினை,ஸ்டாலினை மண்டையில் போட்டு தள்ளாததன் விளைவு, நமக்கு நிரந்தர எதிரியினை உருவாக்கிவிட்டது. சே உழைக்கும் மக்களால் கொண்டாடபடுகின்றார் என்றால், அதன் மறுஅர்த்தம் அமெரிக்கவிற்கு அவரின் வளர்ச்சி நல்லதே அல்ல."

அதற்காக சே வினை விமான நிலையத்தில் சுடமுடியாது. சே வின் பெரும் பலவீனம் அல்லது பெரும் பலம் எங்கு உரிமை போராட்டம் நடக்கின்றதோ அங்கு நிற்பது, சண்டையோடு சண்டையாக போட்டு தள்ள திட்டமிட்டது அமெரிக்கா.
சிஐஏ களத்தில் இறங்கிற்று, காஸ்ட்ரோ கடும் பாதுகாப்பில் கியூபாவில் வாழச்சொல்லியும் சொல்லாமல் கொள்ளாமல் பறந்தார் சே.

Che Guevara 89th birthday

சிஐஏ கண்ணி வைத்த இடம் பொலிவியா, அங்கு சண்டையினை தீவிரப்படுத்தினார்கள், வழக்கம்போல வந்து நின்றார் சே. சண்டை உச்சத்தை அடைந்தது.

அக்டோபர் 9, 1969... அந்த மாலைபொழுதில் ஒரு ஆற்றைக் கடந்தார். அங்கு ஆடுமேய்த்துகொண்டிருந்த பெண்மணியினை பார்த்து பரிதாபபடு 50 பெசோ கொடுத்து நலம் விசாரித்து சென்றார், அப்பெண்மணி சி.ஐ.ஏ உளவாளி என்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.

அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்தன. அக்கிராமத்தின் ஒரு பள்ளியில் சிறைவைக்கபட்டார். சுற்றிப் பார்த்து அவர் சொன்ன சொல் வரலாற்றில் நின்றது, "இது என்ன இடம், பள்ளி கூடமா? இவ்வளவு அசுத்தமா?, நல்ல பள்ளிக் கூடங்கள் நாட்டின் பெரும் தேவையல்லவா!"

சாகும்பொழுதும் எப்படி சிந்தித்திருக்கிறார் பார்த்தீர்களா? இதுதான் சே.
விசாரித்து தீர்ப்பளித்தால் சிக்கல் பெரிதாகும். உலகம் கொந்தளிக்கும் எனக் கருதிய அமெரிக்கா அங்கேயே சுட்டுகொல்லத் தீர்மானித்தது. நெஞ்சை நிமிர்த்தி இரு கைகளையும் விரித்து நின்றார் அவர், அன்று அவருக்கு வயது வெறும் 39.

எல்லை கடந்து வந்து தனது நாட்டிற்காய் போராடிய ஒப்பற்ற தலைவன் சே வின் மரணம் கியூப மக்களை மட்டுமல்ல, உலக மக்களையே சோக கடலில் ஆழ்த்தியது
அவரை சுட்டவீரன் சொன்னான், "முகத்தில் தாடியோடு, கலைந்த முடியோடு அவர் கைவிரித்து நின்ற சே வின் காட்சி அப்படியே இயேசுபிரானை கண்முன் நிறுத்திற்று" என சொல்லி பின்னர் அழுதான்.

அது நிதர்சனமான உண்மை. ஒடுக்கபட்டோருக்கு போராடிய இயேசுவின் வரிசையில் நிச்சயம் இந்த நாத்திக சே விற்கும் இடம் உண்டு.

ஒரு தேசத்தில் போராடச் சென்றபொழுது அவரிடம் கேட்டார்கள், "எங்களுக்காக நீங்கள் ஏன் போராடவேண்டும்? என்ன அவசியம்"

ஆஸ்மா நோயாளியான அவர், அன்று நோயின் அதிக தாக்கத்திலும் மெதுவாக சொன்னார், "அக்கிரமத்தினை கண்டு, விடுதலைக்காக போராடினால் நீ நிச்சயமாக எனது நண்பன்"

இன்று அவரின் பிறந்த நாள். அவரை நினைவு கூற கம்யூனிஸ்டாகவோ அல்லது தென் அமெரிக்கனாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.

சக மனிதனை நேசிக்கத் தெரிந்த, உலகெல்லாம் சிதறி ஈழத் தமிழரை போல அகதிகளாய் வாழும், சிரியாவிலிருந்து, லிபியாவிலிருந்து, பர்மாவிலிருந்து பராரியாய் திரியும் மனிதர்களைப் பார்த்து ஒரு துளி கண்ணீர் விடும் மனம் போதும்.
மகான்களும், அவதாரங்களும் மட்டும் நிலையான அடையாளத்தைப் பெறுவதில்லை, மனிதனை மனிதனாக நேசிக்கத் தெரிந்த யாரையும் இந்த உலகம் மறக்காது.
அதில் சே என்றும் முதல் இடத்தில் இருப்பார்.

ஈழ மலையகத்தில் அவர் தன் கையினால் நட்டுவைத்த மரம் இன்றும் உண்டு. அது பெரிதாக வளர்ந்திருக்கும் அளவிற்கு இன்று அங்கு பிரச்சினைகளும் வளர்ந்திருக்கின்றன.

ஒன்றுமட்டும் உண்மை, சே வின் சம காலத்தில் ஈழப் போராட்டம் தீவிரமடைந்திருந்தால், நிச்சயம் அவரோடு இணைந்து கொள்ள சே ஓடிவந்து முதல் ஆளாக நின்றிருப்பார்.

காரணம் இதுவரை வரலாறு கண்ட மனிதநேயமிக்க போராளிகளில் எல்லை கடந்து மனிதம் வாழட்டும் எனப் போராடிய ஒரே போராளி சே மட்டுமே. சே குவாரேவிடம் தன்னலம் என்பதெல்லாம் இல்லை, அவர் மனதில் நிறைந்திருந்ததெல்லாம் மானிட நேயம் மட்டுமே.

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு என்றான் வள்ளுவன், சே உயிரையும் கொடுத்து உயர்ந்து நின்றான், வரலாற்றில் நின்றான்.

அவனுக்கு அழிவே இல்லை.
அந்த மனித நேயமிக்க மாவீரனான சே குவாரேவிற்கு அஞ்சலிகள்!

- ஸ்டான்லி ராஜன்

English summary
Today the Great warrior Che Guevara's birthday today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X