ஓவர்நைட்டில் உடைந்த 62 அணைகள்.. சீனாவை உலுக்கிய பேரழிவு! 2.3 லட்சம் பேர் மரணம்? என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: "வானமே இடிந்து, பூமியே பிளந்தது போல் பயங்கர சத்தம் கேட்டது" - 1975 ஆகஸ்ட் 8ம் தேதி நள்ளிரவில் சீனாவின் பான்கியாவ் அணை உடைந்தபோது நேரில் பார்த்தவர்கள் அந்த சம்பவத்தை இப்படித்தான் நினைவுகூர்ந்தார். 'அழிக்க முடியாத இரும்பு அணை' என அழைக்கப்பட்ட அந்த அணை உடைந்ததில், வரலாற்றின் மிக மோசமான அணை பேரழிவுகளில் ஒன்று ஏற்பட்டது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் 1951-52ல் கட்டப்பட்டது பான்கியாவ் அணை.. வெள்ளத்தை கட்டுப்படுத்தி, பாசனம் மற்றும் மின்சார உற்பத்திக்காக இந்த அணை உருவாக்கப்பட்டது. பின்னர் சோவியத் பொறியாளர்களின் உதவியுடன் அந்த அணையை மேலும் வலுவாக்கினர். இதனால் இதை இரும்பு அணை என்று அழைக்கப்பட்டது.

China flood world

சீனா

மாவோ சேதுங்கின் ஆட்சியில் இயற்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏராளமான அணைகள் கட்டப்பட்டன. அப்போது அவர்கள் கட்டிய அணையின் பிரதான நோக்கமே அதிகளவில் நீரை சேமித்து வைப்பது தான். ஆனால் இப்படி நீரை சேமிப்பதில் அதிக கவனம் செலுத்தியதால், வெள்ளநீரை வெளியேற்றும் திறனை அவர்கள் போதியளவு கருத்தில் கொள்ளவில்லை. இதுவே பின்னர் ஆபத்தாக மாறியது.

இந்த பேரழிவுக்கு உடனடி காரணமாக அமைந்தது டைஃபூன் நினா. 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 7 வரை வெறும் மூன்று நாட்களில் ஹெனான் மாகாணத்தின் சில பகுதிகளில் ஒரு வருடத்திற்கும் அதிகமான மழை கொட்டியது. லின்சுவாங் பகுதியில் மூன்று நாட்களில் 1,605 மி.மீ. மழையும், பான்கியாவ் பகுதியில் 1,422 மி.மீ. மழையும் பதிவானது. ஆகஸ்ட் 7ம் தேதி மட்டும் பான்கியாவில் 784 மி.மீ. மழை பெய்தது.

என்ன நடந்தது

இதனால் அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு சுமார் 13,000 கன மீட்டராக உயர்ந்தது. ஆனால் அணையின் நீரை வெளியேற்றும் திறன் சுமார் 1,700 கன மீட்டர் மட்டுமே. அதாவது நீர் வரத்தில் 10க்கும் குறைவான பங்கு நீரை மட்டுமே வெளியேற்ற முடிந்தது. கனமழையால் தொலைப்பேசி, வானொலி உள்ளிட்ட தகவல் தொடர்புகளும் பாதிக்கப்பட்டன. இதனால் அதிகாரிகளால் உடனடியாக மேலிடத்திடம் எந்தவொரு தகவலையும் தெரிவிக்க முடியவில்லை.

தகவல் தொடர்பு முடங்கியதால் எப்போது, எவ்வளவு தண்ணீரை வெளியேற்றுவது என்பதில் அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளுக்கு உரிய நேரத்தில் வெள்ள எச்சரிக்கையும் சென்றடையவில்லை. ஆகஸ்ட் 8 அதிகாலை பான்கியாவ் அணை உடைந்ததும், சுமார் 701 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் ஆறு மணி நேரத்தில் வெளியேறியது. 10 முதல் 15 கி.மீ. பரவிய வெள்ளம் மணிக்கு 30 முதல் 50 கி.மீ. வேகத்தில் பாய்ந்தது. பான்கியாவ் அணை உடைந்து, அதன் நீர் வெளியேறிய வேகத்தில் அதன் பாதையில் இருந்த அடுத்தடுத்த சிறிய அணைகளும் கூட உடைந்தது.

62 அணைகள் உடைந்தன

ஷிமான்டன் அணை உள்ளிட்ட மொத்தம் 62 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இந்த சம்பவத்தில் உடைந்ததாக கூறப்படுகிறது. வெள்ளத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து துல்லியமான தகவல்களை சீனா வெளியிடவில்லை. ஆரம்பக்கட்டமாக சுமார் 26,000 பேர் உயிரிழந்ததாக 2017ல் வெளியான ஆய்வு ஒன்று மதிப்பிட்டது.

பின்னர் வெள்ளத்தை தொடர்ந்து ஏற்பட்ட பசி, நோய் மற்றும் தொற்றுநோய்களால் மேலும் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. அதேநேரம் மொத்த உயிரிழப்பு 2.3 லட்சம் வரை இருக்கலாம் என சில வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். சரியான உயிரிழப்பு எண்ணிக்கை இன்றளவும் உறுதியாக தெரியவில்லை. இருப்பினும், பாதிப்புகள் என பார்த்தால் சுமார் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சீனா செய்த வேலை

இந்த பேரழிவின் மற்றொரு அதிர்ச்சியான அம்சம் சீனா செய்த வேலை தான். அதாவது சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். இதுபோல ஒரு பேரழிவு தாக்கியதை கூறினால் அதனால் தங்கள் இமேஜ் பாதிக்கப்படும் என கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் கருதியுள்ளனர். இதன் காரணமாகவே அணைகள் உடைந்தது மற்றும் உயிரிழப்புகள் குறித்து சீனா கடைசி வரை வாய் திறக்கவே இல்லை. இதனால் பேரழிவின் உண்மையான தீவிரம் பல ஆண்டுகளுக்குப் பிறகே உலகிற்கு தெரியவந்தது.

தற்போது நேபாளத்தின் பீம்தோ- கோஷி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளத்துடன் பான்கியாவ் சம்பவம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது. இயற்கை பேரிடரை முழுமையாகத் தடுக்க முடியாவிட்டாலும், மோசமான திட்டமிடல், தாமதமான எச்சரிக்கை, நிர்வாகத் தவறுகள் ஆகியவை அதன் பாதிப்பை பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்பதே பான்கியாவ் அணை பேரழிவின் மிகப்பெரிய பாடமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+