
எதிர்ப்பை மீறி தைவான் பயணம்- அமெரிக்காவின் நான்சி பெலோசி, உறவினர்களுக்குத் தடை விதிக்க சீனா முடிவு!
பெய்ஜிங்: தங்களது எதிர்ப்பை மீறி தைவானுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் நான்சி பெலோசி மற்றும் அவரது உறவினர்களுக்கு தடை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.
தைவான் தனிநாடு என்ற போதும் தம்மை ஒரிஜனல் சீன மக்கள் குடியரசு நாடு என்கிறது. 1970கள் வரை உலக நாடுகளும் தைவானையே ஒரிஜனல் சீன குடியரசு என அங்கீகரித்தது. அதன்பின்னர் கம்யூனிச சீனாவையே உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதனால் தைவான் தனிநாடு என்ற போது இன்னொரு பக்கம் சீனாவையும் உலகம் ஏற்றுக் கொண்டிருக்கின்றன.

தைவான், சீனா விவகாரத்தில் உலக நாடுகள் தொடர்ந்து குழப்பமான நிலைப்பாட்டைத்தான் பின்பற்றுகின்றன. தைவானை சார்ந்திருக்கும் தொழில்நுட்பங்கள் அந்நாட்டை உலக நாடுகள் கைவிடவும் மறுக்கின்றன. ஆனால் சீனாவோ, தைவான் என்றைக்கும் எங்கள் நாட்டின் ஒருபகுதி என்கிறது.
இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு பாணியில், தைவான் மீது சீனா ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தும் என கூறப்பட்டு வருகிறது. சீனாவும் தைவான் பிராந்தியத்தில் போர் ஒத்திகை, வான்பரப்புக்குள் போர் விமானங்கள் ஊடுருவல் என பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இப்பின்னணியில்தான் அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி, சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி தைவானுக்கு பயணம் மேற்கொண்டார். இதனை சீனா கடுமையாக கண்டித்துள்ளது. மேலும் தைவான் கடற்பரப்பில் ஏவுகணைத் தாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகளையும் சீனா மேற்கொண்டு வருகிறது. அத்துடன், அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவர் நான்சி பெலோசி, சீனாவின் கடும் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், தைவானில் பயணம் மேற்கொண்டது, சீன உள்விவகாரங்களில் தலையிட்ட செயலாகும். இது, சீன இறையாண்மை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு விளைவித்துள்ளது. பெலோசியின் ஆத்திரமூட்டல் செயல் குறித்து, சீன மக்கள் குடியரசின் தொடர்புடைய சட்டத்தின்படி, பெலோசி மற்றும் அவரது உறவினர்களுக்குத் தடை விதிக்க சீனா திட்டமிட்டுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தைவானை ஒன்னும் செய்ய முடியாது.. நாங்க இருக்கோம்! கொம்பு சீவிவிடும் நான்சி பெலோசி! உற்றுநோக்கும் சீனா
இதனிடையே பெலோசியின் தைவான் பயணம், அப்பட்டமான ஆத்திரமூட்டலாகும். ஆசியாவின் பாதுகாப்பை நேரடியாகச் சீர்குலைக்கும் என்று ரஷ்யாவின் பாதுகாப்பு அமைப்பின் துணைத் தலைவர் மெட்வதேவ் தெரிவித்தார்.
அதேபோல் 7 நாடுகள் குழு வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதாண்மை மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் நிலை பிரதிநிதிகள் தைவான் விவகாரம் பற்றி எதிர்மறையான அறிக்கையை வெளியிடுவது குறித்து, சீன வெளியுறவுத் துணை அமைச்சர் டெங்லீ கட்டளையைப் பின்பற்றி சீனாவுக்கான தொடர்புடைய ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத் தூதர்களை அவசரமாக வரவழைத்து சந்தித்து, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.