சீனாவின் அசுர வளர்ச்சிக்கு உற்பத்தி காரணம் கிடையாது! விஷயமே இதுதானாம்!
பெங்ஜிங்: இந்தியாவும், சீனாவும் ஒரே காலத்தில் சுதந்திரம் பெற்றிருந்தாலும், இன்று சீனா நம்மைவிட பல மடங்கு முன்னேறியிருக்கிறது. இதற்கு காரணம் உற்பத்தி மட்டும் கிடையாது என்று நிதி ஆராய்ச்சியாளர் ஹார்திக் ஜோஷி கூறியிருக்கிறார்.
நாம் 5 ஆண்டுகால வளர்ச்சியை திட்டமிட்டுக்கொண்டிருக்கையில், சீனா 50 ஆண்டு கால வளர்ச்சியை திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறது. அதன் வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணம் என்று ஜோஷி குறிப்பிட்டிருக்கிறார்.

லிங்க்ட்இன் தளத்தில் இது பற்றி எழுதியிருக்கும் அவர், "சீனாவில் உற்பத்தியாகும் பொருட்கள் விலை மலிவானது. இதனை வைத்து உலக சந்தையை சீனா கட்டுப்படுத்தி வருவதாக நமக்கு தோன்றலாம். ஆனால் இது உண்மை கிடையாது. உலக சந்தையை கட்டுப்படுத்த நிதி ஆதாரத்தை சீனா கையில் எடுத்திருக்கிறது. சீனாவுக்கு எதிராக இவ்வளவு வாய் பேசும் அமெரிக்காவே சீனாவை நம்பிதான் இருக்கிறது.
அதாவது அமெரிக்கா அந்நாட்டின் செலவுகளுக்காக வெளியில் கடன் வாங்கும். கடன் பத்திரங்களை விற்பதன் மூலம் இந்த கடனை அது வாங்குகிறது. இப்படி 34 டிரில்லியன் டாலர் அளவுக்கு அமெரிக்கா கடன் வாங்கியிருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், பெரும்பாலான கடன் பத்திரங்களை சீனாதான் வாங்கியிருக்கிறது. வாங்கிய பத்திரங்களை உடனடியாக திருப்பி கொடுத்துவிட்டு, கொடுத்த கடனை திரும்ப கொடு என சீனா கேட்டால் அமெரிக்கா மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும்.
வேறு ஒரு வழியிலும் அமெரிக்காவுக்கு இதனால் சிக்கல் இருக்கிறது. அமெரிக்கா ஆடம்பர நாடு, எனவே அதன் தேவைக்கு தொடர்ந்து கடன் வாங்கிக்கொண்டே இருக்கிறது. சீனாதான் கடன் கொடுக்கிறது. தீடீரென சீனா கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டாலும் அமெரிக்காவுக்கு சிக்கல்தான். இப்படி உலகம் முழுக்க சீனா தனது கடன் வலையை விரித்து வைத்திருக்கிறது. இலங்கை, மாலத்தீவு, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா என பல நாடுகள் சீனாவிடம் கடன்பட்டிருக்கின்றன.
இந்தியா போன்ற நாடுகள் 5 ஆண்டுகளின் வளர்ச்சியை மனதில் கொண்டுதான் திட்டங்களை வகுக்கின்றன. ஆனால், சீனா 50 ஆண்டுகளை மனதில் வைத்து வேலை பார்க்கிறது. இதுதான் சீனாவின் ஆதிக்கத்திற்கு முக்கிய காரணம். இன்றை தேதியில் சீனாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 3.2 டிரில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. சீனாவின் வங்கிகள் பல உலக பொருளாதாரங்களை விட அதிக மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்கின்றன.
கடன் வாங்கும் நாடுகளின் பொருளாதார விஷயங்களில் சீனாவின் தலையீடு இருக்கிறது. இதனால் சீனாவின் ஆதிக்கம் எல்லா இடங்களிலும் இருக்கிறது. உலகின் 70% அரிதான கனிம வளங்களை சீனா கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன் மூலம் மின்சார வாகனங்கள், செமிகன்டக்டர்கள் போன்ற துறைகளில் அதன் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தியா வர்த்தகம் செய்யும் வெளிநாடுகளில் துறைமுகங்கள், ரயில்வே வழித்தடங்கள், தொலைத்தொடர்பு வளங்கள் உள்ளிட்டவற்றை 5 ஆண்டுகளுக்கு வாடகைக்குதான் எடுக்கிறது. ஆனால் சீனா இதனை விலைகொடுத்து சொந்தமாக வாங்கிவிடுகிறது.
சீன தயாரிப்பு பொருட்கள்தான் உலக சந்தையை ஆட்டுவிப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அது கிடையாது" என்று ஜோஷி கூறியுள்ளார். சீனாவின் இந்த கடன் வலை மற்றும் சர்வதேச சந்தை ஆதிக்கம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்!












Click it and Unblock the Notifications