அடுத்த விக்கெட் அவுட்.. பொருளாதார நெருக்கடியால் இத்தாலி பிரதமர் ராஜினாமாவை ஏற்பதாக அதிபர் அறிவிப்பு
ரோம்: மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாததால் இத்தாலி பிரதமர் மரியா டிராகி தமது பதவியை ராஜினாமா செய்தார். மரியா டிராகியின் ராஜினாமா கடிதத்தை ஏற்பதாக இத்தாலி அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா அறிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி என்பது உலகில் பல நாடுகளை வாட்டி வதைத்து வருகிறது. தெற்காசியாவில் இலங்கை, பாகிஸ்தான் நாடுகளில் பொருளாதார பேரழிவில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளன.

இலங்கையில் பொருளாதார நெருக்கடிகளை சீரமைக்க கோரி மக்கள் தொடர்ச்சியான கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டங்களால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவும் ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவும் ராஜினாமா செய்தனர். இதனையடுத்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாகி உள்ளார் ரணில் விக்கிரமசிங்கே. அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் தூக்கியடிக்கப்பட்டு ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமரானார். அண்மையில் பிரிட்டனில் ஊழல் புகாரில் சிக்கியதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை பறிகொடுத்தார்.
இந்த பட்டியலில் இத்தாலியும் இணைந்துள்ளது. இத்தாலியின் மிக மோசமான பொருளாதார சீர்கேட்டை பிரதமர் மரியா டிராகி தடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் கலகக் குரல் எழுப்பின. இதனால் இத்தாலி நாடாளுமன்றத்தில் மரியா டிரோகி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் தமது பதவியை மரியா டிராகி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். ஆனால் அப்போது அவரது ராஜினாமாவை அதிபர் செர்ஜியோ மேட்டரெல்லா ஏற்கவில்லை. இத்தாலியில் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் தாம் ராஜினாமா முடிவில் இருப்பதாக மரியா டிராகி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அதிபரையும் சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து மரியா டிராகியின் ராஜினாமாவை ஏற்பதாக அதிபர் செர்ஜியோ அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications