தூக்கில் போடுவதை "லைவ்" செய்யுங்கள்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.. பரபரப்பில் எகிப்து
கெய்ரோ: எகிப்தில் பல்கலைக்கழகத்தில் காதலை ஏற்க மறுத்த 21 வயது மாணவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த சீனியர் மாணவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் அவர் தூக்கிலிடப்படுவதை தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த அந்தந்த அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் அரசின் நடவடிக்கையை மீறி பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இத்தகைய குற்றத்தில் ஈடுபடும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களை கொலை செய்வது, பலாத்காரம் செய்வது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு பலநாடுகள் உடனடியாக தூக்கு தண்டனை வழங்குகிறது. வரும் நாட்களில் இத்தகைய குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது எகிப்து நீதிமன்றம் கொலை வழக்கு ஒன்றில் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:

மாணவி கொலை
எகிப்தின் வடக்கு பகுதியில் மன்சூரா பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் 21 வயது நிரம்பிய நைரா அஷ்ரப் என்பவர் படித்து வந்தார். இவர் கடந்த மாதம் 20ம் தேதி மாணவியை மர்மநபர் கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில்சரிந்து விழுந்த நைரா அஷ்ரப் பரிதாபமாக இறந்தார்.

சீனியர் மாணவர் கைது
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவின. இதனால் இந்த சம்பவம் எகிப்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து நைரா அஷ்ரப்பை கொலை செய்ததாக பல்ககை்கழகத்தில் படிக்கும் சீனியர் மாணவரான 23 வயதான முகமது அடல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

காதலை ஏற்க மறுத்ததால் கொலை
இவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது முகமது அடல், மாணவி நைரா அஷ்ரப்பை ஒருதலையாக காதலித்தார். மேலும் மாணவி நைரா அஷ்ரப்பிடம் காதலை வெளிப்படுத்திய முகமது அடல் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார். இதனை மாணவி நிராகரித்துள்ளார். இதனால் கோபமடைந்த முகமது அடல் அவரை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

தூக்கு தண்டனை விதித்த நீதிமன்றம்
இதுதொடர்பான வழக்கு எகிப்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியால் வழக்கை விரைந்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதன்மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் முகமது அடலுக்கு மரண தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்ப உத்தரவு
மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மரண தண்டனை நிறைவேற்றுவதை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக நீதிமன்றம் சார்பில் நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1998ல் கெய்ரோவில் ஒரு பெண், அவரது 2 குழந்தைகளை 3 பேர் படுகொலை செய்தனர். இந்த வழக்கில் 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தூக்கிலிடுவது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications