For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பென் ஸ்டோக்ஸ்: பாகிஸ்தானை சோதித்த இங்கிலாந்தின் ‘நிதானம்’

By BBC News தமிழ்
|
பென் ஸ்டோக்ஸ்
Getty Images
பென் ஸ்டோக்ஸ்

“அவர் மன வலிமையில் ஓர் அரக்கன்” என்கின்றனர். “தோல்வியில் இருந்து மீண்டு வரும் திறன் படைத்தவர்” என்கின்றனர். “இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரர்களுள் ஒருவர் அவர்” என்கிறார் அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர்.

இரு உலகக் கோப்பைகளை இங்கிலாந்து பெறக் காரணமாக இருந்தவர் என்று பென் ஸ்டோக்ஸை கொண்டாடிக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகம்.

ஆனால் எப்போதும் பென் ஸ்டோக்ஸின் கிரிக்கெட் வாழ்க்கை இப்படியே இருந்ததில்லை. 2016-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கடைசி ஓவரில் வெற்றியை நழுவ விட்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டவர், கேலி செய்யப்பட்டவர் அவர். இப்போது இங்கிலாந்துக்கு இன்னொரு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததன் மூலம் மீண்டு வந்துவிட்டதை அழுத்தமாக அறிவித்திருக்கிறார்.

பென் ஸ்டோக்ஸின் இந்த அவதாரத்தை ஸ்டோக்ஸ் 2.0 என்று பரவலாக அழைக்கிறார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி பென் ஸ்டோக்ஸின் நிதானமான அதே நேரத்தில் உறுதியான ஆட்டம் இல்லாமல் இங்கிலாந்துக்கு வசமாகி இருக்காது. ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட சாம் கரனும், கேப்டன் ஜோஸ் பட்டலரும் இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

2019-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியிலும் அவரது ஆட்டமே இங்கிலாந்துக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தது. நியூஸிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் 84 ரன்களைக் குவித்தார்.

30 ஆண்டுகளுக்கு முன்பு 1992 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான ஆல் ரவுண்டர் இருந்தார். அவர் வாசிம் அக்ரம். கடைசி நேரத்தில் 18 பந்துகளுக்கு 33 ரன்களை எடுத்து பாகிஸ்தான் அணி கணிசமான ஸ்கோரை எட்டுவதற்கு உதவினார். அன்றைய போட்டியில் அவர்தான் ஆட்ட நாயகன். அதே போன்றதொரு பணியைச் இப்போது செய்திருக்கிறார் பென் ஸ்டோக்ஸ்.

பவர் பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து அணியை அவர் வெற்றிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 பந்துகளில் 52 ரன்கள் எடுத்திருக்கிறார். உண்மையில் இதுபோன்ற டி20 ஆட்டம் நெருக்கடி இல்லாத தருணத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கக்கூடும்.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான வீரேந்திர சேவக் இதைத்தான் குறிப்பிடுகிறார். அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் விராத் கோலி அடித்த 50 ரன்களுடன் ஸ்டோக்ஸின் இன்னிங்ஸை ஒப்பிடும் அவர், இந்தியா தோற்றதால் அது கண்டுகொள்ளப்படவில்லை என்கிறார்.

ஸ்டோக்ஸ்
Getty Images
ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸை பற்றி புகழும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் “அது ஓர் அற்புதமான கதை” என்கிறார். “முக்கியான தருணங்களில் திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்” என்று புகழ்கிறார்.

பென் ஸ்டோக்ஸை வீழ்த்திய போட்டி

2016-ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளும் இங்கிலாந்தும் மோதின. போட்டியின் கடைசி ஓவர் தொடங்கும்போது இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருந்தது.

ஏனெனில் கடைசி ஓவரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ரன்களை எடுத்தால்தான் வெற்றி பெற முடியும். பென் ஸ்டோக்ஸ் கடைசி ஓவரை வீசினார். ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பிராத்வைட் அடுத்தடுத்து நான்கு சிக்சர்களை அடித்து கோப்பையை பறித்துச் சென்றார்.

கையில் இருந்த உலகக் கோப்பையைப் பறிகொடுத்ததாக பென் ஸ்டோக்ஸ் மீது கடுமையான விமர்சனம் அப்போது எழுந்தது. ஒட்டுமொத்தப் பழியையும் அவரே ஏற்க வேண்டியிருந்தது.

“பென் ஸ்டோக்ஸ் எதையும் கற்றுக் கொள்ளாத பதற்றமான ஆள்” என்று அப்போது போட்டி முடிந்த பிறகான பேட்டியில் அவரை விமர்சித்திருந்தார் ஆட்ட நாயகன் விருது பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சாமுவேல்ஸ்.

அந்தப் போட்டிக்குப் பிறகு மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டவரானார். அதற்காக அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது. அதில் இருந்து மீண்டு வருவதற்கு சில காலம் பிடித்தது.

இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் ஸ்டோக்ஸுக்கான இடம் எப்போதும் ஒரே மாதிரியாக இருந்ததில்லை. ஏற்கெனவே பேட்ஸ்மேன்களும் ஆல்ரவுண்டர்களும் நிறைந்திருக்கும் அணியில் அவரது தேவை அவ்வப்போது கேள்விக்குறியானதுண்டு.

ஸ்டோக்ஸ்
Getty Images
ஸ்டோக்ஸ்

பென் ஸ்டோக்ஸ் தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ளக்கூடியவர். 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியும், தற்போதைய டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியும் அதை வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றிக்காக அயர்லாந்துக்கு நன்றி கூறியிருக்கும் ஸ்டோக்ஸ், தவறுகளை திருத்திக் கொள்ள அது உதவியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

31 வயதான ஸ்டோக்ஸ் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தியவர். டெஸ்ட் போட்டிகளில் அவர் 10 சதங்களை அடித்திருக்கிறார். 192 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உலகுக்கு அதிர்ச்சியளித்தார்.

வெற்றிக்குக் கைகொடுத்த ஸ்டோக்ஸின் நிதானம்

டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் 138 ரன்கள்தான் இலக்கு என்ற போதிலும் பவர் பிளேயிலேயே இங்கிலாந்து அணி தடுமாறத் தொடங்கிவிட்டது. தொடக்கம் முதலே பாகிஸ்தானிய பந்துவீச்சாளர்கள் மிரட்டினார்கள். இந்தியாவுடனான போட்டியில் சிறப்பாக ஆடி வெற்றிக்கு உதவிய இங்கிலாந்தின் தொடக்க ஆட்டகாரர் ஹேல்ஸ் சாஹீன் ஷா அப்ரிடியின் முதல் பந்திலேயே ஸ்டம்பை பறிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஸ்டோக்ஸ் களமிறங்கினார்.

4-ஓவரில் ஃபில் சால்ட் ஆட்டமிழந்ததால், இங்கிலாந்து அணிக்கு தடுமாற்றம் ஏற்பட்டது. ரன் குவிக்கும் வேகமும் உடனடியாகக் குறைந்தது. அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த ஜோஸ் பட்லர் 6-ஆவது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஸ்டோக்ஸ்
Getty Images
ஸ்டோக்ஸ்

ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறு முனையில் பென் ஸ்டோக்ஸ் நங்கூரமிட்டிருந்தார்.

10 ஓவர்கள் முடிந்திருந்த போது 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்களை எடுத்திருந்தது இங்கிலாந்து. 60 பந்துகளில் 61 ரன்களை எடுக்க வேண்டும், 7 விக்கெட்டுகள் கைவசம் இருக்கின்றன என்ற நிலையில் இங்கிலாந்து அணியின் கட்டுப்பாட்டிலேயே போட்டி இருந்தது.

தேவையான ரன்ரேட் குறைவாக இருந்ததால் அப்போது களத்தில் இருந்து ஹேரி ப்ரூக்கும், பென் ஸ்டோக்ஸும் மெதுவாக்வே ஆடத் தொடங்கினார்கள். 11 ஓவரில் 2 ரன்களும் 12-ஆவது ஓவரில் 3 ரன்களையும் மாத்திரமே அவர்கள் எடுத்தார்கள். விக்கெட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருந்தார்கள்.

அதே நேரத்தில் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தினார் ஸ்டோக்ஸ். 16-ஆவது ஓவரில் ஒரு சிக்சரும் பவுண்டரியும் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். அதன் பிறகு வெற்றி கடினமாக இருக்கவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Ben Stokes is game changer in in T20 Cup Finals: England and Pakistan T20 World Cup final results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X