Deepseek, செயற்கை சூரியன், 6ம் தலைமுறை போர் விமானங்கள்.. அமெரிக்காவை அடுத்தடுத்து அலறவிடும் சீனா!
பெய்ஜிங்: சீனா சமீபத்தில் அறிமுகப்படுத்திய டீப்சீக் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. டீப் சீக் மட்டுமின்றி, ஆறாம் தலைமுறை போர் விமானம், செயற்கை சூரியன், விண்வெளியில் புதிய சோதனைகள் என்று சீனாவின் கண்டுபிடிப்புகள் உலக நாடுகளுக்குக் கவலை அளிப்பதாகவே உள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
1950களில் அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய இரு வல்லரசு நாடுகள் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தன. அப்போது பலரும் அமெரிக்காவே தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து இருப்பதாகவும் சோவியத் யூனியன் பழமையான காலத்தில் இருப்பதாகவே நினைத்து வந்தனர்.

ஸ்புட்னிக் தருணம்:
அப்போது 1957ம் ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் சோவியத் யூனியன் ஸ்புட்னிக் செயற்கைக்கோளை ஏவியது. இதுதான் பூமியைச் சுற்றி வரும் முதல் செயற்கைக்கோள் ஆகும். இது அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. அமெரிக்காவை விடச் சிறந்த விஞ்ஞானிகள் சோவியத்தில் இருப்பதைக் காட்டுவதாகவும் இருந்தது.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் அதேபோன்ற "ஸ்புட்னிக் தருணம்" ஏற்பட்டுள்ளது. இந்த முறை அமெரிக்காவுக்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் அதிர்ச்சி கொடுத்து வருவது சீனா. அவர்கள் வெளியிட்டுள்ள டீப்சீக் என்ற ஏஐ உலகை மொத்தமாகப் புரட்டி போடுவதாக உள்ளது. இது ஏஐ துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்கிறது. தொழில்நுட்பம் மட்டுமின்றி ராணுவத்திலும் கூட சீனா அதிவேகமாகவே வளர்ந்து வருகிறது.
ஆறாம் தலைமுறை போர் விமானங்கள்"
கடந்த மாதம் சீனா தனது ஆறாம் தலைமுறை போர் விமானங்களைச் சோதித்தது உலக நாடுகளை மிரள வைப்பதாக இருந்தது. ஏஐ ஆட்டோமேஷன், அதிக பேலோட் வசதி, அதிக எரிபொருள் என்று பல வகையில் இது தொழில்நுட்ப ரீதியாக முன்னேறி உள்ளது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது உலக நாடுகளைச் சற்று மிரள வைத்துவிட்டது.
ஏனென்றால் அமெரிக்காவில் ஆறாம் தலைமுறை போர் விமானங்கள் இன்னும் ரெடியாகவில்லை. அங்கு 2030களில் தான் போர் விமானங்கள் ராணுவத்தில் பயன்பாட்டிற்கு வரும். இந்தியாவில் ஆறாம் தலைமுறை போர் விமானங்கள் இப்போது தான் டிசைன் மற்றும் டெவலப்மெண்ட் நிலையில் உள்ளது. ஆனால், சீனா எல்லாவற்றையும் விஞ்சும் வகையில் போர் விமானங்களை சோதனை செய்துவிட்டது.
விண்வெளி துறை
விண்வெளி துறையிலும் கூட சீனா இப்போது அமெரிக்காவுக்கு அடுத்து இரண்டாவது மேஜர் நாடாக உள்ளது. ரஷ்யாவை எல்லாம் சீனா எப்போதோ ஓவர்டேக் செய்துவிட்டது. அமெரிக்காவின் வர்த்தக ரீதியான விண்வெளி பயணங்களுக்குச் சீனா சீக்கிரமே சவால் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சந்திரனின் தொலைதூரப் பகுதியிலிருந்து பாறை மாதிரிகளைக் கூட வெற்றிகரமாகச் சீனா எடுத்து வந்திருந்தது. இந்த சாதனையைப் படைத்த முதல் நாடு சீனாவாகும். 2030க்குள் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை அமைக்கவும் சீனா நடவடிக்கை எடுத்து வருகிறது.
செயற்கை சூரியன்:
மேலும், அணுக்கரு இணைவு (nuclear fusion) மூலம் மின்சாரத்தைத் தயாரிக்கும் முயற்சியிலும் சீனா இறங்கியுள்ளது. ஈஸ்ட் - எக்ஸ்பெரிமெண்டல் அட்வான்ஸ்டு சூப்பர் கண்டக்டிங் டோகாமாக் என்ற ஒன்றில் சீன ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகிறார்கள். 'செயற்கை சூரியன்' என்று அழைக்கப்படும் இந்த ஃப்யூஷன் எனர்ஜி ரியாக்டரில் உருவான பிளாஸ்மா சுமார் 1,000 வினாடிகள் நீடித்துள்ளது. இதை அப்படியே தக்கவைக்க முடிந்தால் அணுக்கரு இணைவு மூலம் வெற்றிகரமாக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதிலும் உலக நாடுகளை விடச் சீனா முன்னணியில் உள்ளது.
ஏஐ துறை:
அதேபோல இப்போது ஏஐ துறையிலும் சீனா இப்போது உலக நாடுகளுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. சீனா உருவாக்கியுள்ள டீப்சீக் ஏஐ துறையில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதில் விஷயம் என்னவென்றால் அமெரிக்கா உருவாக்கிய ஏஐ கருவிகளுக்குப் பல பில்லியன் டாலர் செலவிட வேண்டி இருந்தது. ஆனால், சீனா இதை வெறும் 6 மில்லியன் டாலர் செலவில் முடித்துவிட்டது. இதை இயக்கவும் கூட 27 மடங்கு குறைவாகவே செலவாகிறது.
இப்படி பல்வேறு துறைகளிலும் சீனா ஆதிக்கம் செலுத்தும் வகையில் வளர்ந்து வருகிறது. சீனாவில் மக்களாட்சி இல்லாமல் சர்வாதிகாரம் உள்ள நிலையில், அது உலக நாடுகளுக்குக் கவலை அளிப்பதாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications