இந்தியாவுக்கு பின்னடைவு..மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்கிய டொமினிகா நீதிமன்றம்..ஆண்டிகுவா செல்லஅனுமதி
டொமினிகா: மோசடி மன்னன் மெகுல் சோக்சியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு டொமினிகா நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவர் சிகிச்சை பெற ஆண்டிகுவா நாட்டிற்குத் திரும்ப முடியும்.
இந்தியாவின் முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயைக் கடனாகப் பெற்றார்.
இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டொமினிகாவில் கைது
இந்த வழக்கின் விசாரணையின்போதே மெகுல் சோக்சி, கரிபியன் நாடுகளில் ஒன்றான ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று, தப்பியோடிவிட்டார். இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான இவர், கடந்த மே மாதம் ஆன்டிகுவாவில் இருந்து கியூபாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றார். அப்போது மெகுல் சோக்சி டொமினிகா நாட்டில் கைது செய்யப்பட்டார். அவரை டெமினிகா நாட்டிலிருந்து நேரடியாக நாடு கடத்த இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது.

ஜாமீன்
இருப்பினும், மெகுல் சோக்சியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், இப்போது டொமினிகா நாட்டிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உடல்நிலை பாதிப்பு காரணமாகச் சிகிச்சை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி மெகுல் சோக்சி ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த டொமினிகா நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்தார்.

ஆண்டிகுவா செல்லலாம்
விஜய் அகர்வால் மேலும் கூறுகையில், "டொமினிகா நீதிமன்றம் கடைசியாக நீதியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவரின் சொந்த விருப்பப்படி மருத்துவச் சிகிச்சை பெறுவது அடிப்படை சட்ட உரிமை" என்று அவர் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பின் மூலம் இனி மெகுல் சோக்சி ஆன்டிகுவா நாட்டிற்குச் சென்று சிகிச்சை பெறலாம்.

திரும்ப வேண்டும்
அதேநேரம் சிகிச்சை முடிந்த பிறகு டொமினிகா திரும்ப வேண்டும் என்றும் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்தது தொடர்பான வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஜாமீன் தொகையாக இந்திய மதிப்பில் ரூ 2.75 லட்சத்தைச் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அதிகாரிகளே மெகுல் சோக்சியை சட்டவிரோதமான கடத்தியதாக அவரது வழக்கறிஞர்கள் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications