For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹிலாரி க்ளிண்டனின் தேர்தல் வியூகம்: 250 ஆண்டுகால அமெரிக்க வரலாறு மாறுமா?

By Shankar
Google Oneindia Tamil News

வாஷிங்டன் (யு.எஸ்) : இன்று (அக்டோபர் 26) ஹிலாரி க்ளிண்டனின் 68 வது பிறந்த நாளை அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்பாளர்களை முடிவு செய்யும் உட்கட்சி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஜனநாயகக் கட்சியின் முதல் விவாதம் முடிந்து விட்டது. ஹிலாரி க்ளிண்டனின் ஆக்கிரமிப்பாக மாறிவிட்ட இந்த விவாதத்தில், எதிர்க்கட்சியை தாக்குவதிலேயே அவர் முழு கவனம் செலுத்தினார். கிடைத்த கேப்பில் எல்லாம் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்பை விளாசினார்.

ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஹிலாரிதான் என்று கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அவருடன் ஹிஸ்பானிக் இனத்தைச் சார்ந்த இளம் தலைவர் ஹூலியன் காஸ்ட்ரோ துணை அதிபர் பதவிக்கு போட்டியிடக்கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

Hillary Clinton's new election plan

11 மணி நேரம் பெங்காஸி விசாரணை

வலுவான நிலையில் இருக்கும் ஹிலாரி க்ளிண்டனை தேர்தல் களத்திலிருந்து எப்படியாவது விரட்ட வேண்டும், அவர் மீது ஏதாவது குற்றச்சாட்டு கூறி மக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்க வேண்டும் என்று குடியரசுக் கட்சியினர் படாத பாடு படுகின்றனர்.

இமெயில் சர்ச்சையைக் கொண்டு வந்தனர், தனிப்பட்ட இமெயில் சர்வர் உபயோகித்ததை அவர் ஒப்புக்கொண்டார். மக்கள் இதை பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை.

பெங்காஸி விவகாரத்தில் அவருக்கு களங்கம் ஏற்படுத்தி சிக்க வைக்க குடியரசுக் கட்சியினர் முயன்று வருகின்றனர். இது தொடர்பாக, கடந்த வாரம் 11 மணி நேரம் பாராளுமன்றக் குழுவிடம் ஹிலரி நேரடி வாக்குமுலம் கொடுத்தார். இதன் பிறகு அவருடைய செல்வாக்கு மேலும் அதிகரித்திருப்பதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பெண்களின் அமோக ஆதரவு

இரு நூற்றைம்பது ஆண்டுகால அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவரையிலும் பெண் அதிபர் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை.

பெண் இனத்தை பெருமைப்படுத்தும் இந்த வாய்ப்பை தனக்குத் தரவேண்டும் என்ற ஹிலாரியின் வேண்டுகோளுக்கு பெண்கள் மத்தியில் அமோக ஆதரவு பெருகியுள்ளது. தீவிர இடது சாரி அல்லாத ஹிலாரிக்கு, குடியரசுக் கட்சியின் பெண்கள் வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Hillary Clinton's new election plan

ஜனநாயகக் கட்சியின் தீவிர ஆதரவாளர்கள்

அதிபர் ஒபாமாவுடன் இணைந்து வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றியது, ஒபாமாவுக்காக பில் க்ளிண்டனின் அயராத தேர்தல் பணி, இரு குடும்பத்தினருக்குமான நட்பு போன்ற காரணங்களினால், ஒபாமாவின் ஆதரவு ஹிலாரிக்கு உறுதியாகியுள்ளது.

துணை அதிபர் ஜோ பைடன், ஜனநாயகக் கட்சிக்குள் ஹிலரிக்கு கடும் போட்டியை கொடுத்திருப்பார். மகன் இறந்த சோகத்தினால் சற்று தயக்கம் காட்டியவரை, போட்டியிட வேண்டாம் என்று ஒபாமா கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வந்துள்ளன. பைடனும் தான் போட்டியிடவில்லை என்று தெரிவித்து விட்டார். இது ஹிலாரிக்காக மறைமுகமாக ஒபாமா செய்த உதவி என்று கருதப்படுகிறது.

ஒபாமாவின் ஆதரவு மூலம் கருப்பின மக்களின் ஆதரவும் பெருமளவில் கிடைக்க வாய்ப்புள்ளது. பொதுவாகவே கருப்பின மக்கள் ஜனநாயகக் கட்சியினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றியை நிர்ணயிக்கும் ஹிஸ்பானிக் வாக்குகள்

பெண்கள், கருப்பின மக்கள் தவிர, இளைஞர்கள் மற்றும் ஹிஸ்பானிக் (லத்தீன்) மக்களின் வாக்குகள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகின்றன. ஒபாமா இந்த நான்கு ஏரியாவிலும் கொடிகட்டிப் பறந்தார்.

2016 தேர்தலில் ஹிஸ்பானிக் வாக்குகளை பிரிப்பதற்கு ஜெப் புஷ்ஷும் மார்க்கோ ரூபியோவும் கை கோர்த்தாலும் ஆச்சரியமில்லை.

ஜெப் புஷ்ஷின் சிஷ்யரான மார்க்கோ ரூபியோ ஹிஸ்பானிக் இனத்தைச் சார்ந்தவர். ஃப்ளோரிடாவில் செல்வாக்கு மிக்கவர். ஜெப் புஷ் லத்தீன் மொழியில் சரளமாக பேசும் திறமை பெற்றவர். புஷ்ஷின் மனைவி ஹிஸ்பானிக் இனத்தைச் சார்ந்தவர்.
அதிபர் புஷ் - துணை அதிபர் ரூபியோ என்று காம்பினேஷனில் இணைந்து போட்டியிட்டால் ஹிஸ்பானிக் வாக்கு வங்கியில் ஹிலாரிக்கு சறுக்கல் நிச்சயம்.

Hillary Clinton's new election plan

கை கொடுப்பாரா ஹூலியன் காஸ்ட்ரோ?

ஹிஸ்பானிக் வாக்குகளை கவர அதே இனைத்தைச் சார்ந்த சான் அன்டோனியோ முன்னாள் மேயரும், ஒபாமா அமைச்சரவையில் வீடு மற்றும் நகர்ப்புற செயலாளராக பதவி வகிப்பவருமான ஹூலியன் காஸ்ட்ரோ சரியான தேர்வாக கருதப்படுகிறது.
குடியரசுக் கட்சியின் கோட்டையான டெக்சாஸின் சான் அன்டோனியோ நகரில் மூன்று தடவை மேயராக வெற்றி பெற்று, பல மாற்றங்களை செயல்படுத்தியவர். கடந்த அதிபர் தேர்தலின் ஜனநாயகக் கட்சி மாநாட்டில் இவர் ஓபாமாவுக்கு ஆதரவாக சிறப்புரை ஆற்றிய போது, நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

இளைஞர், ஹிஸ்பானிக் இனத்தைச் சார்ந்தவர், ஜனநாயக கட்சியின் வளர்ந்து வரும் தலைவர் என பன்முகம் கொண்ட ஹூலியன், ஹிலரியுடன் துணை அதிபர் வேட்பாளருக்கு சரியான தேர்வாக அமையும்.

ஹிலாரி - ஹூலியன் காம்பினேஷன் எப்படி இருக்கும்?

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் அதிபர் - துணை அதிபர் வேட்பாளர்கள் அவர்களுடைய கடைசி(குடும்ப) பெயர்களை இணைத்து டேக் லைன் போல் பரப்புரை செய்வார்கள். பராக் ஒபாமாவும் ஜோ பைடனும் 'ஒபாமா - பைடன் ஃபார் அமெரிக்கா' என்ற டேக் லைனில் போட்டியிட்டனர்.

க்ளிண்டன் என்றாலே பில் க்ளிண்டன் என்று ஆகி விட்டதால் ஹிலரி க்ளிண்டன் தனது முதல் பெயரை முன்னிறுத்தி ‘ஹிலாரி ஃபார் அமெரிக்கா' என்று பிரபலப்படுத்தி வருகிறார்.

ஹுலியன் காஸ்ட்ரோ துணை அதிபராக இணையும் பட்சத்தில் ‘ஹிலாரி - ஹூலியன்' என்ற காம்பினேஷனில் போட்டியிடக்கூடும்.

முன்னதாக டெக்சாஸில் இருந்து ஜான் எஃப் கென்னடியுடன் துணை அதிபராக போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சியின் லிண்டன் பி ஜான்சன், அடுத்து அதிபராகவும் வெற்றி பெற்றார் என்பது நினைவு கூறத்தக்கது,

2016 தேர்தல் களம் எப்படி இருக்கும்?

குடியரசுக் கட்சியில் தற்போது டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருப்பது போல் தெரிந்தாலும், நிலைமை மாறும் என நம்பப்படுகிறது. அனுபவசாலியும் நடுநிலை வலதுசாரியுமான ஜெப் புஷ் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக தெரிகிறார். அவருடன் மார்க்கோ ரூபியோ துணை அதிபராக இணையும் பட்சத்தில், 'சபாஷ் சரியான போட்டி' என்று கூறும் நிலையில் தேர்தல் களம் அமையும்.

ஹிலாரி - ஜெப் புஷ் இருவருமே தீவிர இடது சாரி அல்லது தீவிர வலது சாரி நிலைப்பாடு இல்லாமல் மத்திய நிலைப்பாடு கொண்டவர்கள்.

முக்கிய மாநிலமான ஃப்ளோரிடாவை ஜெப் புஷ் கைப்பற்றக் கூடும். அதே சமயத்தில், ஹூலியன் ஹிலாரியுடன் கைக்கோர்க்கும் போது குடியரசுக் கட்சியின் கோட்டையான டெக்சாஸ் ஹிலாரி வசம் வருவதற்கும் வாய்ப்புள்ளது.

'ரெட் ஸ்டேட்' ஆன டெக்சாஸ் ஃப்ளோரிடாவைப் போல் 'பர்ப்பிள் ஸ்டேட்' ஆக மாறினால் ஆச்சரியமில்லை!

English summary
US reports say that the new election plans of Hillary Clinton will create a new history in US politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X