
ஒரே ஒரு கொசுக்கடி.. ஒரேயடியாக கோமாவில் படுத்த இளைஞர்! 30 ஆப்ரேஷனா வேறு.. ஜாக்கிரதையாக இருங்க மக்களே
பெர்லின்: கோமாவில் விழுந்த 27 வயதான இளைஞர் ஒருவருக்கு 30 ஆப்ரேஷன்கள் செய்யப்பட்டு, மோசமான உடல்நிலை பாதிப்பில் உள்ளார். இது அத்தனைக்கும் காரணம் ஒரு சிறு கொசு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா!
உலகில் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் இருக்கும் உயிரினம் என்றால் அது கொசு தான். அண்டார்டிகா தவிரக் கிட்ட தட்ட அனைத்து கண்டங்களிலும் இருக்கும் கொசு மனிதர்களுக்குப் பெரிய இம்சையாகவே இருக்கிறது.
சிக்குன்குனியா வைரஸ், டெங்கு, மலேரியா எனப் பல கொடூரமான நோய்களையும் கூட இந்த கொசுக்களே பரப்புகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் இது குறித்து விழிப்புணர்வு இல்லாமல் கொசுக்கள் வளருவது போன்ற சுகாதாரமற்ற சூழலை உருவாக்கி வைக்கிறார்கள்.
ஒரு சிலரை மட்டும் கொசு அதிகம் கடிக்குதே.. ஏன் என்று யோசிச்சு இருக்கீங்களா? ஆய்வு சொல்லும் தகவல் இதோ

கொசு
வெறும் ஒரு கொசுவால் நமக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று நீங்கள் கேட்கலாம். உண்மையில் ஒற்றை கொசு ஜெர்மனியில் இந்த இளைஞரின் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே புரட்டிப் போட்டுள்ளது. கொசுக்கள் டெங்கு உள்ளிட்ட வைரஸ்கள் சுமந்தே செல்கிறது. மேலும், கொசுக்கள் கடித்தால் மோசமான உடல்நிலை பாதிப்பும் ஏற்படும். ஒரு சிறு கொசுக் கடியால் ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோமா நிலைக்கே சென்றுள்ளார். மேலும், அவரது உயிரைக் காக்க சுமார் 30 ஆப்ரேஷன்கள் செய்ய வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனி
ஜெர்மனி நாட்டின் ரோடர்மார்க் பகுதியில் வசிக்கும் 27 வயதான இளைஞர் செபாஸ்டியன் ரோட்ஸ்கே. கடந்த 2021ஆம் ஆண்டு கோடைக் காலத்தில் இவரை ஆசியப் புலி கொசு (Asian tiger mosquito) ஒன்று கடித்துள்ளது. அதன் பிறகு இவருக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. வெறும் காய்ச்சலாக இருக்கும்.. சில நாட்களில் சரியாகிவிடும் என்றே செபாஸ்டியன் முதலில் நினைத்துள்ளார். ஆனால், இது வெறும் தொடக்கம் தான் என்பது அவருக்கு அப்போது தெரியவில்லை. இதன் பிறகு அவரது உடல்நிலையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

கோமா
இதனால் அவர் தனது இரண்டு கால் விரல்களைப் பகுதியளவு இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் அவர் கோமா நிலைக்கும் தள்ளப்பட்டார். சுமார் 30 ஆப்ரேஷன்களை செய்த அந்த இளைஞரை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். அந்த இளைஞரின் ரத்தத்தில் விஷம் கலந்ததால், கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரலும் செயலிழந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து அவரது உடல்நிலை பாதிப்புகள் மோசமாகியுள்ளது. குறிப்பாக அவரது தொடையில் இருந்த தோலையும் ஆப்ரேஷன் மூலம் நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆப்ரேஷன்
அவரது தொடையில் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஏனென்றால் வீரியம் மிக்க பாக்டீரியாக்கள் அவரது இடது தொடையின் திசுக்களைப் பாதிவரை சாப்பிட்டுவிட்டது. இதனால் அவர் உயிர் பிழைக்கவே வாய்ப்புகள் குறைவு என்று கூறியுள்ளனர். இருப்பினும், மருத்துவர்கள் எடுத்த தொடர் முயற்சியில் அந்த நபர் வெற்றிகரமாக உயிர் பிழைத்தார். இது தொடர்பாக செபாஸ்டியன் ரோட்ஸ்கே கூறுகையில், "நான் வெளியூர் எங்கும் செல்லவில்லை. இங்கேயே தான் இருந்தேன். இங்கு எங்கோ தான் அந்த கொசு என்னைக் கடித்துள்ளது.

புலம்பல்
திடீரென வலி அதிகரிக்கத் தொடங்கியது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. நான் படுத்த படுக்கையாகிவிட்டேன், திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. சாப்பிடக் கூட முடியவில்லை, சீக்கிரம் சரியாகிவிடும் என்றே நினைத்தேன். உடலில் இருந்து அதிகப்படியான வேர்வை வெளியேறியது.. என் இடது தொடையில் ஒரு பெரிய சீழ் கட்டி உருவானது. எப்படியோ மருத்துவர்கள் கொடுத்த தீவிர சிகிச்சையால் நான் உயிர் பிழைத்தேன். ஆசியப் புலி கொசு கடித்ததே இதற்கு முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்போது தான் மான் மெல்லக் குணமடைந்து வருகிறேன்" என்றார்.

காட்டுக் கொசு
இப்போதும் கூட செபாஸ்டியன் முழுமையாகக் குணமடையவில்லை. அவரால் அலுவலகத்திற்குச் சென்று வேலை பார்க்க முடிவதில்லை. இப்போதும் அவர் விடுப்பில் தான் உள்ளாராம். தனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பு மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் எனச் சொல்லும் இவர், கொசுக்களில் இருந்து மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். காடு கொசுக்கள் என்றும் அழைக்கப்படும் இந்த வகை ஆசியப் புலி கொசுக்கள், ஜிகா வைரஸ், மேற்கு நைல் வைரஸ், உள்ளிட்ட கடுமையான நோய்களையும் கூட எளிதாகப் பரப்பிவிடும்.