தன்னை கழற்றிவிட “வெளிநாட்டு சதி” பாகிஸ்தானுக்கு “ஃபாரின் பண்ட்” பகீர் புயலைக் கிளப்பும் இம்ரான் கான்
இஸ்லாமாபாத் : பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கு வெளிநாட்டு சதி நடப்பதாகவும் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பப்படுவதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
Recommended Video
நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்நோக்கியுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் 2018 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அவரது தலைமைக்கு மிகக் கடுமையான சவால் ஏற்பட்டது.

இம்ரான் கானுக்கு சிக்கல்
பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கையை தவறாக நிர்வகித்ததாக எதிர்க்கட்சிகளால் இம்ரான் மீது குற்றம் சாட்டப்பட்டது. நாட்டின் சக்திவாய்ந்த இராணுவத்தின் முக்கிய ஆதரவை இம்ரான்கான் இழந்துவிட்டார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் அவரது ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் பல எம்.பி.க்கள் அவருக்கு எதிராக திரும்பி விட்டது அவருக்கு சிக்கலை மேலும் ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு பணம்
இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், நாடு முழுவதிலுமிருந்து பேரணியாக வந்த ஆதரவாளர்கள் கலந்து கொண்ட பேரணியில் உரையாற்றிய போது, பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கு வெளிநாட்டு சதி நடப்பதாகவும் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பப்படுவதாக இம்ரான்கான் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

சமரசம் இல்லை
"எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் தேசிய நலன்களில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்," என்ற அவர் தனது குற்றச்சாட்டு குறித்து ஆதாரங்களையோ அல்லது விவரங்களை வழங்காமல் கூறினார். இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தான் அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. நேற்று நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கோர் கலந்து கொண்ட நிலையில், சுமார் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் அடுத்த வாரம் நகரத்தில் பேரணிகளை நடத்த திட்டமிட்டுள்ளதால், தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,

வேரூன்றியிருந்த ஊழல்
இம்ரான்கான் பாகிஸ்தானில் பல ஆண்டுகளாக வேரூன்றியிருந்த ஊழல் மற்றும் குடும்ப ஆட்சியை துடைத்து அழிப்பதாக உறுதியளித்த பின்னர் தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் தனது எதிரிகளுக்கு எதிரான வேட்டையில் ஈடுபட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சுதந்திரம் பெற்றதில் இருந்து பாகிஸ்தான் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய இரு கட்சிகளை தோற்கடித்து ஆட்சியை பிடித்த இம்ரான் நாட்டின் பொருளாதரத்தை மீட்க தவறியதால், அவருக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications