காதல் அழிவதில்லை.. சுனாமியில் மாயமான மனைவியை 11 ஆண்டுகளாக கடலில் தேடும் கணவர்.. ஜப்பானில் நெகிழ்ச்சி
டோக்கியோ: ஜப்பானில் 2011 சுனாமியில் சிக்கி மாயமான மனைவியை அவரது கணவர் 11வது ஆண்டாக கடலில் தேடி வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனிதர்கள் இடையேயான உறவுகளில் உன்னதமான ஒன்று கணவன்-மனைவி உறவு. ஆணோ, பெண்ணோ இருவரில் யாராக இருந்தாலும் தாய்-தந்தைக்கு நிகராக தங்களது துணையை கருதுவது தான் இதற்கு காரணம்.
இந்நிலையில் தான் மனைவி மீது கொண்ட பாசத்தால் அவரது உடலை கணவர் ஒருவர் 11 ஆண்டுகளாக தேடி வரும் சம்பவம் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. அதன்விபரம் வருமாறு:

2011 சுனாமி
ஜப்பானில் கடந்த 2011 மார்ச் 11ம் தேதி கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுமார் 6 நிமிடங்கள் வரை நீடித்தது. ஜப்பானில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும். அதோடு 1900 காலக்கட்டம் முதல் உலகளவில் பதிவான மிகப்பெரிய 4வது நிலநடுக்கம் இதுவாகும். இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலில் திடீரென்று சுனாமி ஏற்பட்டது.

19,759 பேர் பலி
ராட்சத அலைகள் மேலேழுந்து கரையை நோக்கி சீறிப்பாய்ந்தன. 40.5 மீட்டர் உயரத்துக்கு அலைகள் மேல் எழுந்து வந்ததால் கடல் அருகே உள்ள குடியிருப்புகளில் கடல்நீர் புகுந்தது. மேலும் கடற்கரையில் இருந்தவர்கள் என ஏராளமானவர்களை ராட்சத அலை கடலுக்குள் இழுத்து சென்றது. இதில் மொத்தம் 19,759 பேர் பலியாகினர். மேலும் 2,500-க்கும் அதிகமானவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. இதனால் அவர்கள் அனைவரும் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த காலத்தில் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மாயமான மனைவி
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து உருவான சுனாமியில் ஜப்பானின் ஒனகோவா பகுதியில் வசித்து வந்த யூகே தகாமட்சு என்ற பெண் மாயமானர். இவரது கணவர் யசுவோ தகமாட்சு அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். மனைவி மாயமான நிலையில் பேரிடர் மீட்பு படையினருடன் சேர்ந்து யசுவோ தனது மனைவியை தீவிரமாக தேடினார். அனைத்து கடற்கரை பகுதியிலும் தீவிரமாக தேடினார். ஆனால் எங்கு தேடியும் அவரது மனைவி கிடைக்கவில்லை. மேலும் அவரது நிலைமை என்ன என்பது பற்றியும் தெரியவில்லை. இருப்பினும் துக்க சம்பவம் நடந்து 11 ஆண்டுகள் ஆன நிலையில் மனைவி யூகே தகாமட்சு இறந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

11 ஆண்டுகளாக தேடும் கணவர்
இந்நிலையில் தான் மனைவி யூகேவின் உடலை கண்டுப்பிடிக்க வேண்டும் என அவரது கணவரான 65 வயது நிரம்பிய யசுவோ முயன்று வருகிறார். சுனாமி அலை வந்த 2011 முதல் தற்போது வரை யசுவோ தனது மனைவியின் உடலை கடலில் தேடி வருகிறார். அதாவது நேரம் கிடைக்கும் போதெல்லாம் யசுவோ கடலில் குதித்து தனது மனைவியை 11 ஆண்டுகளாக தேடி வருகிறார். உரிய பாதுகாப்பு உடைகள் அணிந்து அவர் நடுக்கடலில் கூட குதித்து மனைவியின் உடலை தேடிவரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் அவருக்கு இன்னும் அவரது மனைவியின் உடல் கிடைக்கவில்லை. மனைவி யூகேவின் உடல் கிடைக்கும் வாய்ப்பு என்பது மிகமிக குறைவு என்ற போதிலும் கூட யசுவோ தனது முயற்சியை கைவிடாமல் மனைவியை தொடர்ந்து தேடி வருகிறார்.

சாகும் வரை தேடுவேன்
இதுபற்றி யசுவோ கூறுகையில், ‛‛பேரிடர் நடந்த பிறகு எனது மனைவியின் செல்போன் உள்பட சில உடைமைகள் கிடைத்தன. இதனால் எனது மனைவியும் கிடைப்பாள் என நினைத்தேன். ஆனால் இன்று வரை கிடைக்கவில்லை. நான் எனது மனைவியின் உடலை எப்படியும் கண்டுப்பிடிப்பேன். சுனாமி வந்தபிறகு 2 ஆண்டுகள் எனது மனைவியை கடற்கரை உள்ளிட்ட நிலப்பரப்புகளில் தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அதன்பிறகு 2013 முதல் கடலில் தேடி வருகிறேன். நான் சாகும்வரை மனைவியின் உடலை தொடர்ந்து தேடிவருகிறேன். நிச்சயம் என் தேடலுக்கு பலன் கிடைக்கும்'' என சோகம் கலந்த நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications