ஒரு மணி நேரம் நீண்ட உரையாடல்..தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்த ஜஸ்டின் ட்ரூடோ
ஒட்டாவா: கனடா நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி உதவுமாறு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைப்பேசி வழியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்களின் கொரோனா தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் புனேவிலுள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இந்தியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலில் தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது.
இந்தத் தடை கடந்த மாதம் விலக்கிக் கொள்ளப்பட்டது. தற்போது தடுப்பூசி ஏற்றுமதி பணிகளை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்பார்வை செய்து வருகிறது. கடந்த மாதம் பல்வேறு நாடுகளுக்கும் நட்பு ரீதியாகவும் வணிக ரீதியாகவும் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

பட்டியலில் கனடா இல்லை
இந்நிலையில், இந்த மாதம் சுமார் 2.4 கோடி தடுப்பூசி டோஸ்களை சவுதி அரேபியா, பிரேசில், மியான்மர், கத்தார் உள்ளிட்ட 25 நாடுகளுக்கு வணிக ரீதியாக ஏற்றுமதி செய்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று அனுமதி அளித்திருந்தது. ஆனால், இந்தப் பட்டியலில் கனடா இல்லை. கனடா தனக்குத் தேவையான கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய முடியாமல் திணறிவருகிறது. இதனால் ஜஸ்டின் ட்ரூடோ அரசு பெரும் அழுத்தத்தில் உள்ளது.

பிரதமர்கள் பேச்சு
இந்நிலையில், கனடா நாட்டிற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்கி உதவுமாறு அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தொலைப்பேசி வழியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "கனடா கோரிய கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதற்கு இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அவருக்கு உறுதியளித்தேன். காலநிலை மாற்றம், சர்வதேச பொருளாதார மீட்பு திட்டங்களிலும் இரு நாடுகளும் ஒத்துழைப்பை அளிக்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

சிறப்பான கலந்துரையாடல்
இரு நாட்டு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் வரை தொலைப்பேசியில் பேசிக்கொண்டதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள அவர், மோடியிடம் தடுப்பூசியைக் கோரினார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகளவில் தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் இந்தியா, சர்வதேச அளவில் தடுப்பூசி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்

விவசாயிகள் போராட்டம்
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த தொலைப்பேசி உரையாடல் நல்ல முறையிலேயே சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் தலைநகரில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார். அப்போது முதலே இரு நாடுகளுக்கும் சலசலப்பு ஏற்பட்டது.