Exclusive: ஆப்கனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் வெளியுறவுத்துறை தாமதம்.. கலங்கடிக்கும் நிலவரம்
காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மற்ற நாடுகள், விரைவாக தங்கள் குடிமக்களை தாயகம் அழைத்துச் சென்ற நிலையில், மத்திய அரசு இந்த விஷயத்தில் ரொம்பவே தாமதமாக செயல்படுகிறது என்ற குமுறல்கள், அங்கே, சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களிடமிருந்து எழுகின்றன.
Recommended Video
ஆப்கானிஸ்தான் முழுக்க தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. காபூல் நகர விமான நிலையத்தில் மட்டும் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அந்த பகுதி மட்டும், சர்வதேச நாட்டு வீரர்களின் கட்டுப்பாட்டில் (அதிகாரப்பூர்வமில்லாமல்) இருக்கிறது. அதுவும் கூட எத்தனை நாட்கள் என்று தெரியாது.
எப்போது, வேண்டுமானாலும் அமெரிக்கப் படைகள் கிளம்பி சென்று விடக்கூடும் என்ற நிலை அங்கே, உள்ளது. இந்த நிலையில்தான் ஆப்கானிஸ்தான் நாட்டின் பூர்வ குடிமக்கள் கணிசமானோர் கூட தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துவிட்டதால் கிடைத்த விமானங்களில் ஏறி வேறு நாடுகளுக்கு தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

அத்துமீறல்கள்
தமிழகம் உள்ளிட்ட இந்தியாவை சேர்ந்த பலரும் பணி நிமித்தமாக சென்று இப்போது ஆப்கானிஸ்தானில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். அமைதியான முறையில் ஆட்சி நடத்த விரும்புகிறோம் என்று தாலிபான்கள் தெரிவித்தாலும் கூட முந்தைய அவர்களின் நடவடிக்கைகளை மனதில் வைத்து, மற்றும் தற்போது ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் தாலிபான்கள் நடத்துவதாக கூறப்படும் சில அத்துமீறல் சம்பவங்களை அறிந்துகொண்டு மிகவும் பதட்டத்தில் உள்ளனர் இந்தியர்கள்.

மத்திய அரசிடம் வேகம் தேவை
இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் சிக்கிக் கொண்டிருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்டு பேசினோம். அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே, பிற நாடுகளை சேர்ந்தவர்களை, அவர்கள் நாட்டு அரசாங்கத்தால் பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்திய அரசு எங்களுக்கு முன்னுரிமை தரவில்லை. தூதரக மட்டத்திலான விஐபிகள் உள்ளிட்டோரை இந்தியா அழைத்துச் செல்லப்படுவதில் முன்னுரிமை காட்டப்பட்டது. பிற மக்களுக்கு போதிய உதவிகள் செய்யப்படவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்த இந்திய தூதரகம் மூடப்பட்டுவிட்டது. டெல்லி தூதரகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினால் பல நேரங்களில் பிஸி என்று வருகிறது. சில நேரங்களில் அதிகாரிகள் எடுத்து இந்தி மொழியில் பேசுகிறார்கள். பிறகு அவர்களும் உதவிக்கு வருவது கிடையாது என்று ஆதங்கமாக தெரிவித்தார்.

காலக்கெடு இல்லையே
இலங்கை போன்ற சிறிய நாடுகள் கூட அவர்கள் நாட்டு குடிமக்களை பத்திரமாக அழைத்துச் சென்றுவிட்டனர் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தூதரக வட்டாரத்தில் விசாரித்தபோது, கண்டிப்பாக அனைவரையும் மீட்போம் என்று தெரிவித்தனர். இருப்பினும் எப்போது மீட்பார்கள் என்ற ஒரு காலக்கெடு இல்லாத காரணத்தால் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சிக்கிக்கொண்டு இருக்கக்கூடிய மக்கள் அச்சத்தோடு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் அமெரிக்க படைகளின் உதவியோடு குவைத், கத்தார் போன்ற நாடுகளுக்கு விமானங்களில் சென்றிருக்கிறார்கள். அவர்களை அங்கு வைத்து எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பிரிக்கப்பட்டு அவரவர் நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

உதவும் அமெரிக்கா
வளைகுடா நாடுகளிலிருந்து டெல்லி வரும் விமானத்தில், அவர்கள் பயணிப்பதற்கு ஆகும் பயண டிக்கெட் செலவைக் கூட அமெரிக்க ராணுவம் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்று வளைகுடாவில் அமெரிக்க பாதுகாப்பில் இருக்கும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் "ஒன் இந்தியா தமிழ்" இணைய தளத்திடம் தகவலை பகிர்ந்து கொண்டார். மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆப்கானிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த ஒருவர்கூட சிக்கிக்கொண்டு இருக்காத நிலையை உருவாக்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications