தெற்கு மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்- 7.1 ரிக்டர் நிலநடுக்கத்தால் பெரும் பதட்டம்!
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவின் தென் பகுதியிலும், மத்திய அமெரிக்காவிலும் பசிபிக் கடலோரத்தில் இன்று மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் இது 7.1 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க நிலவியல் கழகத்தின் செய்திக்குறிப்பு கூறுகையில், உள்ளூர் நேரப்படி காலை 7.23 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மெக்சிகோ - கெளதமாலாவின் எல்லைப் பகுதியில் உள்ள பியூர்டோ மாடிரோ நகருக்கு அருகே வட கிழக்கில் 8 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு தெற்கு மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, கெளதமாலா ஆகிய நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மெக்சிகோ நகரில் பல கட்டடங்கள், மின் கம்பங்கள் விழுந்துள்ளன. உயிரிழப்பு குறித்த விவரம் தெரியவில்லை. மெக்சிகோ நகரங்களான சியாபாஸ், டபாஸ்கோ ஆகிய நகரங்களில்தான் பாதிப்பு அதிகம் என்று கூறப்படுகிறது.
கெளதமாலா நாட்டின் மேற்குப் பகுதியில் முற்றிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
நிலப்பரப்பிலிருந்து 92.2 கிலோமீட்டர் கீழே நிலநடுக்கத்தின் மையம் இருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மெக்சிகோவில் நிலநடுக்கம் புதிதல்ல. மிக பயங்கரமான நிலநடுக்கங்கள் அந்த நாட்டை பலமுறை சீர்குலைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.