சவூதியை கலக்கும் “மெர்ஸ்” நோய் - ஒட்டகம் மூலம் பரவும் கொடுமை
ரியாத்: கடந்த 2012 ஆம் ஆண்டில் சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மெர்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகியதாக இதுவரை 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 17 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு 93 இறப்புகள் உட்பட ஆய்வுக்கூடத்தில் உறுதி செய்யப்பட்ட 243 வழக்குகள் பற்றி தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.
ஆரம்பத்தில் சவுதி அரேபியாவின் கிழக்குப் பகுதியில் மட்டும் காணப்பட்ட இந்த நோய் தற்போது பிற பகுதிகளிலும் பரவி வருகின்றது.
மெர்ஸ் நோய் தாக்கம்:
மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள இந்த நோய்த்தாக்கத்தால் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 81 ஐ தொட்டுள்ளது. ரியாத்தில் 73 வயது முதியவர் ஒருவரும், துறைமுக நகரமான ஜெட்டாவில் 54 வயதுடைய ஒருவரும் இறந்துள்ளதாக நேற்றைய அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
காரணம் தெரியவில்லை:
திடீரென நோய் அதிகரித்ததிற்கான காரணம் தெரியவில்லை என்று தொற்று நோய் விஞ்ஞான கமிட்டி உறுப்பினரும், சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உதவி செயலாளருமான டாக்டர் அப்துல்லா அல் அசிரி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு நிலவரம்:
சென்ற ஆண்டு இதே காலகட்டத்திலும் ,குளிர்கால முடிவிலும் இந்த நோய் அங்கு அதிகரித்திருந்ததாகவும் அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ ஊழியர்கள் பீதி:
ஜெட்டா பகுதிகளில் காணப்பட்ட இந்த நோய் தாக்கத்தினால் மருத்துவ ஊழியர்கள் பீதியடைந்து தற்காலிகமாக அரசு மருத்துவமனையின் அவசர உதவிப் பிரிவையே மூடியுள்ளனர்.
சுகாதார அமைச்சர் நீக்கம்:
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் அந்தப் பகுதிகளில் உள்ள பொதுமக்களிடையே அமைதியை ஏற்படுத்துவதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா அல் ரபையா அங்குள்ள மருத்துவமனைகளுக்கு விஜயம் செய்தார். இருப்பினும், நேற்று எந்தக் காரணமும் கூறாமல் அரசு அவரைப் பதவி நீக்கம் செய்துள்ளது.
தடுப்பு மருந்தே இல்லை:
ஆசியாக் கண்டத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டில் தோன்றி 8,273 பேர்களைத் தாக்கி அவர்களில் ஒன்பது சதவிகிதத்தினரின் மரணத்திற்குக் காரணமாக இருந்த சார்ஸ் நோயைவிட குறைவான நோய்த்தாக்கம் கொண்டது இது என்றபோதிலும் இதற்கான தடுப்புமருந்தை கண்டுபிடிக்க வல்லுனர்கள் இன்னமும் முயற்சித்து வருகின்றனர்.
ஒட்டகங்களின் நோய் இது:
ஒட்டகங்கள் மீது அசாதாரணமான விதத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக பொதுவாக இந்த நோய்த்தொற்று காணப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. இதன்மூலம் அவை மனிதர்களுக்கும் பரவியிருக்கலாம் என்பது வல்லுனர்களின் யூகமாகும்.