திரில்லர் நாயகன்.. ஜிகுஜிகு கால்களுக்கு சொந்தக்காரன்.. மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள்.. செம கொண்டாட்டம்
மைக்கேல் ஜாக்சன் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
சென்னை: உலகம் போற்றும் அசாத்திய கலைஞன் மைக்கேல் ஜாக்சனின் பிறந்த நாள் இன்று! இதனை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
பிறந்த 10 வருடத்திலேயே புயலென சுழன்று... இடியென பாடி தனக்கென ஒரு புதிய முத்திரையை பதித்தவர் மைக்கேல் ஜாக்சன். அவர் பாடி தயாரித்து வெளியிட்ட குறுந்தகடுகள் பூபாளமெங்கும் நிறைந்து கிடக்கிறது.

குறிப்பாக "திரில்லர்" என்ற குறுந்தகடு ஒரே நாளில் 10 கோடி எண்ணிக்கையில் விற்று வரலாறு படைத்தது. இந்த வரலாறு வேறு யாராலும் அவ்வளவு சீக்கிரம் உடைக்கப்படுமா என்பது சந்தேகம்தான்.
மைக்கேல் ஜாக்சன் முரண்பாடுகளால் முற்றுகையிடப்பட்டவர். கோடிக்கணக்கில் சம்பாதித்தார்... ஏழை, குழந்தைகள் மீதும் சிறுவர்கள் மீதும் இவருக்கு இருந்த அன்பையும் ஈடுபாட்டையும் சிலர் கொச்சைப்படுத்தி அதையே காரணமாக்கி கோடிக்கணக்கில் பணம் பிடுங்கிய சுயநலப் பேர்வழிகளும் உண்டு.
அவரது பிரேத பரிசோதனை பல உண்மைகளை உணர்த்தியது. உடலெங்கும் காயங்களின் வடுக்களும், சிராய்ப்புகளும் இருந்தன. பல்வேறு வகையான போதை மாத்திரைகளும், வலி நிவாரணிகளும் அவரை மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தன.
கறுப்பின சமூகத்தில் பிறந்த அவருக்கு போதிய கவனிப்பும், பராமரிப்பும் இல்லை.. ஆனால் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்கிற பிடிவாம்தான், அவரை பிரம்மாண்டத்துக்கு உயர்த்தியது.
உலகம் இவரை உண்மையான கலைஞராக ஏற்றுக் கொண்டது. மதம், நிறம், இனம் போன்ற எல்லா எல்லைக் கோடுகளையும் இவரது இசைவெள்ளம் உடைத்து நொறுக்கியது. புயலென சுழன்று பூமிப் பந்தையே வளைத்து போட்டது. ஆயினும் அவரை அரவணைத்து பக்குவப்படுத்தவும், நல்வழியில் நெறிப்படுத்தவும் யாருமே இல்லாமல் போனார்கள்.
விண்ணின் உச்சியை நோக்கி பயணித்து கொண்டிருந்தபோதே அவரது குடும்ப உறவுகளும், ரத்த சம்பந்தமும் சீர்கெட்டு போயின. 2 பெண்களை மணந்தும் அவரது தாம்பத்ய வாழ்க்கை தோல்வி அடைந்தது. குழந்தைகளை பெற்றும் அவற்றின் முழுமையான அன்பு அவருக்கு கிடைக்காமல் போயிற்று.
உலக மக்களை மிக அதிகமாக நேசித்தவர் மைக்கேல் ஜாக்சன். மரித்த பின்னரும் மைக்கேல் ஜாக்சன் இன்னமும் வாழ்கிறார்! ஆங்கில இலக்கியத்தில் ஷேக்ஸ்பியர் போவும், ஜீவிதமான ஓவியத்திற்கு பிகாசா போலவும், புயலை போல் பறந்து பறந்து பந்தாடிய புருஸ்லீ போலவும், மேற்கத்திய இசையின் முடிசூடா மன்னன் எல்விஸ் பிரெஸ்லி போலவும், மைக்கேல் ஜாக்சனும் மக்கள் மத்தியில் என்றுமே வாழ்வார்!












Click it and Unblock the Notifications