கலாச்சாரத்தை சீரழிப்பதாக புகார்.. இந்திய சினிமா, நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாக். நீதிமன்றம் தடை
இந்திய சினிமா மற்றும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைகாட்சிகளில் இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து இந்திய விமானப்படைகள் பாகிஸ்தான் பகுதியில் நுழைந்து அங்கிருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கி பதிலடி கொடுத்தன. இதையடுத்து இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் சவுத்ரி பாவத் உசேன், 'இந்திய சினிமாவை பாகிஸ்தான் மக்களும், சினிமா துறையும் புறக்கணிக்க வேண்டும், மேலும் இந்திய தயாரிப்பு விளம்பரங்களையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும்’ எனக் கூறினார்.

தடை:
இது தொடர்பான வழக்கு ஒன்றும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது அதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில், ‘பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளில் இந்திய சினிமாவையும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்ப தடை விதிக்கப்படுவதாக' நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம்:
ஏற்கனவே, கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, அந்நாட்டு மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்தது. அதே போல் வனொலிகளில் இந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறவும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் 2017-ம் ஆண்டு லாகூர் உயர்நீதிமன்றம் இந்த தடையை நீக்கி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு:
இதை எதிர்த்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பு ரத்து:
மனுவை விசாரித்த நீதிபதிகள் லாகூர் உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்து, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையை மீண்டும் அமல்படுத்தினர். அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார், "இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவை பாகிஸ்தானின் கலாசாரத்தை சீரழிக்கிறது" என காட்டமாக கூறினார்.

நீதிபதிகள் உத்தரவு:
இந்த வழக்கில் தான் தற்போது பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைகாட்சிகளில் இந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications