பாலஸ்தீனியர்களை அலற விடும் இஸ்ரேல்.. அதென்ன பாஸ்பரஸ் குண்டுகள்.. வீசினால் என்ன நடக்கும் தெரியுமா?
ஜெருசலேம்: ஹமாஸ் படைகளுக்கு எதிராக தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாக பாலஸ்தீனம் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் கடந்த 7ம் தேதி, காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் திடீரென தாக்குதலை தொடங்கினர்.

ஆபரேஷன் அல் அக்ஷா புயல் என்ற பெயரில் தாக்குதலை ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடங்கினர். இந்த தாக்குதலில் இஸ்ரேல் திக்கு முக்காடிப்போனது. ராக்கெட் மழை பொழிந்து ஒருபக்கம் தாக்குதல் என்றால் மற்றொரு பக்கம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி சரமாரி தாக்குதலை தொடுத்தனர். இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக போரை அறிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன் யாகு தாக்குதலை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
குண்டு மழை: இதையடுத்து, இஸ்ரேலின் போர் விமானங்கள் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்தது. இதனால் ஹமாஸ் - இஸ்ரேல் இடையேயான சண்டை உக்கிரம் அடைந்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசா நகரில் பொழிந்த குண்டு மழைகளால் காசாவில் உள்ள பல கட்டிடங்கள் தரை மட்டமாகின. இதனிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் தங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக துருக்கி உதவியை இஸ்ரேல் நாடியிருப்பதாகவும் துருக்கியும் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகள் நடத்திய பதில் தக்குதலில் பயங்கரவாதிகள் 400 பேர், பொதுமக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.
பலி எண்ணிக்கை அதிகரிப்பு: ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 1,600 ஐ கடந்துள்ளது. தாக்குதல்கள் தீவிரம் அடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. பாலஸ்தீன பகுதிகளில் இருந்து இதுவரை 1,20,000 மக்கள் வெளியேறியுள்ளனர். காசா பகுதியில் 1,00,000 ரிசர்வ் படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வெண் பாஸ்பரஸ் குண்டுகள்: அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகியுள்ளது. வடக்கு காசா உட்பட மக்கள் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குவதாக பாலஸ்தீனம் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன.
பாலஸ்தீனியர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றன. இந்த வெண் பாஸ்பரஸ் குண்டுகள் என்பது கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியவை. நெருப்பு மழை பொழிவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. விரைவில் தீப்பற்றும் ரசாயனமான வெண் பாஸ்பரஸ் காற்றில் படும் போது பயங்கரத்தை வெளிப்படுத்தும்.
போர்க்குற்றம்: சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது. மனிதர்களுக்கு ஆழ்ந்த தீக்காயத்தையும் ஏற்படுத்தும். வெண் பாஸ்பரஸ் குண்டுகளை போரில் பயன்படுத்த சர்வதேச நாடுகள் மத்தியில் தடை இருக்கிறது. எனவே, இதை பயன்படுத்துவது போர்க்குற்றம் ஆகும். கடந்த 1972 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவை பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தான் இஸ்ரேல், பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஸ்ரேல் மீது பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் வருவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக அதாவது கடந்த 2009- ஆம் ஆண்ட காசா முனையில் பாஸ்பரஸ் குண்டுகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு இஸ்ரேல் மீது விழுந்தது.












Click it and Unblock the Notifications