குழந்தைகள் உட்பட 28 பயணிகளுடன் சென்ற.. ரஷ்ய விமானம் திடீரென மாயம்.. தேடும் பணிகள் தீவிரம்
மாஸ்கோ: ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Recommended Video
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் ரஷ்ய விமானம் திடீரென மாயமாகியுள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஏ.என் -26 என்ற இந்த விமானத்தில் 28 பயணிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்பு துண்டிப்பு
தரையிறங்கும் சமயத்தில் விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த விமானத்தில் 28 பயணிகள் விமான குழுவைச் சேர்ந்த ஆறு பேர் என மொத்தம் 34 பேர் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளும் இருந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெளிவான தகவல் இல்லை
என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விமானம் கடலில் நொருங்கி விழுந்திருக்கலாம் என ஒரு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது பழனா நகரத்திற்கு அருகிலுள்ள பழைய நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் சென்றிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தேடும் பணி தீவிரம்
இதையடுத்து விமானத்தைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேடும் பணிகளில் இரண்டு ஹெலிகாப்படர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. விமானம் எங்கு இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டவுடன், அங்குச் செல்ல மீட்புப் படையினரும் தயார் நிலையில் உள்ளனர். விமானம் பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் சில மணி நேரங்களில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா
கடந்த காலங்களில் விமான விபத்துகள் அதிகம் நடைபெறும் ஒரு நாடாகவே ரஷ்யா இருந்துள்ளது. விமான விபத்துகள் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு விமான போக்குவரத்து விதிமுறைகளைக் கடந்த சில ஆண்டுகளாக மேம்படுத்தியது. இருப்பினும், மோசமான பராமரிப்பு பணிகள், பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக விமான விபத்துகள் நடப்பது அங்கு வாடிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications
