ஆரம்பம் அதிரடி.. "ஜி7".. குவாட் உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க வெளிநாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் மோடி
டோக்கியோ: ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜப்பான் செல்கிறார். ஜப்பானை தொடர்ந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் மோடி செல்கிறார்.
சர்வதேச அளவில் கனடா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து ஜி7 எனும் கட்டமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் வருடாந்திர மாநாடு இன்று (மே19) ஜப்பானில் தொடர்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் ஜப்பான் செல்கிறார்.

இந்த மாநாட்டில் உரம், உணவு, எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் உக்ரைன் பிரச்னை குறித்தும், இந்த பிரச்னையில் இந்தியா யார் பக்கம் நிற்கிறது என்பது குறித்தும் விவாதிக்கப்படும். அதனைத் தொடர்ந்து நடைபெறும் குவாட் மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறார் பிரதமர் மோடி. இதனையடுத்து பப்புவா நியூ கினியாவில் நடைபெறும் நிகழ்ச்சி என 40க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெவ்வேறு நாடுகளுக்கு செல்கிறார்.
இது குறித்து, "இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளதால், இந்த ஜி7 உச்சி மாநாட்டில் நான் பங்கேற்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. சர்வதேச நாடுகள் சந்திக்கும் பிரச்னைகள், அவற்றை எதிர்கொள்வதில் இருக்கும் சவால்கள் போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட இருக்கிறது. அதேபோல இந்த மாநாட்டில் பங்கேற்கும் தலைவர்களுடனும் நான் கலந்துரையாட இருக்கிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மேலும், "இந்த மாநாட்டை முடித்தவுடன் ஜப்பானிலிருந்து பப்புவா நியூ கினியாவின் போர்ட் மோர்ஸ்பிக்கு செல்கிறேன். இந்திய வரலாற்றில் இது முக்கியமான தருணமாகும். ஏனெனில் இதற்கு முன்னர் எந்த இந்திய பிரதமரும் பப்புவா நியூ கினியாவுக்கு சென்றதில்லை. மே 22ம் தேதி அங்கு ஜேம்ஸ் மராப்புடன் இணைந்து, இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் (FIPIC III உச்சிமாநாடு) 3வது உச்சி மாநாட்டை நடத்துகிறேன். இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தர இருக்கிற 14 பசிபிக் தீவகளின் தலைவர்களுக்கும் நான் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கிறேன்.
கடந்த 2014ம் ஆண்டு நான் முதன் முறையாக ஃபிஜிக்கு சென்றிருந்தபோது பசிபிக் தீவுகள் ஒத்துழைப்புக்கான மன்றத்தின் உச்சி மாநாடு தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு, உள்கட்டமைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும். இந்த மாநாடு மட்டுமல்லாது இதில் பங்கேற்கும் தலைவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடுகிறேன். அதேபோல பப்புவா நியூ கினியா கவர்னர் ஜெனரல் சர் பாப் தாடே, பிரதமர் மராபே ஆகியோருடனும் கலந்துரையாடுகிறேன்.
இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸ் அழைப்பின் பேரில் அந்நாட்டுக்கு செல்கிறேன். ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் டெல்லியில் இந்தியா-ஆஸ்திரேலியா வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. எனவே இந்த உரையாடலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த இந்த பயணம் உதவியாக இருக்கும். இந்த பயணத்தின் போது ஆஸ்திரேலிய தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் வணிகத் தலைவர்களுடன் கலந்துரையாடுகிறேன்" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications